தமிழ்வாணன்

380 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
May 22, 2010, 1:43:32 PM5/22/10
to yAppulagam / யாப்புலகம்
மே 22. தமிழ்வாணன் பிறந்த நாள்.
 
 ஆம்,
1926-ஆம் ஆண்டு பிறந்தார். 10.11.1977 -இல் மறைந்தார்.
 
ஆனால், அவருக்குக் ‘கிழக்காசியப் பேரெழுத்தாளர்’ என்ற ஒரு புது பட்டம் சூட்டிய  ‘இலக்கிய பீடம்’ இதழின் ஆசிரியர் ‘விக்கிரமன்’ ஒரு கட்டுரையில் எழுதியது போல்,
 
 ” (அவர்)மறையவில்லை. அன்பர்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார். வாழ்ந்த குறைந்த காலத்திற்குள் விவேகானந்தரைப் போல், வள்ளலாரைப் போல், கல்கியைப் போல் மகத்தான சாதனை புரிந்து விட்டார்.” 
 
’கல்கண்டு’ இதழில் மட்டுமே தமிழ்வாணன் எழுதவில்லை. சாவியின் பரிந்துரைக்குப் பின்னர், ஆனந்தவிகடனில் ‘மணிமொழி, நீ என்னை மறந்து விடு” என்ற தொடரை எழுதினார். ‘அமுதசுரபி’யில் “ உன்மனம் காயோ பழமோ?” என்ற தொடரை எழுதினார்.
( இதனால் ம.பொ.சி அமுதசுரபியில் எழுதிவந்த இலக்கியத் தொடரை நிறுத்தி விட்டார் ! :-)) )
 
 
சாவி ‘தினமணி கதிர்’ ஆசிரியராக இருந்தபோது, ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தமிழ்வாணன் சொன்னது:
 
“ தமிழகத்தில் எழுத்தாளர்களிடையே உள்ளத்தில் மிகுந்து இருப்பது
பொறாமை தான். தான் எழுதி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பதை விட அவனை அமுக்குவது எப்படி என்பது தான் அதிகமான எண்ணமாக இருக்கிறது.
 
என் படத்தை என் பத்திரிகையில் தவிர வேறு யாரும் போடுவது கிடையாது. சாவி அவர்கள்தான் முதன் முதலாக என்னுடைய படத்தை ‘தினமணி கதிர்’ அட்டையில் போட்டார்.
 
அவர் ஒருவரால் தான் அப்படிச் செய்ய முடியும்.”
 
அண்மையில் ‘இலக்கிய பீடம்’ டிசம்பர் 2009 இதழின் அட்டையில்
தமிழ்வாணன் படத்தை வெளியிட்டிருந்தது.
 
தமிழ்வாணன் மகிழ்ந்திருப்பார்.
 
======
 --

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

--
You received this message because you are subscribed to the Google Groups "yAppulagam / யாப்புலகம்" group.
To post to this group, send email to yappu...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to yappulagam+...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/yappulagam?hl=ta.

Pas Pasupathy

unread,
May 23, 2010, 12:52:33 PM5/23/10
to yAppulagam / யாப்புலகம்
'கிழக்காசியப் பேரெழுத்தாளர்' - 1
 
கலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99)
இதழில்)  தமிழ்வாணனைப் பற்றி எழுதிய கட்டுரையின் முதல் பகுதியை ஒரு பிடிஎஃப் கோப்பாக இத்துடன் இணைத்திருக்கிறேன்.

2010/5/22 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
tv_vikraman_ip_dec99.1.pdf

Pas Pasupathy

unread,
May 23, 2010, 12:54:07 PM5/23/10
to yAppulagam / யாப்புலகம்
'கிழக்காசியப் பேரெழுத்தாளர்' -2

 
கலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99)
இதழில்)  தமிழ்வாணனைப் பற்றி எழுதிய கட்டுரையின் இரண்டாம் பகுதியை  ஒரு பிடிஎஃப் கோப்பாக இத்துடன் இணைத்திருக்கிறேன்.

2010/5/23 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
tv_vikraman_ip_dec99.2.pdf

Pas Pasupathy

unread,
Sep 28, 2011, 12:01:22 PM9/28/11
to yAppulagam / யாப்புலகம்
துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன்

First Published : 21 Nov 2010 01:02:00 AM IST

Last Updated : 28 Nov 2010 11:00:11 AM IST

நாற்பது, ஐம்பது ஏன் எழுபதுகளில்கூட பிள்ளைப் பிராயத்தினரை ஆவலுடன் படிக்கத் தூண்டிய பல்வேறு சிறுவர் இலக்கியம் படைத்தவர்களுள் தமிழ்வாணனை மறக்க முடியாது. நூறு, ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்குப் பத்திரிகைகள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டபோது ஆயிரம், பதினாயிரம் என்று பரபரப்புடன் படிக்கத் தூண்டியவர் தமிழ்வாணன்.

தேவகோட்டையும், காரைக்குடியும், செட்டிநாட்டுப் பல ஊர்களும் தமிழ்நாட்டுக்குத் தந்த பல செல்வங்களுள் படைப்பிலக்கியச் செல்வங்கள் மறக்க முடியாதவை. தேவகோட்டை தந்த எழுத்துச் செல்வங்களுள் மிக முக்கியமானவர் தமிழ்வாணன்.

1926-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி, லெ.லெட்சுமணன் செட்டியார் - பிச்சையம்மை ஆச்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் லெட்சுமணன். "தமிழ்வாணன்' என்ற பெயரைச் சூட்டியவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. என்று கூறுவர்.

எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்த "கல்கி'க்குப் பிறகு, செய்தி இதழால் புதிய வாசகர்களைக் கண்டெடுத்த சி.பா.ஆதித்தனாருக்குப் பிறகு, பேச்சாற்றலால் அறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்ததுபோன்று இளைஞர்களைக் கவர்ந்தவர் தமிழ்வாணன்.

யுத்த காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி காலணா, அரையணா, ஓரணா என்ற விலையில் தம்பி - தங்கைகளுக்காக வார, மாத இதழ்கள் வெளிவரத்தொடங்கின. அதன் ஆசிரியர்கள், "அண்ணன்', "மாமா' என்ற அடைமொழியுடன் வளரும் குருத்துகளிடையே படிக்கும் ஆவலைத் தூண்டினர்; வளர்த்தனர்.

"துணிவே துணை' என்ற கோஷத்தை முதன் முறையாக தாரக மந்திரமாக ஒலிக்க, தமிழ்வாணன் பத்திரிகையாளராகும் முயற்சியில் ஈடுபட்டார். திருச்சி "கிராம ஊழியன்' பத்திரிகையில் சேர்ந்தார். வல்லிக்கண்ணன் அந்தப் பத்திரிகையின் முதல் ஆசிரியர். தமிழ்வாணன் உதவி ஆசிரியர். முப்பது ரூபாய் சம்பளம். அங்குதான் பல எழுத்தாளர்கள் பழக்கமானார்கள். பிரபல எழுத்தாளர் நா.பிச்சமூர்த்தியைச் சந்தித்தார். அவருடைய எழுத்து நடை தமிழ்வாணனைக் கவர்ந்தது. கிராம ஊழியன் அதிபர் கிருஷ்ணசாமி செட்டியாரிடம் பிச்சமூர்த்தி தமிழ்வாணனை அறிமுகப்படுத்தினார்.

"தம்பி! எப்போதும் உன் எழுத்து எளிமையாக இருக்க வேண்டும். பின்னலான வாக்கியங்களை அறவே விட்டுவிடு, நீ ஒரு நாள் பிரபல எழுத்தாளராகி விடுவாய்'' என்று கூறினார்.

கிராம ஊழியன் ஆசிரியராய் சில மாதங்களில் பதவி உயர்வு பெற்றார். சென்னை வந்தார். எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாகவும், நல்ல நூல்கள் வெளியிடுவதற்கு வழிகாட்டியாக இருந்தவருமான சக்தி வை.கோவிந்தன் "சக்தி' என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார். அவருக்குப் புதிய புதிய வெளியீடுகளை வெளியிடுவதில் கொள்ளை ஆசை. அவர், "அணில்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகப் புதிய வார இதழ் தொடங்கினார். அதற்குத் தமிழ்வாணன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். என்ன துணிவு! தன் சொந்த வாழ்க்கைப் படிப்பினையால் உழைப்பே துணை என்ற மந்திரச் சொல்லை அறிமுகப்படுத்தினார். தன் அறிவாற்றலால் "அணில்' பரபரப்புடன் விற்குமாறு செய்தார். "அணில் அண்ணன்' அப்போதுதான் தோன்றினான்.

வானதி திருநாவுக்கரசு, தமிழ்வாணனின் உயிர் நண்பர் - பள்ளித் தோழர். இருவரும் கூட்டாகச் சேர்ந்து "ஜில்ஜில்' பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!'. அடுத்து ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தமிழ்வாணனால் எழுதப்பட்டு, நான்கணா விலையில் வெளியிடப்பட்டது. வெற்றிகரமாக விற்பனையானது. தொடர்ந்து "அல்வாத் துண்டு', "சுட்டுத் தள்ளு', "பயமா இருக்கே' என்ற பல தலைப்புகளில் நூல்கள் வெளிவந்தன.

தமிழ்வாணன் நூல்களின் அமோக விற்பனையைப் பார்த்து - பல பதிப்புகள் அச்சிடப்படுவதைக் கண்ட குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, தமிழ்வாணனைச் சந்தித்தார். தமிழ்வாணனுடைய பேச்சு, உற்சாகம், திட்டங்கள், சுறுசுறுப்பு எல்லாம் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்திருந்தது.

குமுதம் நிறுவனத்திலிருந்து "கல்கண்டு' என்ற புதிய வார இதழ்

தொடங்க எஸ்.ஏ.பி. முடிவு செய்தார். தமிழ்வாணனுடைய முழுப் பொறுப்பில் கல்கண்டு வெளிவரத் தொடங்கியது. முயற்சி, ஊக்கம், உழைப்பு எல்லாமே தமிழ்வாணன் பிரபலமாவதற்குக் காரணமாயின. கல்கண்டால் தமிழ்வாணன் புகழ், திறமை பிரபலமானதா அல்லது தமிழ்வாணனால் கல்கண்டு வார இதழைப் பல்லாயிரம் வாசகர்கள் படித்து அவர் ஆற்றலைப் புகழ்ந்தார்களா? என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது.

கேள்வி-பதில் பகுதி அவருடைய ஆற்றலுக்குச் சாட்சியாக விளங்கியது. கேள்வி-பதில் பகுதியில் தான் ஒரு சகலகலா வல்லவர் என்பதை நிலைநாட்டினார். சிரிக்க - சிந்திக்க - செயலாற்ற தமிழ்வாணன் பதில்களைப் படித்தார்கள். தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்களில் நடுநிலையான பதில்கள் இருக்கும்.

"மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட்ஸ்' என்று பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் மேதை கிரிதாரி பிரசாத் புகழ்ந்து கூறியதோடன்றி, ""என்னைப் பற்றித் தமிழகம் அன்று அறியவில்லை. அவர்தான் அறிமுகம் செய்தார்'' என்று கூறியதைவிட, தமிழ்வாணன் எழுத்து வலிமைக்கு வேறு சான்று வேண்டுமா?

தமிழ்வாணன் இருக்குமிடத்தில் கலகலப்புக்குக் குறைவிருக்காது. தமிழ்வாணன் பேச்சைக் கேட்கவே கூட்டம் கூடும். அவர் பேசிய பிறகு, சபையோர் கலகலவென்று சிரித்துக் களைத்த பிறகு யார் பேசினாலும் எடுபடாது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேச்சைக் கேட்பதற்காகவே ஏராளமானவர்கள் கூடுவார்கள். ஆனால், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் சொற்பொழிவாற்றிவிட்டு, வேறு அவசரப் பணி நிமித்தமாகச் செல்ல வேண்டியவர், தமிழ்வாணன் பேசத் தொடங்கியவுடன் அவர் பேச்சை ரசிப்பதற்காக அடிகளார் புறப்படாமல் இருந்துவிட்டார். ""குற்றாலத்து அருவி போன்ற பேச்சு! அற்புதமான எடுத்துக்காட்டுகள்! நகைச்சுவை! ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பேசினார். பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர் சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பு. தமிழ்வாணனுடைய அற்புதமான பேச்சுக்குப் பிறகு நாம் பேச விரும்பவில்லை. சுருக்கமாகக் கூறிப் பேச்சை முடித்துக் கொண்டேன்'' என்று அடிகளார் கூறியதில் மிகை இல்லை.

குழந்தைகள் பத்திரிகை, மாணவர்களுக்குப் பத்திரிகை, இளைஞர்களுக்குத் தனி இதழ் என்று கூறினால் "நமக்குப் பயன்படாது' என்று பலர் நினைக்கலாம். ஆனால், தமிழ்வாணன் எழுத்தைச் சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படிப்பார்கள்.

வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்ட தமிழ்வாணன், அருள்செல்வர் நா.மகாலிங்கத்தின் அன்புக்குப் பாத்திரமானவர். கைரேகை பார்ப்பதிலும் திறமை மிகுந்தவர் தமிழ்வாணன். ""பல ஆண்டுகளுக்கு முன்பு எனது கைரேகைப் பார்த்துக் கூறியது அப்படியே பலித்தது'' என்று நா.மகாலிங்கம் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வாணன் வித்தியாசமான எழுத்தாளர். எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்தார் என்றால், எழுத்தில் ஆழம் இருக்கும். தகவல் இருக்கும். மருத்துவம் முதல் அரசியல் வரை வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு "நறுக் நறுக்'கென்று விடை கிடைக்கும்.

தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்றெல்லாம் நூதன முறையில் வாசகர்கள் கவனத்தைத் துணிவுடன் ஈர்த்ததால் அவருக்குக் கர்வி என்ற பெயரும் உண்டு. அவர் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர்.

கோணி மூட்டைகளில் வரும் வாசகர் கேள்விகளுக்கு மளமளவென்று பதில் எழுதுவது சாதாரணச் செயலன்று. வேகமாக எழுதுவார்; ஒரே இரவில் முழு நாவலை எழுதும் ஆற்றல் படைத்தவர். கல்கண்டு வாரப் பதிப்பில் பல ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியராக இருந்த, அரசியல் தலைவர் முதல், சாதாரண வாசகர் வரை அனைவரது அன்பையும் பெற்ற தமிழ்வாணன், 1971-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி மாரடைப்பால், தமிழ் வாசகர் உலகை விட்டு மறைந்தார்.

அவரை என்றும் நினைக்கும் வகையில், அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை' அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன் ரவி தமிழ்வாணனும் கட்டிக்காத்து வளர்த்து வருகிறார்கள்.
=====
[ நன்றி: தினமணி ]


 
 
 
--

Pas Pasupathy

unread,
Sep 30, 2011, 1:11:58 PM9/30/11
to yAppulagam / யாப்புலகம்

தமிழ்வாணன் - மூட்டாத அடுப்பை மூட்டியவர்

ஜோதிர்லதா கிரிஜா


(“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு தீபாவளியன்று காலமானார். அவரது நினைவாக அவரை நன்கு அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று, கல்கண்டின் தற்போதைய ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் அதன் தீபாவளி இதழில் அதை வெளியிடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வரிசையில் வெளியான கட்டுரை கீழே வருகிறது.)

மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்

எங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையின் விளைவாக, என் இள வயதில், ஒரு நாள் அடுப்பு எரியாத சூழ்நிலை உருவாயிற்று. காலை பத்தரை மணி வரையிலும் மூட்டப்படாத அடுப்பை எரிய வைத்த பெருமை என் உடன் பிறவாச் சகோதரராக நான் கருதிய தமிழ்வாணன் அவர்களைச் சாரும்! இந்த உண்மை அவருக்கே தெரியாது!

இதைப் பற்றி விரிவாகச் சொல்லுவதற்கு முன்னால், கொஞ்சம் தன்வரலாற்றில் ஈடுபட வேண்டியதிருக்கிறது. வாசகர்கள் மன்னிக்க.

“குமுதம்” குடும்பத்துச் சிறுவர் இதழாகிய “ஜிங்லி”யில், திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களால் நான் அறிமுகம் செய்யப்பட்டேன். மாணவப் பருவத்தில் கதைகள் எழுதுவதில் என் அப்பாவுக்கு உடன்பாடில்லை. அடிக்கடி அவரிடம் திட்டுகள் வாங்கிவந்தேன். ஜிங்லி நின்ற பிறகு, அதுகாறும் மாதமிருமுறை இதழாக இருந்து வந்த கல்கண்டு வார இதழாக மாறியது. ஜிங்லி நின்று போனதில் என் அப்பாவுக்கு ரொம்பவே நிம்மதி. ‘இனிமேல் கதை எழுத மாட்டாய்தானே?”’ என்று சொல்லிச் சிரித்தார். ஆனால் நான் அவருக்குத் தெரியாமல் கல்கண்டுக்கு ஒரு கட்டுரையை எழுதி யனுப்பினேன். அதைத் திருப்பி யனுப்பிய தமிழ்வாணன் தனியாக ஒரு கடிதமும் எழுதினார். ‘அன்புள்ள தங்கைக்கு’ என்று தொடங்கிய அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எனக்குத் தலைகால் தெரியவில்லை. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

எனக்கு அண்ணன் இல்லை. நான்தான் மூத்தவள். என் தோழியரில் சிலர் தங்கள் அண்ணன்மார்களின் பிரதாபங்களை அளந்து மகிழும் போதெல்லாம் எனக்கு ஓர் அண்ணன் இல்லையே என்கிற ஏக்கம் என்னுள் கிளர்ந்ததுண்டு! தமிழ்வாணன் ‘அன்புள்ள தங்கைக்கு’ என்று தொடங்கியிருந்த கடிதத்தைப் பார்த்ததும் எனக்குத் தலைகால் தெரியாத மகிழ்ச்சி ஏற்பட்டதற்கு அதுதான் காரணம்!

குழந்தைகளின் ஆர்வங்களைத் தடுக்கும் எண்ண முடையவர் அல்லர் என் தகப்பனார். கதை எழுதுவதற்கான வயது இல்லை என்பதோடு, தாள்கள் வாங்குவது, தபால் செலவு இவற்றில் எல்லாம் நான் காசை வீணாக்குகிற அளவுக்கு எங்கள் குடும்பத்துப் பொருளாதார நிலை வளமாக இல்லை என்பதும் அதற்குக் காரணமாகும்.

தமிழ்வாணன், அந்தக் கடிதத்தில், என் கட்டுரையைத் திருப்பி யனுப்பி யுள்ளதாகவும், கட்டுரைகளுக்குப் பதில் கதைகள் எழுதி யனுப்புமாறும் குறிப்பிட்டிருந்தார். ‘உன்னால் முடியாததா? முயன்றுபார்’ என்று அவர் எழுதியிருந்த உற்சாகமூட்டும் சொற்கள் அன்றெல்லாம் என் காதுகளைச் சுற்றிச் சுற்றி ஒலித்தன. திரும்பிவந்த அந்தக் கட்டுரை தபால்காரரின் கையிலிருந்து நேரடியாய் என் அப்பாவின் கையில் கிடைத்துவிட, வழக்கம் போல் வசவு கிடைத்தது. எனினும் நான் சோர்வடையவில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் மூன்று கதைகளை எழுதி, என் தங்கை சரோஜாவின் உதவியுடன் தபாலில் அவற்றை யனுப்பினேன். அனுப்பியபின் ஒரு வாரம் கழிந்த நாள் தொடங்கி, தெருவில் தபால் காரர் குரல் கேட்கும் போது நாள்தோறும் அவளை அப்பாவுக்குத் தெரியாமல் வெளியே அனுப்பிவைப்பேன். கதை திரும்பி வந்திருப்பின் ஓசைப்படாமல் பெற்றுக்கொண்டு வருவதற்காகத்தான்!

ஆனால் அவை திரும்பிவரவில்லை. அவற்றைத் தமிழ்வாணன் கல்கண்டில் வெளியிட்டார். அதை அப்பாவுக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.

இது இப்படி இருக்க, ஒரு நாள் அம்மா வழக்கம் போல் அடுப்பு மூட்டிச் சமையலைத் தொடங்கவில்லை. அழுதுகொண்டு, கூடத்தின் ஓர் ஓரத்தில் படுத்திருந்தார். வீட்டில் மணியரிசி கூட இல்லை யென்றும், (ஓய்வு பெற்ற பள்ளியாசிரியரான) என் அப்பா படிப்புச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த பிள்ளைகள் மறு நாள்தான் சம்பளம் கொடுப்பார்கள் என்றும், அரிசி வாங்க அப்பாவிடம் காசில்லை என்றும் தெரிய வந்தது. யாரிடமும் கடன் கேட்க முடியாது என்று அப்பா மறுத்து விட்டதாகவும் அம்மா சொன்னார்.

அப்பா இரேழியில் படுத்தவாறு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தார். நாங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பத்தரை மணி வரையில் அடுப்பு மூட்ட முடியாத நிலை முதன் முதலாக அன்றுதான் ஏற்பட்டது. எனக்குத் ‘திக்’ என்றது

வீடே ஒரு மாதிரி இறுக்கமான அமைதியில் ஆழ்ந்திருந்தது. பத்தரை மணிக்கு மேல் தபால்காரர் வந்தார். அப்ப எழுந்து உட்கார்ந்தார்.

“பாப்பாவுக்கு மணி ஆர்டர் வந்திருக்கு, சார்!” என்ற தபால்காரர் கூடத்திலிருந்து எட்டிப் பார்த்த என்னை நோக்கிச் சிரித்துவிட்டு, “வாம்மா, பாப்பா. உனக்குத்தான் மணி ஆர்டர் வந்திருக்கு. வந்து கையெழுத்துப் போட்டு வங்கிக்க!” என்றார்.

கையெழுத்துப் போட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது என்னுள் பொங்கிய உணர்ச்சிகளை விவரிக்க எந்தச் சொல்லுக்கும் ஆற்றல் இல்லை! மூன்று கதைகளுக்குரிய சன்மானம் ஒன்பது ரூபாயில் பணவிடைக் கட்டணம் மூன்று அணாக்கள் போக மீதி எட்டு ரூபாய், பதிமூன்றணா அனுப்பப்படுவதாகக் கல்கண்டின் உதவி ஆசிரியர் ப.ச. சுந்தரம் கூப்பனில் குறிப்பிட்டிருந்தார்.

தபால்காரர் போனபின் அப்பாவிடம் எட்டு ரூபாய் கொடுத்து, “அரிசி வாங்கிண்டு வாங்கப்பா!” என்று நான் சொன்னதும் அப்பாவுக்கு அழுகை வந்துவிட்டது. அதற்கு முன்னால் அவர் கண் கலங்கி நான் கண்டதில்லை.

இப்படியாக எங்கள் வீட்டில் அடுப்பு எரிவது நின்று போகாது தடுத்ததோடு, கதை எழுதுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த என் அப்பாவின் வாய்க்குப் பூட்டும் போட்ட பெருமை தமிழ்வாணனுகு உண்டு!

கொஞ்ச நாள் கழித்து, என் அப்பாவழிப் பெரியம்மா (என் அப்பாவின் அண்ணன் மனைவியார்) என்னைத் தம்முடன் தாம் தம் மகன்களுடன் வாழ்ந்து வந்த ஐதராபாத்துக்கு அழைத்துச் சென்றார். தமிழ்நாட்டின் அளவுக்கு ஐதராபாத்தில் வேலை யில்லாத்திண்டாட்டம் இல்லை யென்றும், அங்கு எளிதாக எனக்கு வேலை கிடைக்கு மென்றும் கூறி என்னைக் கூட்டிச் சென்றார். என் அப்பா-அம்மாவின் பலத்த எதிர்ப்பை மீறிக்கொண்டு நான் அவருடன் சென்றேன். ஆனால், பெரியம்மா சொன்னது போல் வேலை கிடைப்பது எளிதாக இல்லை.

இதற்கிடையே, எங்கள் குடும்பத்து நபர் ஒருவரிடமிருந்து எனது ஐதராபாத் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. ‘என் புடைவைகள் எல்லாம் கிழிந்து விட்டன. இவ்வளவு கந்தலை உடுத்துக்கொண்டு வரக் கூடாதென்று பயிற்சிப் பள்ளியின் முதல்வர் என்னைக் கூப்பிட்டு எச்சரித்தார். ஒரு புடைவை வாங்க எனக்குப் பணம் அனுப்ப முடியுமா?” என்று கேட்டது அந்தக் கடிதம். இருபது ரூபாயாவது வேண்டுமே! (அந்நாளில் அச் சிறு தொகையில் நல்ல புடைவை வாங்கலாம்.) என்னிடம் இருந்ததெல்லாம் கைச் செலவுக்கென்று அம்மா கொடுத்து வைத்திருந்த பணத்தில் செலவானது போக மீதமிருந்த பத்து ரூபாய்தான். எனக்கு உடனே தமிழ்வாணனின் ஞாபகம்தான் வந்தது. அந்தக் கடிதத்தையே அவருக்கு அனுப்பி வைத்தேன் ‘பதினைந்து ரூபாய் கடனாக அனுப்பினால் உதவியாக இருக்கும். எனக்கு வேலை கிடைத்ததும் திருப்பிக் கொடுத்துவிடுவேன். ஆனால் மொத்தமாகக் கொடுக்க முடியாது. ஐந்து, ஐந்து ரூபாயாகத்தான் மூன்று தவணைகளில் தருவேன்” என்று என் கடிதத்தில் குறிப்பிட்டேன். (கடன் கேட்டதுப் போதாதென்று திருப்பித் தருவதில் நிபந்தனை வேறு.)

மறு தபாலில் பணவிடை வந்தது. கூப்பனில், ‘அன்புள்ள தங்கைக்கு. வாழ்த்துகள்’ எனும் வரிகள் மட்டுமே இருந்தன. . . . வேலை கிடைத்த பிறகு ஐந்து, ஐந்து ரூபாயாக அத்தொகையை மூன்று தவணைகளில் அவருக்குத் திருப்பி யனுப்பினேன்.

கொஞ்ச நாள் கழித்துச் சென்னைக்கு மாற்றல் கேட்டுக்கொண்டு வந்த பிறகு, செய்தியைத் தமிழ்வாணனுக்குத் தெரிவித்தேன். ஒரு நாள் அவரிடமிருந்து தொலை பேசி யழைப்பு வந்தது. தமது தி.நகர் முகவரிக்கு வரச் சொல்லிப் பணித்தார். சென்றேன். நிறைய வார இதழ்களில் தொடர்கதைகள் எழுதத் தமக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும், கல்கண்டின் எல்லாப் பக்கங்களையும் நிரப்புவதற்குத் தமக்கு இயலாதிருப்பதாகவும், எனவே வாராவாரம் நான் கதை எழுத வேண்டும் என்றும் பணித்தார். ஒரே நேரத்தில் ஐந்தாறு வார இதழ்களில் தொடர்கள் எழுதும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுக் கெல்லாம் தமிழ்வாணன்தான் முன்னோடி.

“உங்க வழக்கமான பேர்ல நீங்க வரிசையா எழுத முடியாது. பல புனை பெயர்கள் வச்சுக்கணும். இல்லாட்டி, வரிசையா உங்க கதைகளையே நான் போட்றதா எல்லாரும் நினைப்பாங்க. அதனாலதான்!” என்று சொல்லி, என் இணக்கத்தைப் பெற்ற பின், தொடர்ச்சியாய்ச் சில கதைகளைக் கல்கண்டில் வெளியிட்டார்.

ஒரு நாள், “ உங்களுக்குப் பிழைக்கத் தெரியில்லே. யாராரோ பெரிய பத்திரிகைகள்லே எழுதறாங்க. நீங்க ஏன் இன்னும் முன்னுக்கு வராமலே இருக்கீங்க? எல்லாரும் தமிழ்வாணன் இல்லேம்மா. பத்திரிகை அலுவலகங்களுக்கு ரெண்டொரு விசிட் அடிக்கணும். ஆசிரியர்களைச் சந்திக்கணும், இப்படி ஒதுங்கி இருக்கக் கூடாதும்மா. ரிசர்வ்டா இருக்காதீங்க.. .” என்று அறிவுரை கூறினார். கூடியவரையில், பிறமொழிச் சொற்களைத் தவிர்க்குமாறும் யோசனை சொன்னார்.

ஒரு தரம், பேச்சு வாக்கில், “ எனக்கு ரெண்டு பிள்ளைங்கம்மா. ரெண்டும் பாட்டி வீட்டுல வளருதுங்க. இங்க வச்சுக்கிட்டா தொல்லை. ‘குழலினிது, யாழினிது’ ங்கிறதெல்லாம் குறள் படிச்சு ரசிக்க மட்டுந்தான்!” என்று தமக்கே உரிய வெடிச் சிரிப்பைச் சிரித்தார் (லேனாவும் ரவியும் மன்னிக்க.)

அன்பும் பண்பும் மிக்க தமிழ்வாணன் மீது நான் வைத்திருந்த பாசம் அலாதியானது. உடன் பிறந்தால்தான் சகோதரன் என்பதில்லை என்பதை எனக்கு உணர்த்திய உறவு அது. கதைக்கு அவர் அனுப்பின சன்மானத்தால் எங்கள் மானம் பிழைத்தது பற்றி நான் அவருக்குச் சொன்னதில்லை. சொல்லத் தோன்றியதில்லை. சொல்லியிருந்திருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். கடிதம் எழுதி அவரது உதவியைப் பெற்றிருந்தவள்தானெனினும், நேருக்கு நேர் வறுமையைப் பறை சாற்ற விரும்பாத தன்மானம் தடுத்திருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதை ஒதுக்கிவிட்டு, நான் சுமாரான நிலைக்கு முன்னேறிய பிறகு சொல்லி யிருந்திருக்கலா மல்லவா? சொல்லியிருந்தால் மகிழ்ச்சி யடைந்திருப்பாரே! ஏனோ சொல்லாதிருந்து விட்டேன்.

தமிழ்வாணன் அவர்களே! என்னை மன்னியுங்கள்.

ஜோதிர்லதா கிரிஜா

[ நன்றி: திண்ணை }

Pas Pasupathy

unread,
Sep 30, 2011, 1:29:57 PM9/30/11
to yAppulagam / யாப்புலகம்
தமிழ்வாணனைப் பற்றி ...
 
புனிதன் 

நான் பத்திரிகைத் துறைக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரிதான்.
பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு எழுத்தில் ஆர்வம். குறிப்பாகக் கவிதைத் துறை. கி.ஆ.பெ., அவர்கள் 'தமிழ்நாடு' என்று ஓர் அரையணாப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் 'ஒட்டக் கூத்தன்' என்ற புனைப்பெயரில் எனது கவிதைகள் (மரபு) இடம் பெற்றன.
முருகு சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'பொன்னி'யில் பாரதிதாசன் பரம்பரை என்ற சங்கப் பலகை என் கவிதைக்கு இடமளித்திருக்கிறது.
நானாக இரண்டு மேடை நாடகங்கள் எழுதி, மேடையேற்றி நடித்தும் இருக்கிறேன்.
இத்தனையும் தெரிந்திருந்தும், என் தந்தையார் எனது எழுத்தார்வத்தின் மென்னியைத் திருகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு என்னைப் பொறியியல் துறையில் புகுந்தே ஆகவேண்டும் என்று. முதலில் கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில், எல்.டி.எம்.,மில் சேர்த்தார். அதை முடிக்கு முன், இரண்டாண்டு போதுமென்று இழுத்து வந்து அவரது விசைத் தறிக் கூடத்தை மேற்பார்க்க விட்டார்.
அப்போதும் என் கவனம் அந்த நாள் 'பிரசண்ட விகடன்,' 'ஆனந்த போதினி பத்திரிக்கைகளில் என் எழுத்தை அச்சேற்றி ஆனந்த படுவதிலேயே குறியாய் இருந்தது. விட்டாரா அப்பா?
முன்னாள் ராணுவத்தினர் தொழில் பயிற்சி முகாமாய் இருந்த ஐ.டி.ஐ., சிவிலியன்களுக்கு திறந்து விடப்படுவதாய் '51ல் செய்தி வர, அந்தக் கல்லூரியில் தொழில் பயிற்சி பெறும்படி சொன்னார். என்ன தொழில்?
'விண்ணப்பித்து வை. கிடைக்கிற தொழிலில் சேர்ந்து கொள்.'
விண்ணப்பித்தேன். துரதிர்ஷ்ட வசமாய் நான் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களில் நல்ல மார்க் எடுத்திருந்ததால், 'ரேடியோ மெக்கானிஸம்' துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு (ரூ.25) இடம் கிடைத்தது.
தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடை ராஜாஜி அவர்கள் குடியிருந்த பஸ்லுல்லா ரோடு வெட்டிக் கொண்டு செல்லும் அந்த மூலைத் தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்தது அன்றைய ஐ.டி.ஐ.,
நான் சென்னைக்கு வந்து சேர்ந்ததே அப்போதுதான். அதற்குப் பிறகு நான் என் சொந்த ஊரான தர்மபுரி வாசத்தை இழந்துவிட நேரும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.
தமிழ்வாணன் சீண்டல்
 
என் தோழர், குரு, வழிகாட்டி தமிழ்வாணன் 
உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் பிரம்மசாரி தமிழ்வாணன், தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த மெஸ்ஸில் ராயவரம் நடராசன் சாப்பிட்டு வந்தார்.
நடராசன் எனது ரேடியோமெக்கானிஸம் வகுப்பு தோழர். எங்கள் விடுதி (பேரக்ஸ்)சில் எனக்கு அடுத்த கட்டில் அவருடையது. நாங்கள் இருவரும் நல்ல தோழர்கள். அவர்தான் ஒருநாள் என்னை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ' இவர் கூடப் பத்திரிக்கைக்கு எழுதுவார் அண்ணே,' என்றார்.
தமிழ்வாணன் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'என்ன எழுதுவீங்க' என்று கேட்டார்.
'கவிதைதான் எழுதுவேன்,' என்றேன் மகா கர்வத்தோடு.
உடனே கைதட்டி ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாரே பார்க்க வேண்டும், எனக்கு மரண அடி. தொடர்ந்து, 'இப்பல்லாம் கவிதையை யார்சார் படிக்கிறாங்க? நீங்க ஏழெட்டு கதை எழுதிட்டு வந்து கொடுத்துட்டுப் போங்க. அதிலே ஏதாவது ஒண்ணை செலகட் பண்ணிக் கல்கண்டிலே வெளியிடலாம்,' என்றார்.
தமிழ்வாணன் மட்டும் என்னை இப்படிச் சீண்டி விடாமல் இருந்திருந்தால், நான் பத்திரிகைத் துறைக்கு வந்திருப்பேனா? என்பது சந்தேகம்தான்.
அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள்ளிருந்து ஓர் உத்வேகம். பேரறிஞர்களின் அங்கீகாரம் பெற்றுப் பெரியவர்களுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சிறுவர்களுக்கான கதைகள் ஏழெட்டு எழுதித் தந்தால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாய் ஒருத்தர் சொல்லப் போச்சா? அதையும் பார்த்விடுவோம்!
தமிழ்வாணன் வீட்டிலிருந்து என் விடுதிக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்குள்தான் இருக்கும். வந்து சேர்வதற்குள் இரண்டு சிறுவர் கதைகளுக்கான பிளாட் உதயமாயிற்று. அப்போதே முனைப்பாக உட்கார்ந்து எழுதி முடித்து விட்டேன் இரண்டு கதைகளையும்.
மறுநாள் ராயவரம் நடராசனிடம் இரண்டு கதைகளையும் கொடுத்து, 'கொண்டு போய் உங்கள் தமிழ்வாணனிடம் கொடுத்து விடு,' என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்கு மேல் நான் தமிழ்வாணன் இருந்த திசையிலேயே திரும்பவில்லை. பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, நான் என் விடுதியில் இருந்து பனகல் பார்க் சென்று கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது.
திரும்பிப் பார்த்தால், தமிழ்வாணன்! அவரது அட்டகாச சிரிப்போடு என்னை நெருங்கி வந்து தோளில் தட்டிக்கொடுத்தார். 'என்ன நீ, கல்கண்டு பார்க்கலையா?' என்றார்.
'நான் அதெல்லாம் பார்க்கிற வழக்கமில்லை,' என்றேன் விறைப்பாக.
மறுபடியும் அதே சிரிப்பு. 'சரி, இப்பபார்,' என்று அந்த வாரத்துக் கல்கண்டை என் முகத்தெதிரே நீட்டினார்.
ஓவியர் ரவியின் அட்டைப் படம். உள்ளே புரட்டினேன். அட்டையும், அடுத்த பக்கமும் புரட்டியவுடனே என் கதை. சிறுவர்களுக்காக நான் எழுதிய முதல் கதை! 'சண்முகம்' என்ற பெயரில் வெளிவந்திருந்தது.
நான் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். 'உம்... மேலே புரட்டு...' புரட்டினேன். நடுப் பக்கத்துக்கு அப்பால் என்னுடைய அடுத்த கதை. 'சுந்தரம் என்ற பெயரில். நான் கொடுத்தனுப்பிய இரண்டு கதைகளையும் வெளியிட்டு இருந்தார். சண்முகம் +சுந்தரம் =சண்முக சுந்தரம் - என் இயற்பெயர்.
அன்றிலிருந்து தமிழ்வாணனுக்கும் எனக்கும் நட்பு இறுகியது.
 
ஜ.ரா. சுந்தரேசன், ரா.கி. ரங்கராஜன், புனிதன் 
கல்கண்டு உதவியாசிரியர்
ஒருநாள், 'படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போறே?' என்றார் என்னிடம் கொஞ்சம் சீரியஸாக.
'ஏதாவது வேலை தேடணும்...' என்று இழுத்தேன்.
என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு -படிப்பு முடியுமுன்னரே- ஆளாகியிருந்த நேரம் அது.
'நீ என் கூடவே இருந்துடு,' என்றார்.
'சரி. இப்ப நான் என் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சொல்லிக்கிட்டுப் போக வந்தேன்,' என்று விடைபெற்றேன்.
நான் திருமணம் முடித்துக் கொண்டு உறவிலே பெண்- திரும்பி வந்து தமிழ்வாணனைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் சென்றேன்.
சிந்தாதிரிப் பேட்டை அருணாசல நாயக்கன் தெருவிலிருந்து குமுதம் அலுவலகம், இப்போதுள்ள கெல்லீஸ் கட்டிடத்துக்குப் பெயர்ந்த வேளை அது.
தமிழ்வாணனின் உதவியாளராக, கல்கண்டு துணையாசிரியராக, அப்போது ரா.கி.ரங்கராஜன் இருந்தார்.
ஆசிரியரும், துணையாசிரியரும் 'வா, போ' என்று ஒருமையில் பேசிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். விசாரித்தபோது தெரிந்தது. இங்கு வருமுன்னர் இருவரும் 'சக்தி' பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று! ரா.கி.ர., அப்போதெல்லாம் கொஞ்சம் 'ரிசர்வ் டைப்,' அவரிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாய் இருக்கும்.
தமிழ்வாணனுக்கு அடுத்த சீட் ரா.கி.ர.,வுடையது. நான் போயிருந்த சமையம் அந்த சீட் காலியாக இருந்தது. 'ரங்கராஜன் சார் வரலியா? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன்.
மணியடித்து ஆபிஸ் பையனை வரவழைத்து, 'அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரைக் கொண்டா,' என்றார்.
பையன் ரிஜிஸ்தரைத் கொண்டு வந்து என் முன் பிரித்து வைத்தான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 1952, ஜூன் மாத ஆரம்பத்திலேயே என் பெயர் பதிவாகியிருந்தது. நான் இரண்டாவது வாரம்தான் சேர்ந்தேன்.
சற்றுப் பொறுத்து, 'சரி, வா. முதலாளியைப் பார்த்து விட்டு வரலாம்,' என்று கூட்டிப் போனார்.
அப்போதுதான் நான் முதன் முதலாக ஆசிரியர் எஸ்.ஏ.பி., அவர்களை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தது. ஏதோ காலங் காலமாய் உடனிருந்து பழகியவரைப் போன்ற அன்னியோன்னியத்துடன் அவர் புன்னைகைத்து கை குலுக்கியபோது, சிலிர்த்துப் போனேன். 'தமிழ்வாணன் உங்களைப் பற்றிச் சொன்னார். நல்லா செய்யுங்க. செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு, என்றார்.
அதற்கு மேல் அங்கு இருக்கத் தேவையில்லை என்ற பாவைனையில் தமிழ்வாணன் என்னை ஜாடையாக நோக்கித் தலையசைத்தார். நானும் எழுந்து கொண்டேன். அவருடன் வெளி நடந்தேன்.
அப்போது எனக்குப் பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் என்று சொல்லப் போனால், பள்ளியில் படிப்பு முடித்த கையோடு வந்த தேர்தலுக்கான, ஓட்டர் லிஸ்ட் புரூப் பார்த்த அனுபவம்தான். தாலுகா ஆபிஸில் ஓய்வு பெற்ற தாசில்தார் முனுசாமி முதலியார் புரூப் திருத்த நல்ல பயிற்சி அளித்திருந்தார். அதுவே பெரிய தகுதி போல் த.வா., பாராட்டினார்.
மற்றபடி பத்திரிக்கை தயாரிக்கத் தேவையான அத்தனை அறிவுக்கும் அஸ்திவாரம் போட்டவர் தமிழ்வாணன்தான்.

Pas Pasupathy

unread,
Sep 30, 2011, 1:37:28 PM9/30/11
to yAppulagam / யாப்புலகம்
தமிழ்வாணனைப் பற்றி
 
ரா.கி. ரங்கராஜன்

'ஒண்டர்ஃபுல் நியூஸ்'
'கல்கண்டு' இதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் என்பால் மிகுந்த பிரியம் வைத்திருந்த நண்பர்களில் ஒருவர். அவர் காலமானபோது நான் விழுந்து புரண்டு கதறியதைப் பார்த்து எல்லாருக்கும் அதிர்ச்சி. 'சும்மா நடிக்கிறேன்' என்று கூட சிலர் நினைத்திருப்பார்கள். உண்மையில், குமுதம் காரியாலயத்தில் சேர்வதற்கு நாலைந்து வருடங்களுக்கு முன்பே நானும் அவரும் 'சக்தி' மாத இதழில் இணைந்து பணியாற்றியிருந்தோம். வாடா போடா அளவுக்கு இல்லாவிட்டாலும் வாப்பா போப்பா அளவுக்கு சினேகிதம். நான் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த காலத்தில் கல்கண்டு இதழில் என்னை எழுத வைத்து இருபது ரூபாய் முப்பது ரூபாய் என்று அன்பளிப்பு வாங்கித் தந்ததை மறக்க முடியாது.

சிறிது காலம் கல்கண்டில் நான் அவருக்கு உதவியாளராக இருந்த போது. ஏதாவது 'ஒண்டர்ஃபுல் நியூஸ் இருந்தால் கொடப்பா' என்பார். அவருக்கு இங்கிலீஷ் பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் கிடையாது. ஆகவே அதிசயமான, விசித்திரமான செய்திகள், துணுக்குகள் முதலியவற்றைத் திரட்டித் தரும் வேலையை என்னிடம் தருவார். பத்திரிகையில் துண்டு விழும் இடங்களில் அவற்றைப் பிரகரித்து சரி செய்வார். 'ஒண்டர்ஃபுல் நியூஸ்' என்று அவர் குறிப்பிடுவது அத்தகைய துணுக்குகளைத்தான்.

சமீபத்தில் அப்படிப்பட்ட சிலவற்றைப் படித்த போது அருமை நண்பர் தமிழ்வாணனைப் பற்றியும், அவருடைய அட்டகாசமான சிரிப்பைப் பற்றியும் தொப்பி, கறுப்புக் கண்ணாடியைப் பற்றியும் ஞாபகம் வந்தது. இந்தத் துணுக்குகளைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்!
[நன்றி:

=================
--
Reply all
Reply to author
Forward
0 new messages