ஆதிச்சநல்லூர்

87 views
Skip to first unread message

இரவா

unread,
Feb 28, 2008, 4:46:12 AM2/28/08
to தமிழாயம், minT...@googlegroups.com
ஆதிச்சநல்லூர் ஆய்வும் ஐராவதம் கூற்றும்
முனைவர் க. நெடுஞ்செழியன்

17.02.05 ஆம் நாளிட்ட தி இந்து பெங்களூர் பதிப்பில் தமிழ் எழுத்துக்களின் தொடக்கம் பற்றிய கட்டுரை வந்திருந்தது. திரு. சுப்பிரமணியம் என்பார் எழுதிய அக்கட்டுரை, இந்தியத் தொல்லியல் துறை சென்னை வட்டத்தின் கண்காணிப்பாளர் முனைவர் சத்தியர்த்தி அவர்களின் ஆய்வு முடிவுகளை மறுக்கும் நோக்கில் எழுதப்பட்டதாகும்.

திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஆதிச்ச நல்லூரில் நூறு ஆண்டுகளுக்கு முன் புதைபொருள் ஆய்வு நடந்திருந்தது. அங்கு மீண்டும் தம் ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார் முனைவர் சத்தியர்த்தி. அதன் அடிப்படையில் பல ஆய்வு முடிவுகளைக் கண்டு பிடித்தார். தாம் கண்டுணர்ந்தவற்றை அறிவியல் ஆய்வு முறைகளுக்கு உட்படுத்திய பிறகே வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வு, தமிழர் நாகரிக வரலாறு நாம் இன்று நம்பி வருவதைப் போல இல்லாமல் இன்னும் ஆயிரம் ஆண்டு பின்னோக்கிப் போகிறது என்றார். அங்கு கிடைத்த பானைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் யாவும் தமிழ் மொழிக்கே உரியன என்றும் அவற்றின் காலம் கி.மு. 800ஐ ஒட்டியுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார். இவரின் ஆய்வு முடிவுகளைப் பாராட்டும் வகையில் இலண்டன் பி.பி.சி. அவரைச் செவ்வி கண்டு ஒலி பரப்பியது. அச்செவ்வியிலும் தம் ஆய்வு முடிவுகளையும், அம்முடிவுகளை அடையத் தாம் பின்பற்றிய முறையியலையும் நல்லவண்ணம் விளக்கியிருந்தார்.

இதுகாறும் தாழி பானைகளில் காணப்பட்ட எழுத்துக்கள் யாவும் அவற்றின் வெளிப்புறங்களில் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. இம்முறைக்கு மாறாக அண்மையில் கிடைத்த தாழி ஒன்றில் அதன் உள்புறத்தில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார். அதனை காரி அறவ(ன)த்ற எனப் படித்தும் பொருளுடைத்தார் சத்தியர்த்தி. அத்தாழியைக் கரிமம் (சி14) எனும் அறிவியல் முறைக்கு உட்படுத்தி அதன் காலம் கி.மு. 1500க்கும் கி.மு. 500க்கும் இடைப்பட்டது என்பதாகவும் எப்படிப் பார்த்தாலும் அது கி.மு. 500க்கும் முற்பட்டது என்பதாகவும் கூறியிருந்தார். இந்திய எழுத்தியல் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பும் தமிழின் தொன்மைச் சிறப்பும் இதனால் உறுதி பெற்றன.

தமிழ்க் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை (Early Tamil Epigraphy From the Earliest Times to 6th Century A.D.) எனும் ஐராவதத்தின் நூலைச் சான்று காட்டி மறுத்துள்ளார், அதில் இந்து கட்டுரையாளர். மேல் தென்னத்திற்கும் (கருநாடக ஆந்திரப் பகுதிகள்) தமிழகத்திற்கும் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் வடநாட்டிலிருந்து வந்த சைனபெளத்த துறவிகளினால் அறிமுகம் செய்யப்பட்டதே தமிழ் பிராமி, எனும் கருத்தை மேற்கோள்காட்டி முனைவர் சத்தியர்த்தியின் கருத்து தவறானது என்கிறார். கருநாடகத்தின் வழியாக வந்தவர்கள்தாம் எழுத்து முறையை அறிமுகம் செய்தார்களா? இந்தக் கேள்விக்கான விடையை வழங்கியவர் இந்தியத் தொல்லியல் துறையில் உயர்ந்த பொறுப்பில் இருந்த முனைவர் கே.சி.இரமேசு என்னும் அறிஞராவார்.

கருநாடகத்தில் சைனர்களின் கலையும் கட்டுமானப் பணியும் எனும் தம் ஆய்வுக் கட்டுரையில், தொடக்க நாளில் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) கருநாடகம் வந்த சைனத் துறவிகள் தம்மோடு எந்தவிதமான எழுத்து முறைகளையும் கொண்டு வரவில்லை, எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கருநாடக மாநிலத்தில் உள்ள சிரவண வெள்ளைக் குளத்தில் (சிரவணபெ ளகோளா) தான், முதன் முதலாகத் தென்னகம் வந்த சைனத் துறவிகள் வந்து தங்கினார்கள் என்றும் அப்படித் தங்கித் தமிழகம் வந்தவர்களே தமிழகத்தில் எழுத்து முறையை அறிமுகம் செய்தவர்கள் எனும் கருத்தையும்,

அப்படி எந்தவிதமான எழுத்து முறைகளையோ, அல்லது கற்படுக்கைகள் போன்ற கட்டுமானப் பணிகளையோ மெளரியர் காலத்திற்கு உரியன என்று கூறக்கூடிய வேறு எந்தவிதமான தடயங்களோ சிரவண வெள்ளைக் குளத்தில் காண முடியவில்லை. இத்தனைக்கும் அப்படிப்பட்ட பொறிப்புகளுக்கு மிகவும் தகுதி வாய்ந்த இடமாக அப்பகுதி இருந்தும் அப்படிப்பட்ட ஒன்றும் காணப்படவில்லை, எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் கருநாடகத்தில் இத்தகு பணிகள் தொடங்குவதே தொடக்ககாலக் கடம்பர்களால் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் என்பதையும் வரையறை செய்கின்றனர். ஆனால் இதே நேரத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் தென் கோடியில் உள்ள பாண்டி நாட்டில் உள்ள கற்படுக்கைகளில் காணப்படும் எழுத்துப் பொறிப்புகள் பல, அசோகன் காலத்திற்கும் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) முந்தியவை என்பதையும் உறுதிப்படுத்திவிடுகிறார்.

இந்தியாவில் சைனப் பள்ளிகள் பல இருந்தன. ஆனால் எந்த இடத்திலும் மலைகளில் அவர்கள் கற்படுக்கைகளை அமைத்துக் கொண்டு தங்கியதற்கான சான்றுகள் இதுகாறும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாகக் கற்படுக்கைகள் ஆசீவகத் துறவிகளுக்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இலங்கை வேந்தன் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) அசோகன் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) ஆகியோர் ஆசீவகத்துறவிகளுக்கு அமைத்த கற்படுக்கைகள் அக்கருத்தை அரண் செய்கின்றன. அவ்விரு மன்னர்களும் அவ்வாறு கற்படுக்கைகள் அமைக்கக் காரணமாக இருந்தவை ஆசீவகர்கட்குத் தமிழகத்தில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளே என்பதில் ஐயமில்லை. இதனைப் பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில்தான் முனைவர் சத்தியர்த்தியின் கண்டுபிடிப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துவிட்டது. மனித எலும்புத் துண்டுகளுடன் சிறிய மட்பாண்டங்களும் இடம் பெற்றுள்ள அத்தாழியின் உட்புறம் தமிழ் மொழிக்கே உரிய எழுத்துக்களுடன் அமைந்துள்ள தொடரில் காரி அறவ(ன)ற என்பதை முன்னரே கண்டுள்ளோம். இவ்வெலும்புக் கூட்டுக்குரிய ஆண், ஒரு வீரனாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவன் வீரனா? துறவியா? என்பது ஆய்வுக்குரியதாகும். துறவியாயின் அவன் எந்தச் சமயத்திற்கு உரியவர் அல்லது எந்த நம்பிக்கைக்கு உரியவர்? என்றும் நாம் காண வேண்டும்.

ஆசீவகம் பற்றி விரிவாக ஆராய்ந்த ஏ.எல்.பாசம், ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்தில் நிலை கொண்டுள்ளன என ஆய்ந்துரைத்தார். தம் ஆய்வுக்கு அவர் காட்டிய சான்று தாழியில் புதைக்கும் வழக்கத்தைச் சுட்டும் ஒரு தமிழ்ப் பாடலாகும். தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியர் காட்டிய மேற்கோள் தாழி கவிப்போர் தவஞ் செய்வோர் மண்ணாகற எனத் தொடங்கும் வெண்பாவே அஃதாகும். இப்பாடலை ஏ.எல்.பாசத்திற்கு எடுத்துக்காட்டி விளக்கியவர் அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்த கே.ஆர்.சீனிவாசன் கூறியதாகவும் நன்றியுடன் பதிவு செய்துள்ளார்.

தாழியில் புதைக்கும் மரபு தமிழர்கட்கு மட்டுமே உரியது என்பதாலும் இம்மரபு அவர்களின் உயிர் பற்றிய கோட்பாட்டைத் தழுவியது என்பதாலும் ஏ.எல்.பாசம் தாழியில் புதைக்கும் மரபை ஆசீவகத்தோடு இணைத்து ஆராய்ந்தார். ஆசீவகம் பின்பற்றிய ஊழியில் உயிர் சுழற்சி முறை ஆகிய கோட்பாடுகளின் உள்ளடக்கமாக அம்மரபு விளங்குவதாகவும் ஏ.எல். பாசம் விளக்கினார்.

ஆசீவகம் பற்றி மேலும் ஆராய்ந்த பேராசிரியர் டி.வி.மகாலிங்கம், அவர்களும் ஆசீவகத்தின் ஊழியல் மற்கலி கோசாலருக்கு முன்னரே கோட்பாட்டு நிலையில் இருந்த ஒரு கருத்தியல் என்றும், அதற்கு நிறுவன அஃதாவது சமய வடிவத்தைத் தந்தவரே மற்கலி கோசாலர் எனவும் தெளிவுபடுத்தினார். எனவே ஆசீவகம் தொடர்பாக ஏ.எல்.பாசம், பேராசிரியர் மகாலிங்கம் ஆகியோர் கூறிய


தாழி
ஊழியல் கோட்பாடு

ஆகிய இரண்டு கூறுகளுமே ஆசீவகத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை பிணைப்பை உறுதிப்படுத்துகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் ஆதிச்சநல்லூர் புதைபொருள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தாழியும் தமிழ் எழுத்தும் ஆசீவகத்தோடு தொடர்புபட்டிருப்பது வியப்பாகவும், அதே நேரத்தில் ஏ.எல்.பாசத்தின் கருத்தை உறுதிப்படுத்தக் கூடியதாகவும் உள்ளதும் எண்ணத்தகும்.


காரி

காரி எனும் பெயர் தமிழ் மரபுக்குரியது. கடை ஏழு வள்ளல்களில் ஒருவன் காரி என்பதும், கணக்கதிகாரம் எனும் கணக்கியல் நூலின் ஆசிரியர் காரி நாயனார் என்பதும் அப்பெயரின் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளங்கள். அதைப்போலவே சாத்தன் ஐயனார் தருமசாத்தா ஆகிய பெயர்கள் யாவும் ஆசீவகத் தோற்றுநராகிய மற்கலிகோசாலரைச் சுட்டுவன. ஆசீவகர்களின் கொடியையும் பிறவற்றையும் விளக்கும் திவாகர நிகண்டு,


கோழிக் கொடியோன் சாதவாகனன்
காரி, சாத்தன், கடல்நிற ஐயன்

எனக் குறிக்கும் ஐயனாரின் கொடி சேவல் என்பதும், ஊர்தி குதிரை என்பதும் அவ் ஐயனார் காரி, சாத்தன், கடல் நிற ஐயன் என அழைக்கப்பட்டார் என்பதும் அப்பாடற்பகுதியின் பொருளாகும்.

ஆசீவகம் என்பது ஒரு சமயம் மட்டுமன்று. தமிழ் மரபின் பாதுகாப்புப் பேழையும் அஃதாகும். தமிழ் அறிவு மரபின் அடையாளமாகிய இவ் ஆசீவகத்தோடு, ஆதிச்சநில்லூரில் எடுக்கப்பட்ட தாழி தொடர்புபட்டிருப்பது வியப்பாகும். அதனால் அத்தாழியில் உள்ள காரி எனும் பெயர் ஒரு துறவியின் பெயர் என்பது தெளிவு; இக்கருத்தை காரி எனும் பெயரை அடுத்து வரும் அறவன் எனும் சொல் உறதிப்படுத்துகின்றது. சிலப்பதிகாரத்தில் கவுந்தி அடிகள், ஆசீவகத் தலைவரை


அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையுங் கூடி யொருவழிக் குவியா

எனப் பாராட்டுவதில் அறவன் எனும் சொல்லே இடம்பெறக் காணலாம். எனவே தாழியில் பொறிக்கப்பட்ட ள்காரி அறவ(ன)தற எனும் தொடர் வழியாக அதில் புதைக்கப்பட்டவர் காரி எனும் பெயருடைய துறவி என்பது தெளிவாகின்றது.

ஆறாம் வேற்றுமை உருபு

அத்தொடரின் ஈற்றில் உள்ள அறவ(ன)த என்னும் த என்ற சொல் ஆறாம் வேற்றுமை உருபாகிய அது என்பதன் திரிபாகும். அது என்னும் அவ்வுருபு உடைமைப் பொருளைச் சுட்டுவதாகும். அது எனும் அவ்வுருபை அ என்ற எச்சத்துடன் எழுதும் மரபு இலக்கிய வழக்காகவும் இருந்துள்ளது. இதனை


நனயானை என்புழி ஆறாவதன் பன்மையுருபு
ஒருமைக்கண் மயங்கிற்று

என விளக்குவதும் ஆழ்ந்து எண்ணத்தக்கதாகும். எனவே காரி எனும் அறவோனாகிய துறவிக்கு உரியது அத்தாழி எனும் பொருளில் காரி அறவ(ன)த எனும் தொடர் அமைந்திருக்கக் காணலாம். இதனால் எழுத்து சொல் பொருள் எனும் மூன்று நிலைகளிலும் அவ்வெழுத்து தமிழ் இலக்கண மரபுக்குரிய வகையில் அமைந்திருப்பது என்பது உறுதி.

புத்தர் பெ ளத்த சங்கத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே ஆசீவகம் சமய வடிவத்தைப் பெற்றுவிட்டது. அதன் நிறுவனராகிய அறப்பெயர்ச் சாத்தன் எனும் மற்கலி கோசாலர் ஏறத்தாழ கி.மு. 500 ஆம் ஆண்டில் துறக்கம் (வீடு பேறு) அடைந்தவர். அவரின் மறைவிற்கு முன்னரே, அஃதாவது அச்சமயம் நிறுவன வடிவம் பெற்ற தொடக்க நாள்களிலேயே பரவலான செல்வாக்கைப் பெற்றுவிட்டது. அதனடிப்படையில் காணும்போது காரி அறவன் என்பார் ஆசீவகத் துறவி எனத் துணியலாம்.

அத்துறவி ஆசீவகச் சமயத்தவர் எனில், முனைவர் சத்தியர்த்தி, தாழியின் காலத்தைக் கீழ் எல்லையாக வரையறை செய்யும் கி.மு. 500 என்பது பொருந்துகின்றதைக் காணலாம். அத்துறவி ஆசீவகச் சமயத்தைச் சாராத தமிழ் மரபுக்குரிய வேறொரு கோட்பாட்டினர் எனக் கருதினால், தாழியில் புதைக்கும் தமிழ் மரபின் தொன்மை, முனைவர் சத்தியர்த்தி வரையறை செய்யும் தாழியின் மேலெல்லையாகிய கி.மு.1500க்கு உரிய பழமை கொண்டது என்பதும் தெளிவாகிறது. இப்படி எந்த முறையில் கண்டாலும் அத்தாழியும் அதன் எழுத்தும், அவ்வெழுத்து உணர்த்தும் செய்தியும் இந்திய மெய்யியல் எழுத்தியல் வரலாற்றில் புதிய வெளிச்சத்தைத் தருகின்றன என்பதில் ஐயமில்லை.

-நன்றி தமிழர் கண்ணோட்டம் மே 2006

நன்றி: தென் செய்தி

--
  இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                          
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages