http://hubmagazine.mayyam.com/oct09/?t=13464
மரபில் நகைச்சுவை - 34
- அனந்த்
<> சென்னைச் சிறப்பு <>
திரிவிக் கிரமன் திரும்பக் குறளாய்த்
திரிந்ததுபோல் செம்மைத் தமிழ்தன் - உருமாறி
'இன்னாப்பா, இஸ்துகினு' என்பனபோல் ஆனவிதம்
சென்னைக்கே ஆன சிறப்பு. 1
காலையில் கேட்கும் ‘கசுமாலம், எந்திரி!'
சாலையில் ‘சாவுக் கிராக்கியிது' -மாலையில்
'துன்றான்பார் சோமாரி' இன்னபல சொல்லழகு
சென்னைக்கே ஆன சிறப்பு. 2
'நாஷ்டாவை முட்ச்சுகினு' நாமேறும் ஆட்டோக்கள்
கோஷ்டியாய்ச் சேர்ந்து குரலெழுப்ப - 'ராஷ்டா'வில்
மின்னல் எனவிரையும் விந்தைக்கண் காட்சியெங்கள்
சென்னைக்கே ஆன சிறப்பு. 3
(கோஷ்டி=கோட்டி, கூட்டம்; ஒருவரோடு ஒருவர் கூடியிருத்தல்; ராஷ்டா=ரஸ்தா: வீதிக்கான பெயரின் மரூஉ)
செல்லுகின்ற ஊர்தி சிறிதும்அலுங் காதிருந்தால்
நல்லதல்ல நம்முடலுக் கென்பதனால் - கொல்வதுபோல்
சென்றுகுழி யுள்புகுந்து சிந்திக்க வைத்தல்நம்
சென்னைக்கே ஆன சிறப்பு. 4
கையிலே காசுடன் காய்கறி வாங்கையில்நாம்
செய்கின்ற பேரம் பிடிக்காமல் - வைபவரின்
கன்னாபின் னாமொழியைக் காதுகுளி ரக்கேட்டல்
சென்னைக்கே ஆன சிறப்பு. 5
கற்றபின் நிற்கக் கடற்கரையில் கல்லாக
நிற்கின்ற வள்ளுவர்தம் நீதிகளைச் - சுற்றிஇரை
தின்னவரும் காக்கைக்குச் செப்புகின்ற சீர்மையிந்தச்
சென்னைக்கே ஆன சிறப்பு. 6
மல்லிகைப் பூமணத்தில் மாட்டின் இடுகையொடு
பொல்லாப்பே ருந்தின் புகைகலந்து - நில்லாமல்
என்றுமுள கூவமணம் ஏற்றுநமை ஊக்குவித்தல்
சென்னைக்கே ஆன சிறப்பு. 7
வெய்யிலின் சூட்டில் மெழுகாகும் சாலையிலே
ஐயய்யோ என்றலரும் ஆட்களெல்லாம் - தையலாள்
சென்றதிசை நோக்கித் திரும்பித் துயர்மறத்தல்
சென்னைக்கே ஆன சிறப்பு. 84
மழைத்திவலை கண்டவுடன் மாநகர்ச் சாலை
குழைசேற்றுக் குட்டையாய்த் தம்மை - விழவைத்தும்
என்றுமதைச் சீர்செய்ய எண்ணா மதியுடையோர்
சென்னைக்கே ஆன சிறப்பு. 9
சூரியனோ ஈரிலையோ இங்குநமைத் துன்புறுத்த
யாரிருந்தால் தானென்(று) அடுத்தடுத்துத் - தேர்தலிலே
என்ன முடிவெனினும் ஏற்கும் பெருந்தன்மை
சென்னைக்கே ஆன சிறப்பு. 10
<><><><><><><>
இலக்கணக் குறிப்பு: இந்தப் பாடல்கள் வெண்பா இனத்தைச் சேர்ந்தவை என்பது இந்தத் தொடரைப் படித்து வருவோர்க்கு நன்றாகத் தெரிந்த செய்தி. ஒரே ஈற்றடியை வைத்துப் பல வெண்பாக்களை அமைக்கும் போது, எல்லாப் பாடல்களின் கடைசி இரண்டு அடிகளும் எதுகை ஒத்துப் போக வேண்டிய தேவை ஏற்படும்.
இலக்கணமல்லாத குறிப்பு: எவ்வளவோ சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னையைப் பற்றி இப்படிக் கேலி செய்து எழுதுவது நம் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தவேயன்றி வேறெந்த எண்ணத்திலும் அன்று. சென்னையில் பிறந்தவனாகிய எனக்கு அந்த நகர் எப்படியிருந்தாலும் பொன் குஞ்சாகவே மகிழ்ச்சி தரும்!
என்னாவே சும்மா எடுத்து விடுதீக
கன்னாபின் னாத்தமிழேன் கத்தீக- சொன்னாக்க
வல்லிசாத் தேனு வழியும்,ஓய் சொல்வேளோ
நெல்லைத் தமிழுக்கு நேர்!
இலந்தை
வள்ளியூ ரில் பிறந்த வ.வே சு சென்னையிலோர்
புள்ளி, எனவே, புகழ்ந்துவிட்டார்- என்செய்ய
எல்லாக் கலவையும் இங்கேதான், வேண்டாமே
நெல்லைக்குச் சென்னை நெடி!
அன்புடையீர்இராஜ.தியாகராஜனின் வணக்கம்.இந்த நெல்லை வெண்பா கண்டேன். முன்பு மரத்தடியில் திரு ஹரன் பிரசன்னா எழுதிய நெல்லை வெண்பாக்கள் இதோ:இப்போது மரத்தடி தளம் கூட சரியாக இயங்க வில்லை.(:(நெல்லைக்கும் உண்டோ நிகர்? (திரு ஹரன் பிரசன்னா)
==============================நெய்ச்சுவையும் பாற்சுவையும் நீர்ச்சுவையிற் தோற்றிடும்
மெய்யைக் குளிர்வித்து மென்காற்று மீண்டிடும்
நெல்வயல்கள் சேறோடு நேயம் உரைத்திடும்
நெல்லைக்கு முண்டோ நிகர்.ஊரெங்கும் பாய்வதும் ஓய்வின்றி ஓடுவதும்
பாரில் சிறந்ததும் பாடத் தகுந்ததும்
சொல்லில் அடங்கிடா சொக்கும் பரணிசெய்
நெல்லைக்கு முண்டோ நிகர்