வேணு கோபால் சர்மா-வள்ளுவர் கிடைத்துவிட்டார்

40 views
Skip to first unread message

மோ .நெடுஞ்செழியன் மோகன்இராதிகா

unread,
Sep 16, 2011, 9:05:15 AM9/16/11
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com


  *வள்ளுவரின் ஓவியத்திற்கு பொன்விழா*    "வள்ளுவர் கிடைத்துவிட்டார்' என்ற
பாவேந்தர் பாரதிதாசனின் பாராட்டுரைக்கும் "எமக்குக் கிடைத்த இரண்டாவது ராஜா
ரவிவர்மா' என்று ஓவிய மேதை மாதவன் வழங்கிய புகழுரைக்கும் உரியவர்.தமிழகத்தின்
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்த முதல் நிகழ்வின்
காரணகர்த்தா. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் உட்பட பன்னிரெண்டு மொழிகளில் வல்லமை
படைத்தவர். உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் உருவத்தை
ஓவியமாக வரைந்து, தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர் ஓவியப் பெருந்தகை
கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

அவரின் நூற்றாண்டு விழாவும் வள்ளுவரின் ஓவியத்தை வரைந்ததன் ஐம்பதாம் ஆண்டு
நிறைவுவிழாவும் தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தத் தருணத்தில், மறைந்த
வேணு கோபால் சர்மாவின் வாரிசான சீதாராம் சர்மா அவர்கள், தந்தையாரின் நினைவுகளை
பகிர்ந்துகொள்ளுகிறார்.

சென்ற தலைமுறையினருக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் மற்றும் எதிர்கால
சந்ததியினருக்கும் "உலகப் பொது மறையான திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்
என்றால் இவர்தான்' என்று அறிமுகப்படுத்திய ஓவியக் கலைஞர் வேணுகோபால் சர்மா.
இவர் வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைத்தான் தமிழக அரசு உட்பட, தமிழ் அறிஞர்கள்
அனைவரும் அங்கீகரித்துள்ளனர். இந்நிலையில் அவரது வாரிசான சீதாராம் சர்மா, இந்த
ஓவியத்தின் பின்னணி குறித்து தந்தையார் பகிர்ந்துகொண்ட விடயங்களை எங்களுக்காக
அவர் சொல்லும்போது.

மறைந்த சிவப்பு சிந்தனையாளர் தோழர் ஜீவா, இந்த ஓவியத்தைப் பார்த்து, ""இது
ஓவியமல்ல, திரு வள்ளுவரின் புகைப்படம். இல்லாத ஒரு வரை மனக்கண்ணில்
காண்பதென்பது ஞானிகளால் மட்டுமே இயலக்கூடியது. கோபால் சர்மா, ஞானியாகி,
தன்னுடைய மனக்கண்ணில் இவரைக் கண்டு, புகைப்படம் எடுத்து, அதனை நமக்கு ஓவியமாகத்
தந்திருக்கிறார்'' என்றும் பாராட்டியதை முதலில் குறிப்பிட்டார். .

எனது தந்தையாருக்கு இளம் வயதில் காய்ச்சல் ஏற்பட்டு, கால் பாதிக்கப் பட்டது.
ஒன்பது வயதுவரை படுக்கையிலேயே இருக்க நேர்ந்ததால் தொடக்கக் கல்வி
பாதிக்கப்பட்டது. எங்களது உறவினரும் கம்பராமாயண பிரசங்கியுமான வேங்கட
சுப்ரமணியபாரதி என்பவர்தான் தந்தை யாருக்குக் கல்வி போதித்தவர். (இவருக்குத்
தான் முதன் முதலில் பாரதி பட்டம் வழங்கப்பட்டது). பதினான்காவது வயதில்
திடீரென்று விகடகவி செய்யும் திறமை பரிச்சயமானது. சிங்கம். புலி போன்ற
மிருகங்களின் குரலையும் காற்று உள்ளிட்ட இயற்கையின் ஒலியையும் தம்புரா போன்ற
இசைக் கருவிகளின் இசையையும் தன் விகடகவியில் கொண்டுவந்து பாராட்டைப் பெற்றார்.
அவரால் இசைக்க முடியாத ஒலி எதுவும் இல்லை என்ற எல்லைவரை அவரது விகடகவி ஆர்வம்
சென்றது. இதன்மூலம், அவரது உடல் நிலை தேறியவுடன் மைசூர் சமஸ்தானத்திற்கு
அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு இவரது திறனைக் கண்டு அரசவையின் ஆஸ்தான விகடகவியாக
நியமிக்கப்பட்டார். பின்பு கத்தியவால் சமஸ்தானத்திற்கு அனுப்பப்பட்டார்.
அங்கும் ஆஸ்தான விகடகவி கௌரவம் வழங்கப்பட்டது.

சுதந்திர இந்தியா உருவானதன் பின் மும்பைக்குச் சென்று திரைப்படத் தொழிலைக்
கற்றுக்கொண்டார். அதன்பின் சென்னைக்கு திரும்பினார். இதற்கிடையே
பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கம்பராமாயண பாடல்களில் தந்தைக்கு ஒன்பதாயிரம்
பாடல்களை மனப்பாடமாக தெரிந்திருந்தாலும்கூட, பொது மறைச் சிந்தனையால்
இயற்றப்பட்ட திருக்குறள் மீது தணியாத பற்று தீவிரமாக இருந்தது. கிரேக்க
ஞானிகளின் தத்துவம், கீழை நாடுகளுக்குப் பொருந்தாமல் இருக்கலாம். மனுநீதி
வலியுறுத்திய தத்துவத்திற்கு மேலைநாடுகளில் வரவேற்பு இல்லாமலிருக்கலாம். ஆனால்
அனைத்துலகினரும் ஒப்புக்கொள்ளும் சிந்தனை, திருக்குறளில் மட்டுமே
இடம்பெற்றிருக்கிறது என்பதில் உறுதியான கருத்தினைக் கொண்டிருந்ததால் அவருக்கு
ஒரு உருவம் தர வேண்டும் என்று எண்ணினார். அப்போது அவருக்கு இருபத்தியொன்பது
வயது. வரைந்தார். திருப்தி அளிக்கவில்லை. மீண்டும் வரைந்தார். மனம் நிறைவாக
வில்லை. பின் மீண்டும் மீண்டும் வரைந்து விட்டு, ஒவ்வொரு திருக்குறளையும்
வாசிப்பாராம். வாசித்தவுடன் வரைந்த ஓவியத்தையும் பார்ப்பாராம். ஏதேனும் சிறிய
அளவிலான உறுத்தல் இருந்தாலும் மீண்டும் புதிதாக வரையத் தொடங்குவாராம். ""1330
குறளையும் படித்து முடித்தவுடன் நான் திரும்பிப் பார்ப்பேன். எனக்கு மன நிறைவு
ஏற்படும்வரை வரைந்து கொண்டேயிருப்பேன். நூற்றுக்கணக்கான முறைகள் திருவள்ளுவர்
படத்தினை வரைந்திருப்பேன். எது வுமே திருப்தியளிக்கவில்லை'' என்று
சொல்லிக்கொண்டேயிருப்பாராம்.

இறுதியாக இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து ஒரு உருவத்தை
வரைந்திருக்கிறார். திருவள்ளுவர் நெசவாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்று
அறியப்படுவதால், அதனுடைய குறியீடாக கழுத்தில் ஒரு நூல் கயிறையும் இணைத்து
வரைந்திருந்தார்.
இதற்காக அவர் எடுத்துக் கொண்ட கால அளவு எவ்வளவு தெரியுமா
முப்பது ஆண்டுகள். ஆம். அவருடைய 29ஆவது வயதில் வரையத் தொடங்கி, 59ஆம்
ஆண்டில்தான் நிறைவு செய்தார்.

இதனிடையே, அவருக்கு 72 மேள கர்த்தா ராகங்கள், நாட்டிய சாஸ்திரம், வான
சாஸ்திரம், ஓவியம், மரபுக்கவிதை, பன்மொழித் திறமை என அவருடைய தனித் திறன்களின்
எல்லை விரிவடைந்து இருந்த தால் அவரைச் சந்தித்து ஆலோசனை கேட்பதற்காக அறிஞர்கள்
வந்து கொண்டேயிருப்பார்கள். அனைவரிடமும் இயல்பாக விவாதித்தாலும் தன்னுடைய
மனதில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக
வித்திட்டிருந்தார். அதனால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை எடுத்துக்
கொண்டாராம். எனது தந்தை கோபப்பட்டதே கிடையாது. யாரையும் ஏசியது கூட கிடையாது.
அவருக்கு விரோதிகளோ, எதிரிகளோ இல்லை. மிகவும் சாந்தமானவர். அதிர்ந்து பேசக்கூட
மாட்டார். நான் சேகரித்து வைத்திருக்கும் அவருடைய நாற்பதாண்டு கால டைரியில்
ஒருவரைக் கூட குறை கூறவில்லை. இத்தனைக்கும் மூன்று திரைப்படங்களைத் தயாரித்து,
அனைத்துப் பொருளையும் இழந்தவர். எல்லோருடைய வாழ்விலும் நல்லது, கெட்டது என
இரண்டும் இணைந்தேயிருக்கும். இவருடைய வாழ்விலும் கெட்டவைகள்
நடைபெற்றிருக்கலாம். ஆனால் அதனை பதிவுச் செய்யவில்லை.

இந்த நிலையில் சென்னைக்கு வரும் போதெல்லாம் என்னுடைய தந்தையாரின் வீட்டில்
தங்குவதை வழக்கமாகக் கொண்டி ருந்த பாவேந்தர் பாரதிதாசனிடம், ஒரு முறை,
""வாருமய்யா. உள்ளே சென்று மறைத்து வைக்கப்பட்டிருக்கிற அந்த திரைச் சீலையை
அகற்றிப் பாருமய்யா!'' என்றிருக்கிறார். பாவேந்தரும் நட்புரிமையுடன் உள்ளே
சென்று, திரையை விலக்கிப் பார்த்து விட்டு ""அட வள்ளுவன்...'' என்றிருக்கிறார்.
பின் அந்த ஓவியத்தைச் சிறிது நேரம் பார்த்து விட்டு என்னுடைய தந்தையிடம் ஒரு
குறிப்பைத் தந்திருக்கிறார். சமுதாயம் கடந்த வரான வள்ளுவனுக்கு, கழுத்தில்
நெசவாளர் சமுதாயத்தின் குறியீடு எதற்கு? அதனை அகற்றிவிடுமய்யா!
என்றிருக்கிறார். அதிலுள்ள நியாயமான காரணத்தினை புரிந்து கொண்ட என் தந்தையும்
அந்தக் குறியீட்டை அகற்றியதோடல்லாமல், நாம் இப் போது பார்த்துக்கொண்டிருக்கும்
வள்ளுவரின் இறுதியான வடிவத்தை வரைந்திருக்கிறார். எனவே, நீங்கள் தரிசிக்கும்
திருவள்ளுவரின் ஓவியத்திற்குப் பின்னால் முப்பதாண்டு கால உழைப்பு
மறைந்திருக்கிறது. அத்துடன் என்னுடைய தந்தை, வள்ளுவனைக் கண்டு விட வேண்டும்
என்ற கனவும் மெய்யாகியிருக்கிறது.

இதனைப் படிக்கும் நண்பர்கள், மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் (உருவாக்கி
கொண்டாலும் சரி) திருவள்ளுவரின் படத்தினைப் பாருங்கள். அந்த முகத்தில் எந்த
சாதியின் அடையாளத்தையோ, எந்த மதத்தின் குறியீட்டையோ பொருத்திப் பார்க்க இயலாது.
ஆசிய இனத்தவன், ஐரோப்பிய இனத் தவன் என்று வகைப்படுத்தக்கூட இயலாது. இதன்மூலம்
எப்படி திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகிறதோ, அதே போல் அவரது உருவமும்
பொதுவாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் அந்த உருவம்.

வீரகேசரி நாளேடு

Reply all
Reply to author
Forward
0 new messages