திருவாசகம்
46. திருப்படை எழுச்சி
(பிரபஞ்சப் போர்)
===========
ச. தண்டபாணி தேசிகர் அவர்களது "குருவருள் விளக்கம்" என்னும் திருவாசக உரையிலிருந்து இப்பதிக விளக்கத்தின் ஒரு பகுதி:
மணிவாசகப் பெருந்தகை தில்லையிலே எழுந்தருளியிருக்குங்காலத்து, சாதகர்களாகிய அடியார்களும் ஏனைய மக்களும் பாசபந்தத்தால் மாயையில் சிக்குண்டு அல்லற்படுவதைக்கண்டு மனமிரங்கி, "மக்களே! நம்மைத் துன்பப் படை வந்து தாக்க இருக்கிறது; மாயப் படை வந்து சூழ இருக்கிறது; படையெடுத்துப் புறப்படுங்கள்; நாம் வான நாடு ஆள்வோம்" என ஞான வீரத்தை எழுப்ப இதனை அருளிச் செய்தார்கள்.
படையெழுச்சி - படையெழுதல். நல்ல நாள் பார்த்து, குடையும் வாளும் முரசும் நாட்கொண்டு, பறைசாற்றி வீரர்களை ஒருங்குதிரட்டிக்கொண்டு, காலமும் இடமும் செவ்விதினோக்கிப் பகைவர் மேல் படை கிளம்புதலே படையெழுச்சியாகும். இது மாயப்படையின்மேல் ஞானியர்படையெழுதலை உணர்த்துதலின் திருப்படையெழுச்சி எனப்பட்டது.
இதில் ஞானமே வாளாகவும், நாதமே பறையாகவும், தியானமே வெண்கொற்றக் குடையாகவும், திருநீறே கவசமாகவும், தொண்டர்கள் படைவீரராகவும், இறைவனே போர்த்தலைவனாகவும், சிவலோக ஆட்சியே படையெழுச்சியின் பயனாகவும் உணர்த்தப்பெறுகின்றன.
திருவாசகம் - திருப்படை எழுச்சி
திருமுறை: 8.46.1
கலிவிருத்தம்
ஞானவா ளேந்துமையர் நாதப் பறையறைமின்
மானமா வேறுமையர் மதிவெண் குடைகவிமி
னானநீற் றுக்கவச மடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோநா மாயப்படை வாராமே.
பதம் பிரித்து:
ஞானம் வாள் ஏந்தும் ஐயர் நாதம் பறை அறைமின்
மானம் மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்
வானம் ஊர் கொள்வோம் நாம் மாயம் படை வாராமே.
இ-ள்:
ஞானமாகிய வாட்படையை ஏந்துகின்ற சிவபெருமானுடைய பரநாதமாகிய பறையைக் கொட்டுங்கள். பெருமைபொருந்திய இடபத்தை ஊர்தியாகக்கொண்டு ஏறுகின்ற இறைவன் சூடியுள்ள மதியாகிற வெண்குடையைப் பிடியுங்கள். பசுவினிடமிருந்து பெறுவதான திருநீற்றுக் கவசம் மெய்முழுதும் அடைய அதனுட்புகுந்துகொள்ளுங்கள். மாயப்படையாகிய பிரபஞ்சவாதனைதாக்காமல் நாம் சிவபுரத்தைச்சென்று பிடிப்போம் என்றவாறு.
பறை கொட்டுங்கள்; குடை பிடியுங்கள்; கவசம் பூணுங்கள்; மாயப்படை தாக்காமல் வான நாடாள்வோம் வாருங்கள் என்பது கருத்து.
ஆன நீறு - பசுவின் சாணத்தினின்றாகிய திருநீறு. ஆன் - பசு. அ - ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு.
மாயப்படை அழிய என்னாது வாராமே என்றது, யாம் போருக்கு ஆயத்தமானாற்போதும்; மாயப்படை தாமே வலசு வாங்கி ஓடிவிடும்; அழித்தலாகிய கருணையற்ற செயலைச் சைவ சீலர்களாகிய நாம் செய்யவேண்டாம் என்பது குறிப்பு.
இங்ஙனம் படையெழுச்சியின் வாயிலாகப் பிரபஞ்சப்போர் உணர்த்தப்பெறுதல் காண்க.
===========
தருமை ஆதீன உரை:
பொ-ரை:
ஞானமாகிய வாளைத் தாங்கிய இறைவரது பிரணவமாகிய நாதப்பறையை முழக்குங்கள்! பெருமையாகிய குதிரையை ஏறுகின்ற இறைவனை அறிகின்ற அறிவு என்கிற வெண்குடையைக் கவியுங்கள்! திருநீறாகிய கவசத்திற்குள் புகுந்துகொள்ளுங்கள்! இவ்வண்ணம் செய்வீர்களாயின் மாயப் படையை வென்று முத்தி உலகைக் கைக்கொள்ளலாம்.
கு-ரை: "மாயப்படை வாராமே" என்பதை முதற்கண் கூட்டுக.
அறியாமையும், மயக்க உணர்வும் ஆகிய பகையை அழிப்பது மெய்யறிவே யாதலின், அவ்வாற்றால் அவற்றைப் போக்குகின்ற இறைவனுக்கு, 'ஞானமே வாள்' என்று அருளினார். 'இறைவனுக்கு நாதமே பறை'' (தி.8 கீர்த்தி. 108; தசாங்கம் 8) என முன்னர் அருளியவற்றைக் காண்க. அதனை அறைதலாவது, 'நமச்சிவாய வாழ்க; என்றற் றொடக்கத்தன போல, வாழ்த்து வகையானும், வணக்க வகையானும், வெற்றி வகையானும் சிவநாமங்களை வானளாவ முழக்குதல். மான மா - பெருமையமைந்த குதிரை. இஃது அடிகள் தமக்கு வந்து அருள்செய்த வகைபற்றிக் கூறியது. மதிவெண்குடை - சிலேடை. வெண்மை கூறினமையின், மதி, மலந்தீர்ந்த உயிரினது அறிவு; அதனுள் இறைவன் சோதிக்குட் சோதியாய்த் தோன்றலின், அதனை அவற்குக் குடையாகக் கூறினார். ஆன - பொருந்திய. 'கவசம் புகுமின்கள்' என இயையும். அடைய - முழுதும். இவ்வாற்றால் நாம் வான ஊரைத் தப்பாது கொள்வோம்' என்க. வானம் - சிவலோகம். மாயப்படை - நிலையாமையாகிய படை.
===========
--
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பி.கு: அகராதியில்:
'வலசை' = "emigration", "flight from home"
'வலசைவாங்குதல்' = 'to emigrate";
Thevaram and other Saivism info: http://www.geocities.com/nayanmars/
__________________________________________________
Do You Yahoo!?
Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
http://mail.yahoo.com
[Non-text portions of this message have been removed]
------------------------ Yahoo! Groups Sponsor --------------------~-->
Home is just a click away. Make Yahoo! your home page now.
http://us.click.yahoo.com/DHchtC/3FxNAA/yQLSAA/GE2qlB/TM
--------------------------------------------------------------------~->
Yahoo! Groups Links
<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/santhavasantham/
<*> To unsubscribe from this group, send an email to:
santhavasanth...@yahoogroups.com
<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/