தமிழில் வழங்கப்படும் பிறமொழிச்சொற்களை எழுதும் முறை

27 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 27, 2026, 2:27:21 PM (13 days ago) Jun 27
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/photo/?fbid=27666778336267293&set=a.278177815554048

- கவிஞர் மகுடேசுவரன்

write Tamil.jpg
பிறமொழிச் சொல்லொன்று தமிழ்ச்சொல்போன்றே தமிழில் வழங்குமானால் அதற்குச் ‘தற்சமம்’ என்று பெயர். தானே தமிழ்ச்சொல்லுக்குச் சமம். கமலம், கீதம், கருணை, ஆரோக்கியம் போன்ற சொற்களைப் பாருங்கள். இவற்றைப் பிறமொழிச் சொற்களென ஒருவர் இனங்கண்டு சொன்னால்தான் தெரியும். இல்லையேல் தமிழ்ச்சொல் என்றே கருதியிருப்போம். இத்தகைய பிறமொழிச் சொற்கள்தாம் தற்சமச் சொற்கள்.

தமிழுக்குள் இல்லாத பிறமொழி ஒலிப்பைக்கொண்ட பிறமொழிச் சொற்கள் தமிழுக்கேற்ற வடிவத்தைப் பெற்ற பிறகே தமிழில் வழங்கலாகும். அவற்றைத் தற்பவச்சொற்கள் என்போம். நஷ்டம், ஜாமம், விஷம், வேஷம், பாஷை, கிருஷ்ணன் போன்ற சொற்களைப் பாருங்கள். இவற்றிலுள்ள பிறமொழி ஒலிப்பு தமிழில் இல்லை. அவற்றுக்கேற்ற வகையில் தமிழில் மாற்றி ஒலிப்போம். அவ்வாறே எழுதுவோம். நட்டம், சாமம், விடம், வேடம், பாடை, கிருட்டிணன் என்று எழுதுவோம். இவ்வாறு மாற்றம் பெறுவதுதான் தற்பவம்.

தமிழ் எழுத்துகள் ஒலிப்புகள் மட்டுமின்றித் தமிழ்ச்சொல்லுக்கேயுரிய இலக்கண அமைப்பின்படி இல்லாத பிறமொழிச் சொற்களும் தமிழுக்கேற்றவாறு மாற்றம் பெற்ற பிறகே வழங்கப்படும்.

தமிழின் தனிச்சிறந்த இயல்புகளில் ஒன்று - ஒரு சொல்லின் முதலாம் எழுத்து தனிக்குறிலாக இருக்கையில் இரண்டாம் எழுத்தாக ர் என்ற மெய்யெழுத்து வாராது. அப்படி வந்தால் அவற்றைப் பிறமொழிச்சொற்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம்.

கீழ்க்கண்ட சொற்களைப் பாருங்கள் :

சர்க்கரை, அர்ச்சனை, கர்ப்பம், தர்மம், வர்மன், சர்ப்பம், மர்மம்.

மேற்கண்ட சொற்களில் முதலெழுத்து குறிலாக இருக்கையில் அடுத்து வரும் இரண்டாமெழுத்து ர் என்ற மெய்யாக இருக்கிறது. இத்தகைய சொல்லமைப்பில் இருந்தாலே அவை பிறமொழிச் சொற்களாம். தமிழில் இவ்வாறு ஒரு சொல் அமையாது.

இவற்றைத் தற்பவமாக்கித்தான் தமிழில் வழங்கவேண்டும். அதனால் என்ன செய்கிறோம் ?
ர் என்ற மெய்யெழுத்தினை ரு என்ற உயிர்மெய்யாக்கிவிடுகிறோம்.

சருக்கரை, அருச்சனை, கருப்பம், தருமம், வருமன், சருப்பம், மருமம்.

தர்மம் என்றால் வடசொல். தருமம் என்பது அதன் தற்பவத் தமிழ்வடிவம். தர்மபுரி என்று எழுதாமல் தருமபுரி என்று எழுதுவதன் அடிப்படை இதுதான். தருமபுரம் மடம்.

தர்மன் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள படத்தலைப்பு தருமன் என்றிருந்தால் தமிழ்த்தன்மை பெற்றிருக்கும். தருமன் என்னும்போது தருபவன் என்கின்ற தமிழ்ப்பொருளையே, தமிழ்வழியாகவே கொள்ளமுடியும். தரும் செய்கைதானே தருமம் !

அண்மைக்காலமாக இத்தகைய அடிப்படைகள் எவையும் தமிழில் வழங்கப்படும் பிறமொழிச்சொற்களில் பின்பற்றப்படா நிலையைக் காண்கிறோம். சொற்களை மிகச்சரியாக ஆளவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம்.

- கவிஞர் மகுடேசுவரன்

தேமொழி

unread,
Jul 6, 2026, 2:09:02 PM (4 days ago) Jul 6
to மின்தமிழ்


- கவிஞர் மகுடேசுவரன்

grammar.jpg
நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளில் ‘பொன்னகர்’ இலக்கணக் குறிப்பு கூறுக - என்று ஒரு வினாவைக் கண்டேன்.
அதற்குத் தந்திருந்த விடை வாய்ப்புகள் இவை :
(A). இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
(B). நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
(C). பண்புத் தொகை.
(D). உவமைத் தொகை.
இவ்விடை வாய்ப்புகள் யாவுமே முழுச்சொற்றொடர் அமைப்பில் அமையாத ‘பொன்னகர்’ என்பதற்கு விடையாகப் பொருந்தும்.
(A). பொன்னை விற்கும்/வாங்கும்/விளைவிக்கும்/உருக்கும்/மதிக்கும்/கொண்டிருக்கும் நகர் - என்றால் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
அருகில் உள்ள பொன்னகர்க்குச் சென்று வளையல், கம்மல் எல்லாம் வாங்கி வந்தாள் - இங்கே பொன்னகர் என்பது பொன்னை விற்கும் நகர்.
(B). பொன்னுக்குக் கிடைத்த/வாங்கிய/கொடுத்த/ஏங்குகின்ற நகர் என்றால் அது நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
போரில் வென்ற மன்னனுக்கு ஈடாகப் பொன்னகர் ஒன்று தரப்பட்டது. இங்கே பொன்னகர் என்பது பொன்னுக்கு ஈடாகக் கிடைத்த நகர்.
(C). பொன்னகர், வெள்ளிநகர், வைரநகர், முத்துநகர், மாணிக்க நகர் என அருகருகே பல நகரங்கள் இருந்தால் அது இருபெயரொட்டுப் பண்புத் தொகையும் ஆகும்.
(D). பொன்னைப் போன்ற நகர் என்று உவமைத் தொகையாகவும் கொள்ள முடியும். நாங்கள் வாழும் நகரைப் பற்றி என்ன ஏளனமாக நினைத்தீர்கள் ? பொன்னகராக்கும் அது. பொன்போன்ற நகர் என்ற பொருளில் உவமைத்தொகை.
இவ்வாறு எந்தச் சொற்றொடர் அமைப்பையும் தாராமல் ஒரு தொகைநிலைத் தொடர்க்கு இலக்கணக் குறிப்பு கேட்பது தமிழறிவையும் மொழியடிப்படைகளும் மேலோட்டமாகக் கையாளும் மொழிக்குழு ஒன்றினால்தான் முடியும்.
இலக்கணக் குறிப்பு சொல்வது என்பது ஒன்றுக்கு மட்டுமே சொல்வதன்று. நீராரும் கடலுடுத்த... என்ற தமிழ்த்தாய் வாழ்த்தின் அனைத்துத் தொடரமைப்புக்கும் இலக்கணக் குறிப்பு சொல்லும்படி ஒருவரின் தமிழறிவு இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக வாழ்த்துப்பாவின் ஈரடிகட்கு மட்டும் இருசொல் அமைப்புகளாகப் பிரித்து இலக்கணக் குறிப்பு சொல்கிறேன், பாருங்கள்.
நீர் ஆரும் - எழுவாய்த் தொடர்
ஆரும் கடல் - பெயரெச்சத் தொடர்
கடல் உடுத்த - இரண்டாம் வேற்றுமைத் தொகை.
உடுத்த நிலம் - பெயரெச்சத் தொடர்
நிலமடந்தை - உருவகம்.
மடந்தைக்கு எழில் - நான்காம் வேற்றுமைத் தொடர்
எழில் ஒழுகும் - எழுவாய்த் தொடர்
ஒழுகும் சீர் - பெயரெச்சத் தொடர்
சீர் ஆரும் - எழுவாய்த் தொடர்
ஆரும் வதனம் - பெயரெச்சத் தொடர்
வதனம் எனத் - எழுவாய்த் தொடர்
எனத் திகழ் - வினையெச்சத் தொடர்
திகழ்பரதம் - வினைத்தொகை
பரதக்கண்டம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கண்டம் இதில் - எழுவாய்த் தொடர்
இவ்வாறு முழுப்பாட்டுக்கும் இலக்கணக் குறிப்பு சொல்ல முடியும். சொல்லவேண்டும். அதற்கு முழுப்பாடலும் நமக்குத் தெரியவேண்டும். வெறுமனே ஒரு கேள்வியும் இலக்கணக் குறிப்புமாய் இருந்தால் எந்தப் படிப்பனையும் சேர்வதாய் ஆகாது.
முழுப்பாட்டுக்கும் இலக்கணக் குறிப்பு சொல்லிவிட்டால் அவரைத் தமிழ்த்துறைக்குத் தலைவர் ஆக்கவேண்டும். தமிழ்ச் சங்கத்துப் பொறுப்புகளில் இத்தகைய தகுதியுடையோர் அமரவேண்டும்.
இலக்கணக் குறிப்பினை எங்கேயிருந்து தொடங்கவேண்டும் தெரியுமா ? உங்கள் பெயரிலிருந்து தொடங்கவேண்டும்.
உங்கள் பெயர்க்கு என்ன இலக்கணக் குறிப்பு ? உங்கள் பெயரும் சொற்றொடர்தானே ? அவரவர் பெயர்க்கு இரண்டு செய்திகள் முதலில் அவரவர்க்குத் தெரிந்திருக்க வேண்டும்.
அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரின் இலக்கணக்குறிப்பு. (இலக்கணக் குறிப்பு என்பது மொழியிலக்கணத்தில் அத்தகைய தொடரமைப்பு பெற்றிருக்கும் பெயர்.)
சுசீலா, லதா, எனில் என்ன பொருளென்றே தெரியாமல் வழங்கிக்கொண்டிருப்பவர்கள்தாமே நாம் ?
சு - தூய்மை. சீலா - குணம். சுசீலா - தூய நற்பண்பினள்
லதா - கொடி. புஷ்பலதா - பூங்கொடி.
தமிழில் மிகச்சிறந்த இலக்கணக் கட்டமைப்போடு இலக்கணக் குறிப்பினைக் கொண்டிருக்கின்ற சில பெயர்களைக் கூறுகிறேன், பாருங்கள் ! (இவற்றைத் தமிழ் வகுப்பு மாணாக்கர்கட்குச் சொல்லிக் கொடுத்தேன்.)
வடிவேல் – வினைத்தொகை (வடித்த வேல்)
வளர்மதி - வினைத்தொகை (வளரும் மதி)
வடிவுக்கு அரசி – நான்காம் வேற்றுமைத் தொடர்
அடியார்க்கு நல்லார் – நான்காம் வேற்றுமைத் தொடர்
மங்கையர்க்கு அரசி - நான்காம் வேற்றுமைத் தொடர்
நச்சினார்க்கு இனியார் - நான்காம் வேற்றுமைத் தொடர்
நாவுக்கு அரசர் – நான்காம் வேற்றுமைத் தொடர்
வணங்கா முடி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
சூடாமணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
மாசிலா மணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
பொய்யாமொழி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
இளையராஜா – குறிப்புப்பெயரெச்சத் தொடர்
பிறைசூடன் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
(பிறையைச் சூடியவன்- சிவன்.)
வைரமுத்து – உம்மைத்தொகை
செந்தமிழ் – பண்புத்தொகை
செந்தாமரை – பண்புத்தொகை
பொன்னன் – குறிப்பு வினைமுற்று
தமிழ் வாழ்நன் = மூன்றாம் வேற்றுமைத் தொகை
(தமிழ் வாணன் என்று புணரும். தமிழால் வாழ்நன்)
பொன்வண்ணன் = உவமைத்தொகை
(பொன்னைப் போன்ற வண்ணன்)
பாரதி(க்குத்) தாசன் – நான்காம் வேற்றுமைத் தொகை
மகுடேசுவரன் என்ற என் பெயர்க்கு என்ன இலக்கணக் குறிப்பு ?
‘மகுடத்தை அணிந்த ஈச்சரன்’ என்ற பொருளில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
உங்கள் பெயர்க்கு என்ன பொருள், என்ன இலக்கணக் குறிப்பு என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள் !
Reply all
Reply to author
Forward
0 new messages