"பாராளக் கன்னன் இகல் பார்த்தனை
முன் கொன்று, அணங்கின்
காரார் குழல் களைந்து''
என்னும் அடிகளில் திரெளபதியின் "குழல் களைந்து" என்று வருவதன் பொருளில் ஒரு
மருட்சி காணப்படுகிறது.
குழல் களைதல் என்பதற்குக் "குழலை நீக்குதல்" என்றே இதுகாறும் பொருள்
கூறப்பட்டு வந்திருக்கிறது.
வில்லிபாரத உரையாசிரியர் மூதறிஞர் வை.மு.கோ.வும் இவ்வாறே
பொருள் கூறியுள்ளார்.
"முடியை நீக்குதல்" அதாவது, தலையை மொட்டையடித்தல் என்பது ஒருவரை
இழிவுபடுத்தும் அடையாளமாகும்.
ஒரு பாடலை மட்டும், அதிலும் ஈரடிகளை மட்டும் தனியாக எடுத்துப் பொருள் காண முனைந்தால் இப்படிப்பட்ட பூசி மெழுகும் உரைதான் எஞ்சும். அந்தச் சமயத்தில சகதேவன் உரைத்ததன் தொனிப் பொருள் என்ன? அதற்கு, இப்பாடலுக்கு முன்னால் வரும் (சகதேவனின் பதிலுரைத் தொடக்கமான) இரண்டு பாடல்களையும் இங்கே சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘போர் தேவலையா, சமாதானம் தேவலையா? நீ என்ன நினைக்கிறாய்... நீ என்ன நினைக்கிறாய்’ என்று ஒவ்வொருவராகக் கண்ணன் கேட்டுக்கொண்டு வரும்போது கடைசி கடைசியாக சகதேவன் முறை வருகிறது. சகதேவன் தொடங்குகிறான்:
சிந்தித்த படிநீயும் சென்றாலென்? ஒழிந்தால்என்? செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன்நிலம் வழங்காமல் இருந்தாலென்? வழங்கி னாலென்?
கொந்துற்ற குழலிவளும் முடித்தாலென், விரித்தாலென், குறித்த செய்கை
அந்தத்தின் முடியும்வகை அடியேற்குத் தெரியுமோ ஆதி மூர்த்தி!
(யப்பா டேய், திருட்டுக் கிஷ்டா! ஒன்ன எனக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் நீ கேக்கற. அடக்கமாவே பதில் சொல்றேன்.)
நீ நெனச்சபடி தூது போனா என்ன, போகாட்டி என்ன? துரியோதனன் நாட்டைத் தந்தால என்ன, தராவிட்டால் என்ன? (இதோ இருக்காளே இவ) தன் கூந்தலை முடிச்சாத்தான் என்ன, இல்லாட்டி, முடிக்காம அப்படியே இருந்தாத்தான் என்ன? நீ உன் உள்ளத்தில் குறித்திருக்கும் செய்கைதான் இறுதியில் நடக்கப் போகிறது. (சும்னாக்காட்டியும் பாவலாவுக்கு இப்படிக் கேக்கற... நீ ரொம்ப பெரியவன்றதும் எனக்குத் தெரியும்.... அதனால ஒண்ணு மட்டும் சொல்றேன்) உன் உள்ளத்தில் நீ என்ன தீர்மானம் செய்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியுமா என்ன? (தொனிப்பொருள்: நீ எப்டிக் கேட்டாலும் உன் மனசுல நீ நெனச்சிருக்கறது என்னான்னு எனக்கும் தெரீயும்...ம்க்கும்...)
முருகுஅவிழ்க்கும் பசுந்துளப முடியோனை அன்று அலகை முலைப்பா லுண்டு,
மருதிடைச் சென்று உயர்சகடம் விழ உதைத்துப் பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன்மாயை;
யான் அறிவேன். உண்மையாகத்
திருவுளத்துக் கருத்தெதுவோ அதுஎனக்கும் கருத்தென்றான் தெய்வம் அன்னான்.
மணம்வீசும் திருத்துழாய் மாலை அணிந்தவனே! அன்று பேய்ச்சி முலை உண்டவன்; மருத மரங்களின் நடுவில் தவழ்ந்து, (சிறு குழந்தையாக இருக்கும்போதே) மிகப் பெரிய இரண்டு மருத மரங்கள் வேரோடு பெயர்ந்து வீழுமாறு சென்றாய். சகடத்தைத் தொட்டிலில் இருந்தபடியே உதைத்துத் தூளாக்கினாய். இடையர்களின் வீட்டில் வளர்ந்தாய். (எப்பவுமே நீ அயோக்கியர்களை அழிப்பது ஒன்றே சிந்தையாகவும், எப்போதும் எளியவர்கள் நடுவிலேயே வீற்றிருப்பது வழக்கமாகவும் உடையாய்.) (யேய்! எங்கிட்டியா வெள்ளாட்டுக் காட்ற?) உன் மாயை மற்றவர்களுக்குத் தெரியாது. எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். உண்மையா ஒண்ணு சொல்றேன். (நீ இப்படி எல்லோரையும் கருத்துக் கேட்பது போல நடித்துக் கொண்டிருந்தாலும், உன் உள்ளத்தில் நீ தீர்மானித்திருப்பது எது என்று எனக்கும் தெரியுமாக்கும்...) உன் கருத்தே என் கருத்து...
இதுக்கு மேல, போரை எப்படி நிறுத்துவது என்று திரும்பத் திரும்ப ஐடியா கேக்கற மாதிரி நடிச்சிட்டே இருந்தேன்னு வையி. அதுக்கு பதில் சொல்றேன். போரை நிறுத்தணும்னா நாலு காரியம் ஆகணும்.
பாராளக் கன்னன்; இகல் பார்த்தனை முன் கொன்று, அணங்கின்
காரார் குழல் களைந்து, காலில் தளை பூட்டி
நேராகக் கைப்பிடித்து, நின்னையும்யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம் மாபாரதம் என்றான்.
தோ பாரு. கர்ணன் அரசு ஏற்கணும். அது நடக்கணும்னா, மொதல்ல தோ இருக்காம் பாரு (ஒன்னோட பிரியத்துக்கு உரிய) அர்ஜுனன், அவனைக் கொல்லணும். அப்புறம் தோ இருக்கா பாரு, இவ தலைய மொட்ட அடிக்கணும். அதெலலாத்துக்கும் முன்னால, நீ இருக்க பாரு, ஒன்ன என்ன பண்ணனும் தெரியுமா? உன் கால்ல விலங்கை மாட்டணும். கைகளைப் பிடித்து உன்னைக் கட்டிப் போட்டுவிட வேண்டும்..... இந்த நாலும் நடந்திருச்சின்னா, மகாபாரதம் நடக்காம தடுத்துடலாம். அதுல என்ன சந்தேகம்?
அர்ஜுனனை எப்படிக் கொல்ல முடியாதோ, திரௌபதி கூந்தலை எப்படிக் களைய முடியாதோ, உன்னை எப்படிக் கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டிக் கட்டிப் போட முடியாதோ... அப்படி மகாபாரதப் போர் வராமல் தடுப்பதும் முடியாத ஒண்ணுப்பா கண்ணா! (யார் கிட்ட நடிக்கிற?) இதுவும் போறாது. ராஜ்ஜியத்தைத் தூக்கி கர்ணன்கிட்ட குடுக்கணும் (துரியோதனன் கிட்ட இல்லியாக்கும்).. இந்த நாலும் நடந்தா போரைத் தடுக்கலாம். (இவை நடக்காது என்பது எவ்வளவு திட்டவட்டமோ, அவ்வளவு உறுதி போர் நடக்கும் என்பதும்.)
ஐயா திரௌபதி தலையை மொட்டை அடிக்கணும்னு சகதேவன் சொல்லல; முடியணும்னுதான் சொன்னான் அப்படிங்கறாரு. அப்ப, பார்த்தனைக் கொல்லவேண்டும், கண்ணனுக்குக் கை, கால் விலங்கு மாட்டிக் கட்டிப் போடவேண்டும் என்று சொன்னதற்கு என்ன பொருள்? :))
அரைப்பார்வை பார்த்தால் என்னிக்கும் இப்படித்தான் ஆகும். நாம எதையோ பூசி மெழுகுவோம். அங்க, அந்த விளக்கத்துக்குப் பொருந்தாம மத்த லைனெல்லாம் நிக்கும். நாம என்ன பண்ணுவோம்? பேசாம, சங்கடத்துக்கு உள்ளாக்கும் அந்த அடிகளை எல்லாம் மேற்கோள் காட்டாம விட்டுடுவோம். நமக்குத் தோதா இருக்கற எடத்த மட்டும் கத்திரிச்சு எடுத்துக்கிட்டு நல்லா வௌக்குவோம். :))
இப்படித்தான் பெரியவங்களெல்லாம் பல சமயங்களில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். அச்சு வாகனம் அவர்களுக்குத்தானே பட்டுக் கம்பளம் விரிக்கிறது! அறியாமை கோலோச்சும் காலம். போகட்டும். போறபடி போகட்டும்.
(தாரகை ஐயா! இது உங்கமேல வச்ச விமரிசனமன்று; கட்டுரைமேல் வைக்கப்பட்டிருக்கிறது. என் விளக்கம் பொருந்தாமை காணின், யாரும் வேறு எப்படிப் பொருத்துவது என்று பொருத்திக் காட்டலாம். நன்றி.)
--
அன்புடன்,
ஹரிகி.