ஆரம்பம் ரொம்ப பயமுறுத்திவிட்டது. பழைய மாசேதுங் காலத்து Red Army Parade
போல் அடுக்கடுக்காய் இராணுவ தளவாடங்கள், கையில் துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்கள், டாங்குகள், ராக்கெட்டுகள், misseles of all sorts, விமான
அணிவரிசை. சரி மூடித்தொலைக்கலாம் என்றால், என்னதான் இருக்கிறது
அவர்களிடம் பார்த்துவிடலாமே என்று ஒரு அசட்டு ஆசை. இந்த Parade
மற்றவர்களை பயமுறுதத்தானே! ஜப்பான் வாலை சுருட்டிக்கொண்டு ஒடுங்கி
இருப்பதை கற்பனை செய்ய முடிந்தது. கடைசியில் வந்த அணு ஆயுத தடவாளங்களைப்
பார்த்த பிறகு இந்தியாவும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதே விவேகம் என்று
தோன்றியது. Extremely impressive parade.
எப்படியோ 1 மணி நேரம் தாக்குபிடித்து மூடலாம் எனும் போது சீனாவின்
அரசியல் சித்தாந்தப் படகுகள் வர ஆரம்பித்தன. பிதாமகர் மாசேதுங் முதலில்.
எப்படி வெட்டு அருவாள் கம்யூனிசம் மெல்ல பட்டுப் போன கம்யூனிசமாகிறது
என்று அடுத்த மூன்று தலைமுறைத் தலைவர்கள் பற்றிய படகுகள். சீனாவிற்கு
ஐந்துமுறை போய் வந்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் அதை சோசலிச, கம்யூனிச
நாடு என்று யார் சொன்னாலும் `இல்லை` என்று வேட்டி போட்டு தாண்டி சத்தியம்
பண்ணமுடியும் என்று தோன்றுகிறது. அது என்ன கம்யூனிசம்? நம்ம எம்.ஜி.ஆரின்
அண்ணாயிசம் மாதிரி;-)
அது எப்படியோ, அண்ணாயிசம் இங்கே வேலை செய்யவில்லை. அவர்கள் “கம்யூனிசம்”
வேலை செய்கிறது. சீனாவின் வேளாண்மை வெற்றி, சக்தித் துறையின் வெற்றி,
சீனாவின் அறிவியல், சீனாவின் விண்வெளி, போக்குவரத்து என்று பல
சுவாரசியமான படகுகள் வர ஆரம்பித்தன. நம்ம ஊர் அரசியல் கட்சிகள் ஆயிரம்
பேசும் ஆனால் சூழலியல் பற்றிப் பேசாது. ஆனால் சீனாவின் சூழல் அக்கறை
பற்றிய பெரிய படகு அதை நமக்குச்சொன்னது. சுவாரசியம் வந்துவிட்டது. காப்பி
கூட குடிக்காமல் உட்கார்ந்துவிட்டேன்.
சீனாவின் பல்வேறு துணை நாடுகள் பற்றிய படகு, அதாவது ஹாங்காங், மகாவ்,
மங்கோலியா, திபெத், தைவான் இப்படி (போகின்ற சீன வளர்ச்சியைப் பார்த்தால்
வேற்றுமைகள் மறைந்து பங்காளிகள் சேர்ந்து விடுவர் என்றுதான்
தோன்றுகிறது). அங்குள்ள 52 குடிகள் ஆட்டமாடி வந்தனர். விவசாயிகள்
ஆடிக்கொண்டு வந்தனர். கல்லூரி மாணவர்கள் வந்தனர். பெய்ஜிங் ஒலிம்பிக்
வீர,வீராங்கணைகள் வந்தனர். குட்டியிலிருந்து பெரியவர் வரை `விளையாட்டு
(sports)' வீரர்கள் வலம் வந்தனர். (மகிழ்வாக இருந்தது. இந்தியாவில் `ஓடி
விளையாடு பாப்பா! என்று உட்கார்ந்து கொண்டு பாடிக்கொண்டு இருக்கிறோம்).
என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய படகு வந்தது. சீனாவில் வசிக்கும் பிற
இனத்தவர் என்றொரு படகு. வேறு யார்? நம்மவூர் புடவை, ஷெர்வாணி. அடடா! சீனா
வயதிற்கு வந்து விட்டது. நிச்சயம். இந்திய சுதந்திர தின parade-ல்
இப்படிச் சீனர்களுக்கு மரியாதை கொடுப்போமோ? என்று தெரியாது. அடுத்து வந்த
படகு வெளிநாட்டில் வாழும் சீனர்கள் படகு. இந்தியாவில் இப்படியெல்லாம்
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை சுதந்திர தின விழாவில்
கொண்டாடுகிறார்களா என்று தெரியவில்லை. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு
வெளிநாடு சென்ற சீனர்களின் பங்கு அதிகம். இரும்புத்திரையைக் கூட உடைக்க
வல்லது பொருளாதார உதவி என்பதை நிரூபித்துக்காட்டியவர்கள் இவர்கள்.
ஆட்டம், பாட்டமென்று கட்டக் கடைசியாக 6-14 வயதுவரை உள்ள 5000 குழந்தைகள்
கலந்து கொண்டது இவ்வளவு நேரம் காத்திருந்தது, சீனா பற்றிய மட்டமான
அபிப்பிராயம் போன்றவற்றை தூள், தூளாக்கிவிட்டது. குழந்தைகளே நாளைய
செல்வம். அவர்களுக்கு இந்த நாட்டின் வளம் பற்றிய. பாரம்பரியம் பற்றிய,
அரசியல் சித்தாந்தம் பற்றிய ஈடுபாடு வேண்டுமென்று அவர்களையும்
சேர்த்துக்கொண்டது சீனா ஒளிமயமான எதிர்காலத்தை
மிகக்கவனமாகத்திட்டமிடுகிறது என்ற நம்பிக்கையை எல்லோர் மனதிலும்
விதைத்தது.வயதானாலும் சீனத்தலைவர்கள் கடைசிவரை இருந்து எல்லோரையும்
உற்சாகப்படுத்தியது ரொம்ப வித்தியாசமாக இருந்தது.
சீனப் பெருஞ்சுவர், சீன Forbidden City, சீன ஒலிம்பிக்..இது போல் 60
ஆண்டு விழாவும் பிரம்மாண்டம், பிரம்மாண்டம்.
ஒன்று புரிந்தது. சீனர்கள் பற்றிய நமது புரிதலை மாற்றிக்கொண்டு, அவர்களை
கௌரவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் எங்கு போனாலும் சீனர்கள் என்னை
மதிப்பதைக் கண்டேன். இந்தப் parade-ல் இந்தியர்கள் கலந்து
கொண்டதிலிருந்து சீனா, இந்தியா மீது கொண்டிருந்த பாரம்பரிய மரியாதை
மீண்டும் தலை தூக்குவதைக் காணமுடிகிறது. இந்த இரண்டு பெரு நாடுகளும்
கைகுலுக்கினால் உலகம் கேட்கும்.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்.
நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/