விடியற்பொழுதின் தோழமை - குல்சார் கவிதை மொழிபெயர்ப்பு

11 views
Skip to first unread message

Siddharth Venkatesan

unread,
Apr 11, 2008, 6:26:32 AM4/11/08
to panb...@googlegroups.com
இரவின் சஞ்சலம் பனியென இறங்கி மனதினை கனம்கொள்ளச்செய்கிறது விடியற்பொழுதுகளில். எப்புள்ளியிலும் குவிமையம் கொள்ளாது கனத்துக்கிடக்கும் மனதினை ஒன்றும் செய்வதற்கில்லை, பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. துஞ்சுதல் சாத்தியமற்ற இது போன்ற பொழுதுகள் கவிதைகளுக்கு உரியவை. இன்று அதிகாலையில் இணைய வேட்டையில் சிக்கியவை குல்சாரின் மூன்று உருது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு.  அம்மூன்று கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி...


குல்சார் கவிதைகள்
---------------------------


அரவமின்றி வருகிறாய், சொல்லாது செல்கிறாய்
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
தோட்டத்தில், சில பொழுதுகளில்....
புளியமரம்
காற்றினில் அசைகையில்,
கல் சுவற்களின் மேல் 
தெறிக்கும் நிழற்ப்புள்ளிகள்
உறிஞ்சப்படுகின்றன,
காய்ந்த நிலத்தின் மேல்
தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளைப் போல.
தோட்டத்தில், ஞாயிறொளி நிதானமாக விம்முகிறது.

மூடிய அறைகளில்...
விளக்கொளி துடிக்கையில்,
பரந்த நிழலொன்று எனை உண்ணத்துவங்குகிறது, ஒவ்வொரு கவளமாய்.
தூரத்திருந்து
கண்கள் எனையே பார்த்தபடி உள்ளன.
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
நாளின் அனேக சமயங்களில் எண்ணத்தில் இருக்கிறாய்.



***

வருக
--------
திடீரென
கோவமாய் அறையுள் நுழைந்த காற்று
புயலொன்றை கட்டவிழ்த்து விட்டது
திரைச்சீலைகள் படபடத்தன
மேஜை மேல் கண்ணாடிக்கோப்பைகள் பறத்தப்பட்டன
பக்கங்கள் விதிர்விதிர்க்க, ஒரு புத்தகம் அவசரமாய் தன் முகம் மூடியது
மைபுட்டி பாய்ந்து
வெற்றுத்தாள்களில் வண்ணத்தோரணங்களிட்டது
சுவற்றுச்சித்திரங்கள் ஆச்சரியத்தில் 
உனை காணவென எம்பிப் பார்த்தன

மீண்டும் இப்படி 
வா

என் அறையை
மூழ்கடி


****

மன்னித்துவிடு, சோனா
------------------------------

மன்னித்துவிடு, சோனா.
இம்மழையினில்
என் வரிகளின் நிலப்பரப்பினூடே
பயணிப்பது 
உனக்கு அசௌகர்யமாய் இருக்கலாம்.
இங்கு பருவம் பாராது பெய்யும் மழை.
என் கவிதைகளின் குறுக்குச்சந்துகள் பெரும்பாலும் ஈரமாகவேயுள்ளன.
குழிகளில் அனேகம் சமயங்களில் நீர் சேர்ந்து கிடக்கிறது.
இங்கு தடுக்கி விழுந்தால்
உன் கால் சுளுக்கிக்கொள்ளலாம், ஜாக்கிரதை. 

மன்னித்துவிடு. எனினும்.... 
உன் அசௌகர்யத்திற்கு காரணம்
என் வரிகளில் வெளிச்சம் சற்று மங்கலாக இருப்பது தான்.
நீ கடக்கையில்
புலப்படாது கிடக்கின்றன
வாயிற்படியின் கற்கள்
நான் அடிக்கடி இடித்து கால்நகம் பெயர்த்துக்கொள்வேன் இதில்
குறுக்குச்சாலையில் நிற்கும் தெருவிளக்கு
யுகங்களாய், எறியாமல் நிற்கிறது.
நீ அசௌகர்யப்பட்டுள்ளாய்.
மன்னித்துவிடு.  இதயத்திலிருந்து கேட்கிறேன், மன்னித்துவிடு. 



தமிழில் : சித்தார்த். வெ


--
-----------------------------------------
http://angumingum.wordpress.com
Reply all
Reply to author
Forward
0 new messages