வார்த்தை விளையாட்டு - 1
பசுபதி
உயிர், மெய், உயிர்மெய்
<><><><><><><><><><>
“ சார்! நான் ஆங்கிலத்தில் வேகமாகத் தட்டச்சுச் செய்யக் கணினியில் கற்றுக் கொள்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமோ?”
“ ஓ! தெரியுமே! உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ புதிதாகக் கற்றுக் கொண்டது போலத் தெரிகிறதே? ”
“ ஆமாம், சார், என் ஆசிரியர் மிகச் சுவையான சில வாக்கியங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வோரு வாக்கியத்திலும் 26 ஆங்கில எழுத்துகளும் இருந்ததே அவற்றின் விசேஷம். அதனால், தட்டச்சுச் செய்ய நல்ல பயிற்சியாகவும் இருந்தது; அதே சமயம், மிகச் சுவையாகவும் இருந்தது. ஆமாம், இதே மாதிரி தமிழில் வாக்கியங்கள் உண்டா?”
“ ஒவ்வொரு மொழிக்கும் உள்ள தனித்தன்மைகளை வைத்துத்தான் இம்மாதிரி சொல் விளையாட்டுகளை நாம் அணுக வேண்டும். சரி, ஒன்று செய்கிறேன்.
இந்த விளையாட்டை இரண்டு பகுதிகளில் பிரிக்கிறேன்.
“ ஆய்த எழுத்தை நீக்கி விட்டு, தமிழில் உயிரெழுத்துகள் 12 என்று கொண்டால், அவை: அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ . சரியா?”
“சரி!”
“ இந்தப் பன்னிரண்டு எழுத்துக்களோ, அவை உள்ள உயிர்மெய் எழுத்துகளோ வரும்படி, ஒரு அழகான வாக்கியமோ, சின்னக் கவிதையோ, குழந்தைகள் பாட்டோ, எழுத முயல்வது தான் இந்த ஆட்டத்தின் முதல் பகுதி.
நம் முயற்சிகள் குறுகக் குறுக அழகு அதிகம்! 12 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்! “
“ இதோ, என் முயற்சி. ஒரு காட்சி.
ஒரு பௌர்ணமி நாள்.
பூஞ்சோலை.
நீ எங்கே?
“ இம்மாதிரி, தமிழில் 18 மெய்யெழுத்துகள். க,ச,ட,த,ப,ற (வல்லினம்), ய,ர,ல,வ,ழ,ள (இடையினம்) ங,ஞ,ண,ந,ம,ன (மெல்லினம்). எல்லா மெய்யெழுத்துகளோ, அவை வரும் உயிர்மெய் எழுத்துகளோ வரும்படி ஒரு வாக்கியமோ, ஒரு சிறு கவிதையோ, ஒரு விளம்பரமோ எழுத முயல்வது இந்த ஆட்டத்தின் இரண்டாம் பகுதி. நம் முயற்சிகள் குறுகக் குறுக அழகு அதிகம்! 18 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்! “
“ இதோ, என் முயற்சி.. 22 எழுத்துகள் உள்ள ஒரு வாக்கியம்”
தமிழியலிசை ஞானம் பெற
நீ ஒரு கடவுளை வணங்கு.
“ சார், தமிழிலும் இம்மாதிரி சொல்லாட்டங்கள் விளையாடலாம் என்று பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”
~*~*<><><>*~*~