இந்திய இலக்கியக் கழகம் என்னும் பொருளுடைய ‘சாகித்திய அக்காதெமி’ நம்முடைய வரிப்பணத்தில் செயல்பட்டுவரும் ஓர்
அரசு நிறுவனமாகும்.இதன் தமிழ்ப்பிரிவு தமிழ்ப்பேராசிரியர்கள், எழுத்தாளர்கள்,பாவலர்கள்,இதழியலாளர்கள் ஆகிய பிரிவினரின் சார்பாளர்களைக் கொண்ட ஆய்வுரைக் குழுவின் மூலம் செயல்பட்டு வருகிறது.
26-4-2011&27-4-2011 ஆகிய இரு நாள்களிலும் “தமிழ்ச்சிறுகதைகள்-ஒரு நூற்றாண்டு” என்னும் தலைப்பில் இருநாள் கருத்தரங்கத்திற்குத் திட்டமிட்டு,சாகித்திய அக்காதெமியிலிருந்து அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளன.
“பாரதியார்,தி.சானகிராமன்,மௌனி,புதுமைப்பித்தன்,கு.ப.ரா.செய-\காந்தன்,சுந்தரராமசாமி” ஆகிய படைப்பாளர்கள் குறித்தும் பெண்ணியம்,தலித்தியம்,பின் நவீனத்துவம் ஆகிய இலக்கிய இயக்கங்கள் சார்ந்த சிறுகதைகள் குறித்தும் மணிக்கொடி, சரசுவதி, தீபம், தாமரை,செம்மலர்,சாந்தி ஆகிய இலக்கிய இதழ்களும் வெகுசன இதழ்களும் வெளியிட்ட சிறுகதைகள் குறித்தும் பதினைந்து பேர் கட்டுரை வழங்குகிறார்கள்.தென்னிந்தியச் சிறுகதைகளின் செல்நெறிகள் எனும் தலைப்பில் மலையாளம்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிச் சிறுகதைகள் பற்றி மூவர் ஆய்வுரை வழங்கவுள்ளனர்.
ஒரு மணித்துளி சிந்தித்துப்பாருங்கள்.தமிழ்ச்சிறுகதை வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு மிகப் பெரியதல்லவா?
அண்ணா,கலைஞர்,டி.கே.சீனிவாசன்,தில்லைவில்லாளன்,இராதா மணாளன்,தென்னரசு என்று எத்துணைப்பேர் ஆற்றல் மிக்க சிறுகதையாளர்களாய்த் திகழ்ந்தனர்?
அவர்கள் பங்களிப்பு ஒரு நூற்றாண்டுச்சிறுகதை வரலாற்றில் புறக்கணிக்கப்படுவது தகுமா?நடுநிலையாகுமா?மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் சாகித்திய அக்காதெமி ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இயங்கலாமா?சிந்திப்பீர்!செயற்படுவீர்!