தொல்காப்பிய நல்லறிஞர் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது ஐயா, பேராசிரியர் அண்ணாம்லையாரின் கருத்தை மறுத்தல்-2

185 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Oct 1, 2012, 10:05:40 PM10/1/12
to தமிழ் மன்றம்
அன்புள்ள தமிழ் மன்ற நண்பர்களே,

மலேசியாவில் பினாங்கில் வாழும் தொல்காப்பிய நல்லறிஞர் கவிஞர்
செ. சீனி நைனா முகம்மது
ஐயா  அவர்கள், வல்லமை இதழில்
பேராசிரியர் அண்ணாமலையார் அவர்கள் அளித்த மறுமொழியை
மறுத்து மீண்டும் தம் கருத்தை வழங்கி இருக்கின்றார்.  என் நெஞ்சார்ந்த நன்றியை
அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வல்லமை இதழில்  பார்க்கவும்:

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (44)

தொடுப்பு:: http://www.vallamai.com/qa/26522/

செப்டம்பர் 30, 2012 அன்று மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். இதனை வல்லமை இதழிலும்
இடுகின்றேன். அன்புமிக்க  கவிஞர் சீனி ஐயா அவர்களுக்கும், பேராசிரியர் அண்ணாமலை அவர்களுக்கும்
முனைவர் அண்ணா கண்ணன் அவர்களுக்கும் மறைபடி ஒன்றை இணைக்கின்றேன்.

அன்புடன்
செல்வா

----------------------------------------

ஒரு, ஓர் பற்றி வழங்கும் தற்கால விதியும் தொல்காப்பிய விதியும் ஒன்றுதான்


செ. சீனி நைனா முகம்மது

 

வல்லமைஎன்ற மின்னிதழில், ஒரு ஓர் பயன்பாடு பற்றிய ஒரு வினாவுக்கு அளித்த விடையில், திரு  . அண்ணாமலையார் எழுதிய சில கருத்துகளுக்கு, தமிழ்மன்றம் என்ற மின்குழுவைச் சேர்ந்த திரு. செ.இரா செல்வகுமார் வழியாக, நாம் மறுப்பு எழுதியிருந்தோம். நமது மறுப்புக்கு மறுப்பாக, அதே இதழில் அவர் நீண்ட விளக்கம் எழுதியிருக்கிறார். அவரது மறுவிளக்கமும் ஏற்புடையதாக இல்லை என்பதால் நாம் அவருக்கு மீண்டும் இந்த மறுப்பை எழுதுகிறோம்.

அவரிடம் எழுப்பப்பட்டதாக அவரது விடையில் குறிப்பிடப்பட்டிருந்த வினா இதுதான்:

தமிழ் இலக்கணப்படி ஓர் அரசன் ஓரு மன்னன் என்றுதான் எழுதவேண்டுமா?’

இந்த வினாவுக்கு அண்ணாமலையார் முன்னர் அளித்த விடையின் முதல் வாக்கியம் இது:

உயிரெழுத்தில் துவங்கும் பெயருக்குமுன் வரும் எண்ணுப்பெயரடை நெடிலிலும், மெய்யெழுத்தில் துவங்கும் பெயருக்குமுன் வரும் எண்ணுப் பெயரடை குறிலிலும் இருக்கவேண்டும் என்று எனக்குத் தெரிந்தவரை எந்த மரபிலக்கணத்திலும் விதி இல்லை.” 

இதற்கு விதி உண்டு என்பதற்கு நாம் தொல்காப்பிய நூற்பாவைச் சான்றாகக் காட்டினோம். அந்த                 நூற்பா இதுதான்:

                முதலீர் எண்ணின்முன் உயிர்வரு காலைத்

                தவலென மொழிப உகரக் கிளவி

                முதனிலை நீடல் ஆவயி னான (தொல். எழுத்து 455)

இந்த நூற்பாவில், அடுத்து உயிரெழுத்து வந்தால் ஒரு இரு என்ற முதலிரண்டு எண்களின் இறுதியிலுள்ள உகரம் கெடும் என்பதும் முதலிலுள்ள குறில் நீண்டு நெடிலாகும் என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஒரு இரு என்பவற்றின் முதலிலுள்ள குறில்கள், அடுத்து உயிர்வந்தால் நெடிலாகும் என்றால், அடுத்து மெய்வந்தால் இருந்தபடியே இருக்கும் - அதாவது - ஒரு இரு என்று குறிலாகவே இருக்கும் என்பதுதானே பொருள். அவர் எதற்கு விதி இல்லை என்றாரோ அதற்கு விதி கூறுவதுதான் இந்த நூற்பா. எனவே, அண்ணாமலையார் இப்படி ஒரு விதி எந்த மரபிலக்கணத்திலும் இல்லை என்று கூறியது உண்மையன்று.

ஏதோ காரணத்துக்காக அவர் இல்லை என்று மறுத்த விதி, இருப்பது மெய்ப்பிக்கப் பட்டதால், அதை மழுப்புவதற்காக நீண்ட விளக்கம் எழுதிக் குழப்புகிறார் என்ற எண்ணம் தோன்றுகிறது. நேரடி விற்பனையில் (direct sales) ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பயிற்சியாளர்கள், “if you cannot convince them, confuse them” என்று சொல்லிக்கொடுப்பார்களாம். இந்த உத்தியை அண்ணாமலையார் திறம்படக் கையாள முயன்றுள்ளார்.

தொல்காப்பிய நூற்பா, சந்தியால் தோன்றும் மாற்று வடிவங்களைப் பற்றியது. தற்கால இலக்கண ஆசிரியர் கூறும் ஒரு ஓர் பயன்பாட்டு விதி, அதாவது அடுத்துவரும் பெயரின் முதலில் உள்ள  எழுத்தைப் பொருத்து ஒரு ஓர் என்னுப் பெயரடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்னும் விதி, சந்தி சாராதது; சொற்களின் தொடரைப் பற்றியது. இது பழைய இலக்கணத்தில் இல்லை என்பது என் கருத்துஎன்கிறார். 

இன்றைய தமிழ் இலக்கணத்தில், ஒரு ஓர் பயன்பாட்டு விதி இரண்டு சொற்கள் தொடர்ந்து வரும்போது கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பது பழைய இலக்கணத்தில் சொல்லாத ஒன்று. இந்த விதி சந்தியில் பின்பற்றப்பட வேண்டும் என்பதே பழைய இலக்கணம். என்கிறார்.

வீட்டுக்குள் ஆள் யாரும் இல்லைஎன்று சொன்னவர், வீட்டிலிருந்து பதின்ம அகவை இளைஞன்  வெளிப்பட்டதும், ‘நான் பெரிய ஆள் யாரும் இல்லை என்று சொன்னேன். ஆள் என்பது அகவையில் பெரியவரைத்தான் குறிக்கும் என்பது என் கருத்துஎன்று சொல்வது போலிருக்கிறது இவர் விளக்கம். 

குறிப்பிட்ட நூற்பாவைப் பற்றி அவருக்கு இப்படியொரு கருத்து இருக்கும் நிலையில், வினாவுக்கு விடையளிக்கும்போதே, இந்த நூற்பாவைச் சுட்டிக்காட்டி, ‘இப்படியொரு நூற்பா இருக்கிறது; எனினும் அதன் பொருள் இன்னவிதமாகப் புரிந்துகொள்ளுதற்கு உரியதுஎன்று கூறியிருக்கலாமே.

குறில் நெடிலாகும் ஓசையமைதி, ஒற்றைச் சொல்லுக்கும் சந்தியால் சேர்ந்த சொல்லுக்குமே பொருந்தும். சந்தியில்லாமல் வரும் இரு சொற்களுக்கிடையே இது நிகழாது. என்கிறார். 

ஒரே சொல்லுக்குள் அடுத்தடுத்து வரும் எழுத்துகளின் சந்திப்பும், அடுத்தடுத்து வந்து விட்டிசைக்கும் இரு சொற்களின் சந்திப்பும் சந்திகள் அல்ல என்பதும், நிலைமொழியின் மாற்றத்துக்கு வருமொழி காரணமாகாவிட்டால் அது சந்தியன்று என்பதும் அவரது விளக்கத்தில் கிடைக்கும் கருத்துகள்.

தொல்காப்பிய நூற்பாவில் சந்தி பற்றிய வரம்பு எதுவும் கூறப்படவில்லை. உரையாசிரியர்கள் விளக்கத்திலும் அப்படி எதுவுமில்லை. அக்காலத்தில் சொற்களைப் பிரித்து எழுதும் வழக்கமும் இல்லை. அப்படி இருந்தும், அண்ணாமலையார் இந்த நூற்பாவை, ‘சந்தியைக் காட்டி மேற்கண்ட விதியிலிருந்து வெட்டிவிடப் பார்க்கிறார். 

நன்னூலின்படி, சந்தியும் சந்தி விகாரமும் ஒரே சொல்லின் உறுப்புகளாகத்தானே வருகின்றன. தமிழில் இரண்டு ஒலிக்கூறுகள் (எழுத்தோ சொல்லோ) சந்திக்கும் இடமெல்லாம் சந்திதான். இவர் சொல்லுகிற புதிய சந்திவிளக்கத்தையும் மாற்றுவடிவங்கள் என்ற மொழியியல் விளக்கத்தையும் இவரே மொழியியலுக்காக வைத்துக்கொள்ளட்டும். தொல்காப்பிய நூற்பாவின்மீது ஏற்றுவது புரட்டாகும்.

விட்டிசைக்கும் இரு சொற்களில் குறில் நெடிலாகும் ஓசையமைதி நிகழாது என்கிறார். உண்மைதான். விட்டிசைக்கும் சொற்களில் இந்தப் புணர்ச்சி மட்டுமன்றி எந்தப் புணர்ச்சியும் நிகழாது என்பது இலக்கணம் தெளிவாக அறிந்தவரெல்லாம் அறிந்ததுதானே. ‘எடுஎடுஎன்ற தொடரை யாரும் எடுவெடு என்று சொல்லுவதில்லை; எழுதுவதுமில்லை.

பழைய இலக்கியத்தில் மேலே காட்டிய தொல்காப்பிய விதி, இரண்டு தனிச்சொற்கள் தொடரும்போது பின்பற்றப்படவில்லை எனலாம். மெய்யெழுத்துக்குமுன் எண்ணுப்பெயரடையின் நெடில் வடிவம் (ஓர்), குறில் வடிவம் (ஒரு) ஆகிய இரண்டும் வருகின்றன. தொல்காப்பியத்திலும் வருகிறது. ஓர் வரும்போது உகரம் சந்தியால் கெட வாய்ப்பில்லை. எனவே, உகரம் கெட்டு முதல் குறில் நெடிலாக மாறிய மாற்று வடிவம் இது எனலாம்.’ என்று கூறி எடுத்துக் காட்டுகள் தருகிறார்.

இது தலைகீழ் விளக்கம். தொல்காப்பியத்திலும் சரி மற்ற பழைய இலக்கியங்களிலும் சரி உயிருக்கு முன் ஓர் என்ற சொல்லே வருகிறது. மெய்க்கு முன் ஒரு வருவதே இயல்புநிலை. ஓர் வருவது, புலவர்கள் செய்யுள் ஓசை கருதிக் கையாண்ட பயன்பாடு என்பதை நமது முன்னைய மறுப்பிலேயே விளக்கியிருக்கிறோம். இந்தச் செய்யுள்வழக்குப் பிற்காலத்தில் உரைநடைக்கும் வந்துவிட்டது. எனவே, இது விதி அன்று; செய்யுள் வழக்காக வந்த விதிவிலக்கு.

மரபிலக்கணப் புலவர்களை மட்டத்தட்டுவதும், மொழியியல் கற்றவர்கள்தான் சரியான இலக்கண விளக்கமறிந்த மேதைகள் என்று பீற்றுவதும் இவரது நோக்கங்களாக இல்லாதிருந்திருந்தால், “தமிழ் இலக்கணப்படி ஓர் அரசன், ஒரு மன்னன் என்றுதான் எழுத வேண்டுமா?” என்ற வினாவுக்கு, மேற்கூறப்பட்ட தொல்காப்பிய நூற்பாவைச் சுட்டியோ சுட்டாமலோ ஏறத்தாழப் பின்வருமாறு விடை எழுதியிருக்கலாம்:

உயிருக்குமுன் ஒரு என்ற சொல் வந்தால், இரண்டு உயிர்கள் மயங்கமாட்டா என்பதால் ஓர் என்ற வடிவத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். மெய்க்கு முன்னால் ஒரு என்ற வடிவம் வரும். மெய்க்கு முன்னால் உயிர்கள் மயங்கும் சிக்கல் இல்லாததால் புலவர்கள் செய்யுள் ஓசை கருதி, ஓர் வடிவத்தையும் பயன்படுத்தினார்கள். அதைப் பின்பற்றி அந்த வழக்கு இன்றைய உரநைடையிலும் வந்துவிட்டதால், அவ்வாறு செய்வது குற்றமாகாது. சொற்கள் விட்டிசைப்பதைக் காட்ட இடம்விட்டு எழுதும்போது உயிருக்குமுன் ஓர் என்ற சொல்லாப் பயன்படுத்துவது இக்காலத்தில் கட்டாயன்று.” 

அண்ணாமலையாரின் மறுப்பு விளக்கத்தில் நாம் மறுத்துரைக்கத் தக்க செய்திகள் மேலும் உள்ளன.  அனைத்துக்கும் மறுப்புரைத்தால் விளக்கம் மிக நீண்டுவிடும் என்பதால் அதனை இப்போதைக்குத் தவிர்க்கிறோம். என்றாலும், மரபிலக்கணப் புலவர்களுக்கும் தமிழ் மொழியின் செம்மையைத் தொடர்ந்து நிலைப்படுத்த விரும்புபவர்களுக்கும் இவர் கூறியுள்ள அறிவுரைகளை மதித்துச் சில செய்திகளை இங்குக் கூறுதல் இன்றியமையாததாக இருக்கிறது.

புது வழக்குப் பெருகும்போது அதை ஏற்று இலக்கண விதி அமைப்பது தமிழ் இலக்கண ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. சங்கம், சகடம் முதலான சொற்கள் வழக்கிற்கு வந்தபின், நன்னூல் தொல்காப்பியச் சூத்திரத்தை விரித்து, சகரம் சொல்லுக்கு முதல் எழுத்தாக வரும் என்று விதி அமைத்தது. இந்தத் தமிழ் இலக்கண மரபு இக்காலத் தமிழுக்கு வந்துள்ள மாற்றங்களை ஏற்று விதி சொல்ல அனுமதிக்கிறது. நன்னூலின் புதிய இலக்கண விதிகள் எப்படித் தமிழ் இலக்கணத்தையோ தமிழ் மொழியையோ சீர்குலைக்கவில்லையோ, அப்படியே இக்காலத் தமிழ் வழக்கின் அடிப்படையில் எழுதும் இலக்கண விதிகளும் தமிழ் இலக்கணத்தையும் மொழியையும் சீர்குலைக்கவில்லை. அப்படி ஒருவர் சொன்னால், அவர் தமிழில் இலக்கண வளர்ச்சி நின்றுவிட்டது என்று சொல்கிறார் என்றே கொள்ளவேண்டும்.” என்கிறார்.

இதிலுள்ள அடிப்படைக் கருத்தை நாம் மறுக்கவில்லை. ஆனால், இவர் கூறுகிறபெருகும் வழக்குஎது? காசுக்காக எதையும் செய்யத் துணியும் திரைப்படக் காரர்களின் வழக்கா? தாங்கள் எழுதப் பயன்படுத்தும் தமிழ்மொழியை ஓரளவுகூடக் கற்றுக்கொள்ளாமலே தமிழ் எழுத்தாளர்களாகப் பெயர்போட விரும்பும் பொறுப்பற்ற படைப்பாளர்களும் ஊடகவியலாளர்களும் கையாளும் வழக்கா? தமிழ்நாட்டுக் கல்விமுறையால் வளர்ந்துவரும் தமிங்கில வழக்கா? தமிழர்கள் தங்கள் மொழியைப் போற்றுவதையும் அதன் செம்மைபற்றிப் பெருமைகொள்வதையும் காணப் பொறுக்காமல் அழுக்காறு மிகுந்து அதை இயன்ற வழிகளிலெல்லாம் சீர்கெடுப்பதற்காகப் மறைமுகமான முயற்சிகளைத் திறம்படச் செய்துவரும் கூட்டத்தினரின் வழக்கா?

புதுவிதி செய்ய அனுமதிக்கும் இலக்கண மரபைச் சுட்டிக்காட்டி அறநயம் பேசும் அண்ணாமலையார்,  வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றேஎன்னும் செவ்விய இலக்கண மரபை மட்டும் வசதியாக மறந்துவிட்டாரா?

புதிய இலக்கணம் என்னும் பெயரால், மொழியியலாளர்கள் செய்துவரும் தமிழ்க்கொடுமை கொஞ்சமா! கிரியா என்று எழுதிவந்த சொல்லை க்ரியா என்று மாற்றினர். இயக்குநர் என்பதை இயக்குனர் ஆக்கினர். சுவரில் என்பதைச் சுவற்றில் என்றும் எழுதலாம் என்றனர். அன்று அல்ல என்றும், வாராது, வாரா என்றும் வழங்கும் ஒருமை பன்மை வேறுபாடெல்லாம் தேவையில்லை என்றனர். ஒரு, ஓர் பயன்பாடுக்கு இலக்கண விதியே இல்லை என்கின்றனர். இன்னும் எத்தனை எத்தனையோ! இந்தப் பிழைவழக்குகளுக்கு இவர்கள் கூறும் காரணம் புதுவழக்கு! கிரியா என்று முன்னோர் எழுதியதைக் க்ரியா ஆக்கியதன் மூலம், மெய் முதலில் வாராது என்ற தமிழின் செவ்விய அடிப்படைக் கோட்பாடு ஒன்றைக் கெடுத்ததைத் தவிர இவர்கள் வேறு என்ன சாதித்துவிட்டனர்?

சரியாகத் தமிழறியாதவர்கள் செய்யும் எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும், இச்சை மொழி விற்கும் இழிகுணத்தோரின் பச்சைகொச்சைமொழியும், பெருகும் வழக்கென்று கொண்டு இவர்கள் வகுப்பது புது இலக்கணம் அன்று; புற்று இலக்கணம். இது மொழியை மட்டுமன்று; மொழியின் செம்மையைச் சார்ந்தே விளையக்கூடிய நுண்ணிய சிந்தனை, தெள்ளிய கருத்துப் பரிமாற்றம், செவ்விய பண்பாடு போன்ற எண்ணற்ற நன்மதிப்புக் கூறுகளையும் சிதைக்கும் கொடுஞ்செயலாகும். இந்தப் பிழைவழக்குகளை ஏற்பதால் நேரும் கேட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாவத கூறுவது நல்லது.

இயக்குநர் என்ற சொல்லின்நர்என்ற பின்னொட்டைனர்ஆக்கியது புதுவழக்காம். இதனால், பழைய இலக்கியங்களில், காட்டாகச் சிலப்பதிகாரத்தில் பகருநர், ஓசுநர், செய்குநர், குயிற்றுநர், போழநர், கடவுநர், ஊருநர் பொருநர், என்று வரும் எத்தனையோ சொற்களைப் பார்த்துப் புதிய தலைமுறை குழம்பாதா? குறளில் வரும் கொழுநன் என்ற சொல்லையும் கொழுனன் என்று மாற்றப் போகிறார்களா? தமிழில் இடையட்டும் கடையட்டுமாக வரும் இடைச்சொற்கள் எல்லாம் மொழிமுதல் எழுத்துகளால் ஆனவை. அந்தச் செம்மையை இந்த ஒரு சொல்லுக்காகக் கெடுத்து மொழிமுதல் வாராத னகரத்தில் தொடங்கும் பின்னொட்டை உருவாக்கியது வளர்ச்சியா? நர், னர் ஆனதால், நன், நள், நர்கள் போன்ற பால்வேறுபாட்டுச் சொற்களும் சிதையாவா?

அறிந்தவர்கள் சரியாகவும் அறியாதவர்கள் பிழையாகவும் எழுதுகிறார்கள் என்றால், பிழையாக எழுதுபவர்களுக்கு எடுத்துக்கூறித் திருத்துவதா? பிழையாகப் பலர் எழுதுவதால் அவற்றை எல்லாம் புதிய விதிகளாக்கி, சரியாக எழுதுகிறவர்களையும் பிழையாக எழுதச் செய்வதா? பிழைவழக்குகளுக்குப் புது இலக்கணம் எழுதச் செலவிடும் உழைப்பையும் காலத்தையும் அவற்றைத் திருத்துவதற்குப் பயன்படுத்தலாமே!

வளர்ச்சி என்ற சொல்லை வசதியாகக் கையாண்டு இவர்கள் தமிழையும் தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள். எது வளர்ச்சி? மாற்றங்கள் எல்லாமே வளர்ச்சியாகுமா? நல்ல மாற்றத்துக்கும் தீய மாற்றத்துக்கும் வேறுபாடு இல்லையா? அரசு அதிகாரம் உடையவர்கள் ஊழல் செய்வது பெருகிவிட்டது; திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்துவதும் குழந்தை பெறுவதும் பெருகிவிட்டன. ஏன், கொலை கொள்ளை கற்பழிப்புப் போன்ற எத்தனையோ கொடுங்குற்றங்கள் எல்லாம் நாளும் பெருகி வருகின்றனவே.  பெருகிவிட்டதால் இவற்றைப் புதிய வழக்கென்று விதிசெய்து ஏற்கலாமா?

மொழியியல் என்பது அரிய புதிய பயன்மிக்க அறிவியல் முறை என்பதில் ஆக்கச் சிந்தனையுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இராது. ஆனால், அதேவேளை, எத்துணை அரிய புதிய கருவியானாலும் அதனைக் கையாளும் முறையால் நல்லதும் அல்லதும் விளையலாம் என்பதையும் மறந்துவிடுதல் கூடாது. தமிழ் இலக்கணத்தின் புணர்ச்சி முறைகளில், புதிய கலைச்சொல்லாக்கத்தில் என இன்று எத்தனையோ வகைகளில் சிக்கல்களும் தேவைகளும் உள்ளன. மொழியியல் தேர்ச்சிபெறும் வாய்ப்பைப் பெற்ற தமிழர்கள் அந்தத் திறனை தமிழிலுள்ள சிக்கல்களை அவிழ்க்கவும் தேவைகளை நிறைவு செய்யவும் பயன்படுத்துவதே, அவர்களின் பணிவாய்ப்புக்கும் பணவரவுக்கும் உதவிய  தமிழ்மொழிக்குச் செய்யும் கடப்பாடாகும். அதைவிடுத்து, பழையது என்ற ஓரே காரணத்துக்காகவும் இவர்கள் கற்ற புதிய மொழியியலை முதன்மைப் படுத்துவதற்காகவும், மரபுகளையும் மரபிலக்கணத்தையும் அவற்றின் செம்மை கெடுமாறு குழப்புவதும், மரபிலக்கண அறிஞர்களையும் ஆக்கமான மொழிவளர்ச்சிக்கு இயன்றவாறு உழைப்பவர்களையும் பழித்து, அவர்களது நல்ல பணிகளைத் தடுப்பதும் மொழியியல் கற்றவர்களுக்கு அழகன்று. மிகையான தன்மதிப்பையும் செருக்கையும் கைவிட்டு, மொழிக்கும் இனத்துக்கும் நலம்செய்யுங்கள் என்று அண்ணாமலையாருக்கும் அவரது மொழியியல் கூட்டாளிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து நிறைவுசெய்கிறோம்.


--------------------------------------------
Seeni_ayaa_response_2.docx

iraamaki

unread,
Oct 1, 2012, 11:19:12 PM10/1/12
to tamil...@googlegroups.com
சீனி நைனா முகம்மது ஐயா அருமையாக எழுதியிருக்கிறார். அவரைக் கோவையிற் பார்த்து உரையாடியது என் நினைவிற்கு வருகிறது.
 
எங்கு பார்த்தாலும் தமிழ் எதிர்ப்பு அரசியல் பேசும் விசயராகவன் பேரா. அண்ணாமலையைத் தன்பக்கம் இழுத்து ஓர் அரசியல்  நிகழ்ப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்குப் பேராசிரியரும் ஒத்துழைக்கிறார்.
 
தவறைத் தவறு என்று நேர்படச் சொல்ல நம்மிற் பலர் தயங்குகிறோம். இணையம், தாளிகை, தொலைக்காட்சி எனப் பல்வேறு துறைகளில் தப்பும் தவறுமாகத் தமிழ் பேசுவதே/எழுதுவதே வாடிக்கையாகிவிட்டது.  தமிழாசிரியர்கள் பலரும் அமைதியாக இருக்கிறார்கள்.
 
அன்புடன்,
இராம.கி.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
Reply all
Reply to author
Forward
0 new messages