வவுனியா: தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி யாழ்ப்பாணம் மற்றும் அதன்
சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை விதித்துள்ளது ராஜபக்சே அரசு.
இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்குடா நாட்டின்
அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகின்ற தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகள் உள்ளுர் கேபிள்
டிவி ஆபரேட்டர்களால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இவற்றில் மக்கள் டிவி நிகழ்ச்சிகளை மட்டும் மறு ஒளிபரப்புச் செய்வதற்கு ராணுவம் தடை
விதித்துள்ளது.
இதுகுறித்து அந்தந்தப் பகுதிகளில் இருந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இலங்கை
ராணுவத்தினர் நேரடியாக எச்சரிக்கை மற்றும் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
இதனையடுத்து கணிசமான பகுதிகளில் மக்கள் டிவி மறுஒளிபரப்புச் செய்யப்படுவது
நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடை சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இருந்து வருவதாகவும்,
மீண்டும் மீண்டும் கடுமையாக அமுல்ப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு
எதிராக நடக்கும் அநியாயங்களை உடனுக்குடனும் மக்கள் டிவி காட்டுவதே ராணுவத்தின்
கோபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.
இந்தப் பிரதேசத்தில் சன் டிவி மறு ஒளிபரப்பு தொடர்ந்து நடக்கிறது.