பாரதி மணிமண்டபம் பற்றிய ஸ்ரீராமின் கட்டுரை
என் நினைவுகளைத் தூண்டிவிட்டது. அச் சுரங்கத்திலிருந்து
சிலவற்றைத் தோண்டி எடுக்க முயல்கிறேன்.
பாரதி மணிமண்டபம் குறித்து நான் சேகரித்த சில கட்டுரைகள்,
தகவல்கள், படங்கள் இவற்றை மெதுவாக இங்கே பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
இந்தத் தலைமுறையில் பலரும் இவற்றைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றே
நினைக்கிறேன்.
இவை யாவும்.. ஒரு விதத்தில் நானும், என் குடும்பமும் குடியிருந்த வீட்டிலிருந்து
தொடங்குகிறது.
சென்னையில், தி.நகரில், பஸ்லுல்லா ரோடில் 1950- வரை நாங்கள் குடியிருந்தோம்; பக்கத்து வீட்டில் ராஜாஜி, அதற்குப் பக்கத்தில் அவர் குமாரர் கிருஷ்ணசாமி. கிருஷ்ணசாமி படா தமாஷ் பேர்வழி; 'ஹிண்டு'வில் ஒரு ஆசிரியர். என் தந்தைக்குச் சேலம் நாளிலிருந்தே தெரிந்தவர். அடிக்கடி வீட்டிற்கு வந்து என் அம்மாவின் 'காபி'யைக் குடித்துக் கொண்டே அரட்டையின் மூலம் பல சுவையான தகவல்கள் கொடுப்பார்.
(ஒரு வேளை அவர் சொல்லியதின் மூலம்தான் என் தந்தை அங்கே குடி வந்தாரோ
என்னமோ ..தெரியவில்லை.)
அப்போது நான் அறிந்தது ..ராஜாஜிக்கு முன் அந்த வீட்டில் 'கல்கி' குடியிருந்தார்
என்று. கல்கியும், அவர் குடும்பத்தினரும், எம்.எஸ் , சதாசிவம் இவர்களும் அடிக்கடி ராஜாஜியைப் பார்க்க அங்கு வருவார்கள். இதன் முக்கிய விளைவு:
நான் 'கல்கி' யை வாடிக்கையாகப் படிக்கத் தொடங்கியது தான் ! பழைய 'கல்கி' இதழ்களையும் சேகரிக்க ஆரம்பித்தேன். ( இப்போது நிறைய கட்டுரைகள் தொலைந்துவிட்டன..சில மிஞ்சி உள்ளன.) அப்போதைய ஒரு 'கல்கி' இதழிலிருந்து ஒரு பக்கம் இணைக்கிறேன்.
1944-இல் 'கல்கி'யில் 'சிவகாமியின் சபதம்' தொடங்கியது.
(சரியாகச் சொன்னால் 1-1-1944 இதழில் ) 'மணியம்' படங்களுடன், வரும்.
சி.ச -வின் ஒரு அத்தியாயத்தின் முதற்பக்கத்தின் படம் கீழே
பிறகு பாரதி மண்டபம் பற்றி அறிந்து , அது பற்றித் தகவல்கள் கொண்ட கல்கி, விகடன் சேகரித்தேன்.....
(தொடரும்)