நற்றமிழ் – 16 (30.11.2009)
6. சில பிழையான வாக்கியங்களும் திருத்தப்பட்ட வாக்கியங்களும்:
(இவற்றுள் பெரும்பாலானவை, பத்திரிகைகளினின்றும், சில நூல்களினின்றும் எடுக்கப்பட்டவை)
1. பிழை : சமுகத்தை முன்னேற்றுவது பொருப்புள்ள குடி மகனின் கடமையாகும்.
சரி: சமுதாயத்தை முன்னேற்றுவது பொறுப்புள்ள குடிமகனின் கடமையாகும். (‘று’- வல்லினம் வரல் வேண்டும்)
(‘சமுகம்’ என்பது பெரியோர்களை முன்னிலைப்படுத்த வழங்கும் சொல்லாகும். ‘சமுதாயம்’ என்பதுதான் மக்கள் கூட்டத்தை -பொதுமக்களைக் குறிக்கும் சரியான சொல். பெரும்பாலோர் சமுதாயத்தைக் குறிக்க (society) ‘சமுகம்’ என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள் - இது தவறு)
2. பிழை : கண்ணன் முருகன் மற்றும் கந்தன் வந்தனர்
சரி : கண்ணனும், முருகனும், கந்தனும் வந்தனர்’ (இப்படி எழுதுவது தான் தமிழ் முறைப்படி சரியானது. ‘And’ என்ற சொல்லுக்குப் பதில் ‘மற்றும்’ என்ற சொல் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அது அவ்வளவு சரியன்று.
(‘Thiru Aranganathan, commissioner and secretary’ என்னும் சொற்றொடரில், திரு. அரங்கநாதன், ஆணையர் மற்றும் செயலர்’- என்று இருபதவிகளைக் குறிக்க வேண்டுமானால் ‘மற்றும்’ பயன்படுத்தலாம். இது வழக்கில் வந்துவிட்ட புதியமுறை.)
3. பிழை : சென்னைப் பல்கலைக்கழக அணி போட்டியில் வெற்றி பெற்றுச் சுழல் கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
சரி : சென்னைப் பல்கலைக்கழக அணி போட்டியில் வெற்றி பெற்றுச் சுழல் கிண்ணத்தைத் தங்க வைத்துக் கொண்டது. (தங்க என்பது தான் சிறந்தது.)
4. பிழை: நல்லவைகளையும், கெட்டவைகளையும் பத்திரிகைகளில்
வெளியிடப்படுகின்றன.
சரி : நல்லவையும், கெட்டவையும் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன.
5. பிழை : இவர்கள் தரும் தொல்லையைச் சொல்லி முடியாது.
சரி : இவர்கள் தரும் தொல்லையைச் சொல்வது முடியாது.
6.பிழை : நல்லதையும், கெட்டதையும் பார்த்து அதனுள் நல்லதைக்கொள்க.
சரி : நல்லதையும், கெட்டதையும் பார்த்து அவற்றுள் நல்லதைக்
கொள்க. (பன்மையானதால் ‘அவற்றுள்’ என இருத்தல்
வேண்டும்.)
7. பிழை: இந்த செய்தியைப் பற்றிப் பல எழுத்தாளர்கள்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சரி : இந்தச் செய்தியை எழுத்தாளர் பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
(‘ச்’ வரல் வேண்டும்; ‘பற்றி’ அவசியமற்றது, ‘எழுத்தாளர் பலரும்’
என்றிருத்தல் சிறந்தது.)
8. பிழை : பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் இந்த கோவிலில் சிறப்பு
வழிபாடு நடக்கிறது.
சரி : வெள்ளிக்கிழமை தோறும் இந்தக் கோவிலில் சிறப்பு
வழிபாடு நடக்கிறது (‘பிரதி’ என்ற சொல் அவசியமற்றது.
‘வெள்ளிக்கிழமை’ போதும், ‘க்’ வரல் வேண்டும்).
9. பிழை : பத்து பழங்களில் ஒரு பழமே நல்லன.
சரி : பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லது.
(‘பத்து’ க்குப் பின் ‘ப்’ வரல் வேண்டும். ‘ஒரு பழம்’ என்பதால்
‘நல்லது’ என்ற ஒருமை வினை முற்று வரல் வேண்டும்).
10. பிழை : ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு
வாக்காளர்களுக்குக் குறையாமல் இருக்கக்கூடும்.
சரி : ஒவ்வொரு வீட்டிலும் ஓரிரு வாக்காளர்கள் இருத்தல் கூடும்.
(அ – து) ஒவ்வொரு வீட்டிலும் வாக்காளர்கள் ஓரிருவர்க்குக்
குறையாமல் இருத்தல் கூடும். (‘இருத்தல்’ என்ற சொல்தான் முக்கியம்).
11. பிழை : இருபது நூல்களுக்கு மேல் இந்த பெட்டியில் உள்ளன.
சரி : நூல்கள் இருபதுக்கு மேல் இந்தப் பெட்டியில் உள்ளன.
(‘நூல்கள் இருபதுக்கு மேல்’ என்பதுதான் சிறந்தது. ‘இந்த’
என்ற சொல்லுக்குப்பின் ‘ப்’ வரல் வேண்டும்).
12. பிழை : கண்ணன் அவற்றையெல்லாம் கண்டான்.
சரி : கண்ணன் அனைத்தையும் கண்டான். (இதுதான் சிறந்தது).
13. பிழை : நான் பால் சாப்பிட்டேன்.
சரி : நான் பால் குடித்தேன். (பால் ‘சாப்பிட்டேன்’ என்பது தவறு)
14. பிழை : பல ஊர்த் தண்ணீர்கள் சிலர் உடம்புக்குப் பிடிக்காது.
சரி : பல ஊர்த் தண்ணீர் சிலர் உடம்புக்குப் பிடிக்காது. (‘தண்ணீர்கள்’ என்பது சரியன்று).
15. பிழை : ஒரு எழுத்தாளர் ஒரு கூட்டத்துக்குப் போய் ஒரு
சொற்பொழிவு செய்தார்.
சரி : ஒர் எழுத்தாளர் ஒரு கூட்டத்துக்குப் போய்ச் சொற்பொழிவாற்றினார்.
(இதுதான் சிறந்தது. ‘ஒரு’ என்பது ‘ஓர்’ என்று இருத்தல் வேண்டும்).
16. பிழை : பாரதியார் சிறுவனாய் இருக்கும்போதே பாட்டெழுதினார்.
சரி : பாரதியார் சிறுவராய் இருந்தபோதே பாட்டெழுதினார்.
(‘இருந்தபோதே’ என இறந்த காலம் வரல் வேண்டும்.
சிறுவராய் என்று இருத்தல் வேண்டும்).
17. பிழை : இங்குள்ளது எல்லாம் நல்லதாள்களே.
சரி : இங்குள்ளவை எல்லாம் நல்ல தாள்களே.
(‘இங்குள்ளவை’ எனப் பன்மை வரல் வேண்டும்).
18. பிழை : நீங்கள் இங்கு கலந்துரையாடுவதன்றிப் பேசவும் வேண்டும்.
சரி : நீங்கள் இங்குக் கலந்துரையாடுவதோடு பேசவும் வேண்டும்.
(‘இங்கு’ க்குப் பின் ‘க்’ வரல் வேண்டும். கலந்துரையாடுவதன்றி’
என்பது தவறு. ‘கலந்துரையாடுவதோடு’ என்பது சிறந்தது.)
19. பிழை : கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதெல்லாம் கிடையாது.
சரி : கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதென்பது இல்லை.
(‘என்பது இல்லை’ என வருவதுதான் சிறப்பானது).
20. பிழை : மாடுகள் நிறைய இருப்பதால் அங்கு கொசுக்கள்
பெருகுவதற்கு மிகவும் வசதியாய் இருக்கிறது.
சரி : மாடுகள் நிறைய இருப்பதால் அங்குக் கொசுக்கள்
பெருகுவதற்கு அதிக வசதி இருக்கிறது.
(‘அங்கு’ என்ற சொல்லுக்குப் பின் ‘க்’ வருதல் வேண்டும். ‘வசதி’ அல்லது ‘வாய்ப்பு’ இருக்கிறது என்பது தான் சரியானது).
(……..பேராசிரியர் முனைவர் தி. முத்து - கண்ணப்பன், அவர்களின் “தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்……)
…….நற்றமிழ் – 17 நாளை (1.12.2009) வரும்….
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
அன்பின் தேனி ஐயா! நலம்தானே? 6-ஆம் தேதி சந்திக்கிறோம் இல்லையா?
இப்போது நற்றமிழுக்கு வருவோம்..
இன்னொரு முறை சொல்லிப் பாருங்கள்…..
“இவர்கள் தரும் தொல்லை சொல்லி மாளாது (அ) முடியாது” இதுதானே நீங்கள் சொல்ல வருவது?
“தொல்லை” என்று வரும்போது சரி;
“தொல்லையை” என வரும்போது தொல்லையைச் சொல்வது முடியாது என வரவேண்டும் என்பதுதான் சொல்லப்பட்டிருக்கிறது.