பதில் எழுதிக் கொண்டிருந்த போது என் பழைய மடற்றொகுப்பைப்
பார்த்தேன். அவற்றில் சில தருகிறேன், பொருத்தமாக அமையும்.
தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியராய் விளங்கிய வையாபுரியார்
தமிழின் 5 சிரோரத்நங்களில் 4 சமணர் கொடை என்பார்.
கன்னடமும் கால்கொள்ள சமணர் பங்கு பெரிது.
" தமிழ் மொழியில் இலக்கிய சிரோரத்னங்களாக உள்ளன
ஐந்து நூல்கள். அவை சிந்தாமணி, கம்பராமாயணம்,
பெருங்கதை, சிலப்பதிகாரம், திருக்குறள் என்பவை. அவற்றுள்
நான்கு நூல்களின் பெருமையைக் குறித்து ஒரு புலவர்,
திருத்தக்க மாமுனி சிந்தாமணி கம்பர்
விருத்தக் கவித்திறமும் வேண்டேம் - உருத்தக்க
கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் குறளணுகேம்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கு?
என்று கூறினர். இந்நான்கு நூல்களையும் கற்று அனுபவியாது
விட்டால் ஒருவன் குருடனுக்குச் சமானம் ஆனவனென்றும்,
அவனுக்குச் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும்
அல்லது உதிக்காமற் போனாலும் ஒன்றுதான் என்றும்
இச்செய்யுள் கருதுகிறது. மேற்கூறிய ஐந்து நூல்களுள்
கம்பராமாயணம் ஒன்று தவிர ஏனைய நான்கும் சைனர்கள்
நமக்குத் தந்த இலக்கியச் செல்வங்களாம்."
சிலம்பு யாத்தவர் இளங்கோ சமணத் துறவி என்பது தமிழறிஞர் பலர்கொள்கை.
சென்னைக் கடற்கரைச் சாலை இளங்கோ சிலை சமணத்
துறவியாய் வடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தமிழ் அறிஞர் சிலைகளை
நல்ல படங்கள் எடுத்து சிறு குறிப்புடன் வலைப்பதிவுகளில்
பதிவுபண்ண யாராகிலும் முன்வரவேண்டும். எளிய பணி.
பின்னர் அப் பதிவுகளில் இருந்தி விக்கிபீடியாவுக்கு
நல்ல படங்களை எடுத்துக் கொள்வர்,
உ-ம்: எஸ். வையாபுரிப் பிள்ளை (மதறாஸ் லெக்சிகன் பதிப்பாசிரியர்)
சிலம்பைச் சமணக் காப்பியம் என்பார். யாழ். சைவத்திரு. ஆறுமுக
நாவலர் கர்ணகியை சமண வணிகத்தி என்று குறிப்பிட்டு அவள்
வழிபாடு ஏன்? என்று சிறுதெய்வ வழிபாடு என்று கண்டித்திருக்கிறார்
ஆதாரம்: எஸ். பொ. செவ்வி, திசைகள், அக். 2003. ஆறுமுக நாவலரின்
வாசகங்களை தேடி எடுக்க வேண்டும்.
நா. கணேசன்
எஸ், பொ. அவர்களின் பேட்டி
பேட்டி எடுத்தவர்: மாலன்
திசைகள், அக்டோபர் 2003.
http://www.thisaigal.com/oct/uniinterview.html
"கைலாசபதியின் சிந்தனை முழுக்க வியாபாரம் பற்றியதாகவே இருந்தது"
-சாடுகிறார் எஸ்.பொ
"ஈழத்துப் படைப்பாளிகளில் ஒரு சிறந்த எழுத்தோவியர் மட்டுமல்ல, தமிழ்
உலகின் சிறுகதைப் படைப்பாளிகளின் முன் வரிசை எழுத்தாளர்களிலும் ஒருவர்"
என்று விமர்சகர்கள் சிட்டி - சிவபாத சுந்தரத்தாலும் "1956க்குப் பின்
வந்த பரம்பரையையும் அதன் சாதனைகளையும் நிரந்தரமாக நிலைத்து நிற்கச்
செய்யக்கூடிய ஒரு சிலரில் இவர் முக்கியமானவர்; ஆனால் அதே சமயம் புதிய
பரம்பரையையும் அதன் சாதனைகளையும் பழுதாக்கிவிடக் கூடியவரும் இவரேதான்"
என்று அவரது சமகாலத்தவரான மு.தளையசிங்கத்தாலும் குறிப்பிடப்படும்
எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இலங்கையின் மூத்த, முக்கியமான எழுத்தாளர்.
ஆரம்ப நாள்களில் கைலாசபதியின் முற்போக்கு அணியைச் சேர்ந்தவராக இருந்த
எஸ்.போ பின்னால் நற்போக்கு என்ற ஒரு கருத்தாக்கத்தை வற்புறுத்தியவர். பல
சர்ச்சைக்குரிய கதைகளை எழுதியுள்ள எஸ்.பொ இப்போது தன்னுடைய Magnum Opus
என்று சொல்லத்தக்க சுய வரலாற்று நாவல் ஒன்றை எழுதத் தீவீரமாக
முனைந்துள்ளார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில்
வசித்து வரும் எஸ்.போ. அண்மையில் சென்னை வந்திருந்த போது, திசைகள் கெளரவ
ஆசிரியர் மாலன் அவரை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். ஒரு அதிகாலைப்
பொழுதில் துவங்கி, வந்து வந்து போன மின் தடைகளுக்கும், வாசனையற்ற
தேநீருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலிலிருந்து :-
மாலன் இலங்கையில் முப்பதுகளில் எழுதப்பட்ட எழுத்துக்களில்-
இலங்கையர்கோன், வைத்தியலிங்கம், சம்பந்தம்- ஆகியோர் எழுதத் தலைப்பட்ட
காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களில், மணிக்கொடியின் தாக்கம்
காணப்படுகிறது. சிவபாதசுந்தரம் துவக்கிப் பேணிய ஈழகேசரிப் பண்ணையில்
வளர்ந்தவர்களிடமும்- வரதர், கனக.செந்தில்நாதன்- அந்த சாயலைப் பார்க்க
முடிகிறது. அது ஏன்? அப்போது அங்கிருந்த எழுத்தாளர்கள் இலங்கையைத்
தமிழ்நாட்டினுடைய ஒரு நீட்சி (extension) என்று கருதினார்களா? அல்லது
மணிக்கொடி பாணியில் எழுதினால்தான் தமிழ்நாட்டில் அங்கீகாரம் கிடைக்கும்
என்று கருதினார்களா? ஏன் இலங்கைக்கு என்று ஒரு தனித்த அடையாளத்தோடு
அவர்கள் எழுத முற்படவில்லை?
எஸ்.போ: இலங்கையில் ஆரம்பகாலத்தில் தமிழ் முயற்சிகள் முழுவதும்
ஆறுமுகநாவலரின் செல்வாக்கினால் ஏற்பட்டன.ஆறுமுகநாவலர் சமகால
இலக்கியத்தைப் பற்றிய அக்கறை அற்றவர். அவருக்குத் தமிழ் என்பது சைவத்தை
முன்னெடுப்பதற்கான ஒரு கருவி. எனவே சைவமும் தமிழும் என்று சொன்னார். அது
மட்டுமில்லாமல் நுண்கலைகளைப் பற்றிப் பேசும் சிலப்பதிகாரம் போன்ற
காவியங்களைக் கூட, மக்களுக்கு விரோதமானது, அவர்களைப் பழுதுபடுத்தி
விடக்கூடியது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. 'சமணச் செட்டிச்சிக்குக்
கோவில் வைத்துக் கும்பிடுவது ஏனோ?' என்றெல்லாம் கேட்கிறார். இதனால்
உண்மையில் வசன நடையை நெகிழ்த்தித் தமிழுக்கு ஒரு புதுமை செய்த போதிலும்,
நாவலுருடைய பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்குப் படைப்பிலக்கியத்திலே,
குறிப்பாகக் கலை இலக்கியத்திலே ஒரு திசை கிடைக்கவில்லை.அந்தக் காலத்திலே
இந்தியாவும் இலங்கையும் ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது..
இந்தியாவிற்கு வந்து போவதற்கு பாஸ்போட், விசா எதுவுமே கிடையாது.
கிட்டத்தட்ட எல்லா வகையிலும், தென் திசையில் இருந்த சிங்களப்
பகுதிகளுக்குப் போவதிலும் பார்க்க, வடதிசையில் உள்ள தமிழ்நாட்டுக்கு
வருவது, கூடுதலான உறவுகளோடு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. எனவே
இயல்பாகவே தமிழ்நாட்டிலே படைப்பிலக்கியத்திலே எழுந்த புதுமைகள் அவர்களைக்
கவர்ந்ததிலே வியப்பு ஏதும் இல்லை, அது தவிர்க்க முடியாததும் கூட.
பாரதியாருக்குப் பிறகு புதிய இலக்கியங்கள் என்று மணிக்கொடி பரம்பரையினர்
செய்த போதும், பின்னர் ஓரளவில் கலைமகள் செய்த போதும், அலையன்ஸ்
கம்பனியார் கதைக் கோவை தொகுதிகள் வெளியிட்ட போதும், அந்தக் காலத்திலே
தென் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுடைய எழுத்துக்கள் ஒரு வழிகாட்டியாக
இருந்தன. ஆதர்சமாக இருந்ததோ இல்லையோ, வழிகாட்டியாக இருந்தன. அது
மட்டுமல்லாமல், சிறுகதைப் படைப்புக்களை பிரசுரிக்கக்கூடிய பத்திரிகைகளும்
இலங்கையில் அப்போது இருக்வில்லை. எனவே இயல்பாகவே அவர்கள் தமிழ்நாட்டுடன்
தொடர்பு கொண்டு தங்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
மாலன்:அப்படியானால் இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு என்று ஒரு தனி
அடையாளம் எப்போது ஏற்பட்டது என்று சொல்வீர்கள்? ஆட்சிக்கு வந்து இருபத்தி
நாலுமணி நேரத்திற்குள் சிங்களத்தை அரசு மொழியாக்குவோம் என்ற வாக்குறுதியை
முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1956ல்
ஆட்சிக்கு வந்தது.தென்னிலங்கையில் தனிச் சிங்களம் என்றால் வடக்கில்
தமிழியக்கம் என்ற சூழ்நிலை யாழ்ப்பாணத்தில் எழுந்தது. இலங்கைத் தமிழ்
எழுத்தாளர்கள், இந்தியாவை, தமிழ்நாட்டைச் சாராமல், தங்கள் நாட்டைச்
சார்ந்து ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முனைந்தார்கள் என்று
தளையசிங்கம் சொல்லும் கருத்து சரிதானா?
எஸ்.பொ: அது தவறானது. மிகத் தவறானது. 1956ம் ஆண்டிற்கு முன் உலக விநோதக்
கதைகள் போன்ற நாவல்களை யாழ்ப்பாணத் தமிழில் எழுதுவதற்கு உத்வேகமாக
இருந்தது எது? எனவே தீடிரென்று 1956ல் வந்த தனிச் சிங்கள மசோதாவின்
எதிர்வினையாகத் தமிழர் தேசியம் தோன்றியது என்பது தவறு. தமிழர் தேசியம்
56க்குப் பிறகும் தோன்றவே இல்லை. தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றே ஒன்று
செய்தார்கள். தமிழர்களுடைய உரிமைக்காக அவர்கள் போராடியதே கிடையாது.
அவர்கள் போராடியது முழுவதும் ஆட்சி அதிகாரத்திலே பகிர்வு வேண்டி (To
share the power) அதற்கு அப்பால் அவர்கள் அரசியலை நடத்தவே இல்லை. அந்த
உண்மையைத் தளையசிங்கம் போன்றவர்கள் மறந்து விடுகிறார்கள்.
இரண்டாவதாக 56க்குப் பிறகு ஏற்பட்ட போராட்டம் தமிழுக்கும்
சிங்களத்திற்கும் இடையேயான போராட்டம் அல்ல. ஆங்கிலத்திற்கும்
சிங்களத்திற்கும் இடையேயான போராட்டம். ஏனென்றால் தமிழர்களுடைய தலைவர்கள்
சட்டத் தரணிகளாகவும் இருந்ததனால், அவர்கள் பிழைப்பு நடத்தக்கூடிய மொழி
ஆங்கிலமாக இருந்ததனாலும், ஆங்கிலத்தினுடைய நீட்சி அதிகாரப் பகிர்வுக்குத்
தங்களுக்குக் கூடிய வசதி தரும் என்பதனாலும் அந்தப் போராட்டம் நடந்ததே
ஒழிய, திடீரென்று ஒரு சட்டம் வந்தது நாங்கள் ஒரு நள்ளிரவில் மாறிவிட்டோ
ம் என்று நினைப்பதெல்லாம் தவறு. சில சரித்திர நிகழ்வுகளை வைத்துக்
கொண்டு, காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்ததைப் போல, ஒட்டுவேலை செய்வதைப்
போல அதைச் சொல்லப் பார்க்கிறார்கள். தரப்படுத்துதல் வந்த போது சிறு சலனம்
ஏற்பட்டது, உண்மை. 1972ல் புதிய அரசியல் சட்டம் ஏற்பட்ட போதும் சில
சலனங்கள் ஏற்பட்டன. ஆனால் அதைத் தமிழர் தேசியம் என்று சொல்ல முடியாது.
ஆயுதப் போராட்டம் ஏற்பட்ட பிறகுதான் தமிழருக்கு ஒரு இனத்துவ அடையாளம்
வேண்டும், அந்த அடையாளம் தமிழ் மூலம்தான் பெறப்பட வேண்டும், தமிழருக்கு
என ஒரு பிரதேசம் வேண்டும், மண் வேண்டும் என்று சொன்னார்கள். எனவே 1956
திடீரென்று ஒரு watershedmark என்று சொல்வது சரித்திரத்தை சரியாக
உள்வாங்கிக் கொள்ளாத நிலை என்றுதான் நான் கருதுகிறேன்.
மாலன்: தமிழ் தேசியம் என்ற கருத்தாக்கம் அந்தக் காலகட்டத்தில் உருவாகியது
என்று கருதுவதற்குக் காரணம் இருக்கிறது. 1957ல்தான் கைலாசபதி தினகரன்
இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார்.. இலங்கைத் தமிழ்
எழுத்துக்களுக்குத் தனி அடையாளம் வேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய
இலக்கியம் என்ற கருத்தை முன்வைத்து அதை வளர்த்தெடுத்தார் என்று ஒரு
கருத்து இருக்கிறது. அது சரியா?
எஸ்.பொ: அதுவும் பிழை. சில வரலாற்று உண்மைகள் சிலருடைய 'லாலி'
பாடுவதற்காக மறைக்கப்படுகின்றன. கைலாசபதி தினகரன் ஆசிரியராக வந்த அதே
காலகட்டத்தில் ஒரு பிரசினை எழுகிறது. என்ன பிரசினை எண்டால், அன்னிய
செலாவணிக் கட்டுப்பாடு. இவர் ஏரிக்கரைப் பத்திரிகைக் குழுமத்தில் தமிழ்
பத்திரிகை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார். ஏரிக்கரை பத்திரிகைக்
குழுமத்திலே சிங்களப் பத்திரிகைகளும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த
சிங்களப் பத்திரிகைகளில் எழுதிய சிங்கள எழுத்தாளர்களுக்கு அந்தக் கம்பெனி
பணம் கொடுத்தது. அப்படிப் பணம் கொடுக்கும் போது அந்நிய செலாவணி பிரசினை
இருக்கவில்லை. அவர்கள் இலங்கையிலேயே வசித்த எழுத்தாளர்கள். ஆனால்
மு.வரதராசனுக்கும், சிதம்பர ரகுநாதனுக்கும், ஏன் திருச்சி ரசூலுக்கும்
கூடப் பணம் அனுப்பியபோது அன்னிய செலாவணி என்ற ஒரு கூறு அங்கே தலை
காட்டியது. அப்போது நிர்வாகம், " கைலாசபதி, இந்த நாட்டிலே எழுத்தாளர்கள்
இல்லையா? ஏன் இந்தியாவிற்குப் பணம் அனுப்புகிறீர்கள்? இது எங்களுக்கு
அந்நிய செலாவணியில் கஷ்டம் தருகிறது. உள்நாட்டு எழுத்தாளர்களுக்குப் பணம்
கொடுத்தால் இந்த அன்னிய செலாவணியை நிறுத்தலாம்" என்று சொன்னது. It was an
administrative decision. அது இவர் மீது திணிக்கப்பட்டது. அது
வாய்த்துவிட்டது, லாலி பாடுவதற்கு ஒரு வாய்ப்பாக. இது உண்மை.
நிர்வாகத்தில் இருந்தர்களுடன் அந்தக் காலத்தில் ஏற்பட்ட தொடர்புகளாலும்,
உரையாடல்களாலும் இந்த உண்மையை நான் அறிந்து கொண்டேன்.
மாலன்: அப்படியானால், உங்கள் அபிப்பிராயத்தில், தமிழ்நாடு சாராத ஒரு
அடையாளம் இலங்கை இலக்கியத்திற்கு எப்போது ஏற்பட்டது?
எஸ்.பொ: அது ஓரளவிலே, தெரிந்தோ தெரியாமலோ ஈழகேசரிப் பண்ணையிலே
உருவாகிவிட்டது. ஈழகேசரி இலக்கிய உணர்வுகளின் ஒரு சந்தியாக இருந்தது. It
was a medium.. பண்டிதர்களுக்கு, தமிழர்களது அரசியலை
முன்னெடுத்தவர்களுக்கு அது ஒரு பிரசுர களமாக இருந்தது போலவே உள்ளூர்
தமிழிலே எழுதக்கூடிய கதைகளுக்கும் அது பிரசுரகளமாக இருந்தது.
இலங்கையர்கோன் சரித்திர நிகழ்வுகளை வைத்துக் கதை எழுதினால் அதைக்
கலைமகளுக்கு அனுப்புவார். ஆனால் வெள்ளிப் பாதசரம் போன்ற கதையை எங்கே
அனுப்புவார்? ஈழகேசரிக்கு அனுப்புவார். எனவே நிர்பந்தங்கள் எதுவும்
இல்லாமல் மண்ணின் வாழ்க்கையைத் தரிசித்த படைப்பாளிகள், அந்த மண்ணின்
வாழ்க்கையைன் இயல்புகளைத் தங்கள் படைப்புக்களிலே கொண்டு வந்தார்கள்.
அதில் முக்கியமானவர்களாக இலங்கையர் கோனையும் அ.சீ. முருகானந்தனையும்
சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, அது நடந்து கொண்டிருக்கும் போதே, புதிய
திசைகளைக் காணக் கூடிய ஞானஸ்நானத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி,
ஈழகேசரிப் பத்திரிகை பாலர் வட்டாரம் ஒன்று துவங்கியது, இளம் எழுத்து
ஆர்வங்களை ஒரு சங்கமாக அமைத்தது. இப்படியாகத்தான் மறுமலர்ச்சி சங்கம்
வருகிறது. இங்கே இருந்தவர்கள் மறு மலர்ச்சி சங்கத்திற்குப் போகிறார்கள்.
மறுமலர்சி சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதே புதுமைப்பித்தனுடையதும்,
மணிக்கொடியினுடையதுமான இலக்கிய ஆளுமையின் தாக்கம். ஆளுமையினுடைய தாக்கம்
என்றால், தென்பாண்டித் தழிழைப் புதுமைப் பித்தன் தன் வாகனமாக்கினால், ஏன்
யாழ்ப்பாணத் தமிழை நாங்கள் வாகனமாக்க முடியாது? அப்படிப்பட்ட சிந்தனைகள்.
கு.ப.ரா. மறைந்தபோது, நிதி திரட்டி அனுப்புகிற அளவிற்கு, மணிக்கொடி
பத்திரிகையோடு ஒரு ஒட்டுறவை வைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள்தான்
மறுமலர்ச்சிப் பத்திரிகையை நடத்தினார்கள். இந்த மறுமலர்ச்சிப்
பத்திரிகையைப் பற்றி கைலாசபதி, தளையசிங்கம் அனைவருமே தவறான கருத்துக்களை
வைத்திருக்கிறார்கள். தவறான கருத்துக்கள் என்றால், ஈழகேசரிப்
பத்திரிகையிலே இடம் இல்லாமல் இவர்கள் மறுமலர்ச்சிப் பத்திரிகைக்கு
வந்தார்கள் என்பது; ஒரு சில இதழ்கள்தான் நடத்தினார்கள் என்பது. அது அல்ல
விஷயம். அவர்கள் சரியான திசையில் சிந்தித்தார்கள் என்பதுதான் அந்த
இயக்கத்தினுடைய முதலாவது வெற்றி அது மட்டுமன்றி புதிய பரிசோதனைகளைச்
செய்தார்கள். உருவகக் கதைகளைப் பற்றி எழுதினார்கள். அது மட்டுமல்ல,
யதார்த்தமான வாழ்க்கையை மட்டுமல்ல, மன உணர்வுகளையும், ஓட்டங்களையும்
எழுதினார்கள். இப்படிப்பட்ட பரிசோதனைகளை செய்வதற்கு மறுமலர்ச்சியை ஒரு
சிற்றிதழாக- அதை அவர்கள் சிற்றிதழ் என்றே இனம் கண்டார்கள்- நடத்தினார்கள்
அதில் சம்பந்தப்பட்ட எவரும் பிற்காலத்தில் முற்போக்குக்கு வரவில்லை
என்பதால் அவர்களுடைய பங்களிப்பு இல்லை என்றாகி விடுமா?
மாலன்:புதுமைப்பித்தனுடைய தாக்கம், மணிக்கொடியினுடைய தாக்கம் என்று
சொல்லும் போது, புதுமைப்பித்தனுக்கும், மணிக்கொடியில் இருந்த
மற்றவர்களுக்கும், அதாவது கு.ப.ரா, பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணியன்
போன்றவர்களுக்கும் அடிப்படையான ஒரு வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு
வடமொழி, அதாவது சம்ஸ்கிருத, காவியமரபு குறித்த ஒரு பார்வை இருந்தது.
அதனுடைய அபிமானிகளாக அவர்கள் இருந்தார்கள்.அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட
ஐரோப்பிய இலக்கியங்களைப் படித்து அது குறித்து ஒரு பார்வை இருந்தது. அதன்
ரசிகர்களாக அவர்கள் இருந்தார்கள். இந்த இரண்டையும் சேர்ந்த்து ஒரு
கலவையாக அவர்கள் தமிழில் ஒரு நவீன இலக்கியம் என்பதை முன் வைக்க
வருகிறார்கள். அதுவே பாரதியிடமிருந்து ஒரு மாறுபட்ட போக்கு. ஏனெனில்
பாரதிக்கு சமஸ்கிருத காவிய மரபோடு, தமிழ்க் காவிய மரபைக் குறித்தும் ஒரு
சிந்தனை இருந்தது. அதோடு நாட்டார் வழக்குகள் (folk lore) குறித்தும் அவர்
அறிந்திருந்தார். அவை எல்லாவற்றையும் இணைத்து ஒரு பாணியை
உருவாக்குகிறார். ஆனால் மணிக்கொடி குழுவினர் நாட்டார் வழக்குகளை
கைகழுவிவிட்டு ஐரோப்பிய மரபுகளை அதிகம் தழுவிக் கொள்கிறார்கள்.
புதுமைப்பித்தன் அவர்களிலிருந்தும் வேறுபடுகிறார். அவரிடம் தமிழ் சைவ
வேளாள மரபின் தாக்கம், ஆக்கபூர்வமாகவோ, எதிர்மறையாகவோ இருக்கிறது.
அதையும் ஐரோப்பியக் கலை வடிவங்களையும் சார்ந்து அவர் தன் இலக்கியத்தை
உருவாக்குகிறார். இலங்கையில் எழுதியவர்களுக்கு சம்ஸ்கிருத மரபைப் பற்றிய
ஒரு பார்வை இருந்ததா? அல்லது புதுமைப் பித்தனைப் போல சைவ வேளாள மரபின்
பின்னணியில்தான் அவர்களது சிந்தனைகள் அமைந்தனவா? அந்தப் பின்னணியில்தான்
அவர்கள் ஐரோப்பிய நவீன இலக்கியங்களைப் பார்த்தார்களா?
எஸ்.பொ: இலங்கையில் கல்வி முறை ஆங்கிலக் கல்வி முறையிலும், இந்தியக்
கல்வி முறையிலும் பார்க்க சற்றே வேறுபட்டிருந்தது.Made in England என்ற,
ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிப்பட்ட,
குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்துவ மிஷினரிமார்களுடைய பாடசாலைகள்,
ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுத்தன. அந்த ஆங்கிலத்திலே மிகத் திறமை பெற
வேண்டுமென்று சொல்லி இரண்டு தொல் மொழிகள் கற்பிக்கப்பட்டன. ஒன்று
கிரேக்கம். மற்றொன்று லத்தீன்.இந்த இரண்டு மொழிகளைக் கற்கும் போது ஆங்கில
மொழியை மட்டுமல்ல, இலக்கிய மரபுகளையும் பெரிதாக கற்றுக் கொண்டார்கள்.
அவ்வாறு லத்தீன் மொழி படித்தவன் நான். அந்த சொந்த அனுபவத்தில் இதைச்
சொல்கிறேன். அதேபோல வாசிப்புப் பழக்கந்தான் மொழிப்பழக்கத்திற்கு மிக
உறுதுணையாக உள்ளது என்று 'வகுப்பு நூல்நிலையங்களே' நடத்தப்பட்டன. வகுப்பு
நூல் நிலையம் என்றால் ஒரு வகுப்பிலே 30 மாணவர்கள் என்றால், அறுபது
நூல்கள் இருந்தன. அந்த மாணவர்கள் அந்த அறுபது நூல்களையும் வாசித்தாக
வேண்டும். இது செழுமையான ஒரு பின்னணி. இவற்றுடன் கிரேக்க இலக்கியங்களுடைய
துன்பியல் தன்மைகளை ஆங்கில இலக்கியங்களை வாசிக்கும் போது அதன் பின்னணியாக
இவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில்
இல்லை. இங்கே ஆங்கில மொழியில் உச்ச ஆசான்களாக இருந்த பலரும்
பிராமணர்கள்.இந்த பிராமணர்கள் இயல்பாகவே சம்ஸ்கிருதம் கற்றவர்கள். எனவே
இரண்டு வெவ்வேறு சூழ்நிலைகளிலே அவர்கள் ஆங்கிலத்தைக் கற்றார்கள். என்பதை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனாலேதான் பிற்காலத்தில் தென் தமிழ்
நாட்டு எழுத்தாளர்களைப் பார்க்கிலும் ஈழத்து எழுத்தாளர்கள் கூடுதலாக
ஐரோப்பிய இலக்கியங்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றின் தாக்கத்தில் தங்களது
இலக்கியங்களை- படைத்தார்களில்லை- செய்தார்கள். இதிலே முக்கியமான ஒரு
விஷயம் என்னவென்றால், இந்த 'தேசிய் இலக்கியம்' என்ற கோஷம் 1960ம் ஆண்டு
முன்வைக்கப்படுகிறது, முற்போக்கு எழுத்தாளர்களால். அதுவும் மரகதம்
சஞ்சிகையில்தான் அது முதலில் முன் வைக்கப்பட்டது. இந்த சிந்தனையை முன்
வைத்தபோது தேசிய அடையாளங்கள் சொல்லப்படவில்லை. சொல்லப்பட்டது இந்திய
எதிர்ப்பு அடையாளங்கள்தான். இந்திய எதிர்ப்பு அடையாளங்கள்தான் தேசிய
அடையாளங்கள். அது எங்கள் சிந்தனையிலே ஏற்பட்ட தவறு. அந்த இந்திய விரோத
தேசியக் கருத்துக்கள் சுத்த சுயம்புவாக சிங்களக் கருத்துக்கள். ஏனென்றால்
சிங்களர்கள் எப்போதுமே வடக்கிலிருந்து இந்தியா தங்கள் தோள் மீது ஏறி
எங்களை அடிமைப்படுத்தப் பார்க்கிறார்கள் என்று ஒரு அச்ச உணர்வுடனேயே
வாழ்ந்தார்கள் சிங்கள இனத்தைப் பற்றி சொல்லும் போது 'A majority lived
with a minority complex" என்று சொல்வார்கள். அதுதான் அவர்களை,
அவர்களுடைய அரசியலை, எல்லாவற்றையும் வழிநடத்துகிறது. உங்களுக்குத்
தெரியுமா, 1956ல் தனிச் சிங்களம் சட்டமியற்றப்படுகிற வரையில், தேசிய
சிங்கள நாடக மரபு என்ற ஒன்றிருந்ததிலலை. அதற்குப் பிறகுதான்
வனமே,சிங்கபாகு போன்ற நாடகங்கள் மூலம் தேசிய நாடக மரபை சரத் சந்திரா
உருவாக்கிக் கொடுக்கிறார். அந்த எழுட்சிகள், அந்த அர்ப்பணிப்புக்கள் அந்த
மொழியையும், அந்த மொழி சார்ந்த கலை இலக்கிய உருவங்களையும் முன்னெடுத்து
செல்ல வேண்டும் என்ற அக்கறைகள் சிங்களர்கள் மத்தியில் இருந்தது போல
தமிழர்கள் மத்தியில் இருக்கவில்லை. அப்படி இல்லாதது போனதற்குக் காரணம்,
ஆங்கிலத்தை கும்பிட வேண்டும் என்ற நமது மனோபாவம். இந்த முற்போக்கு ஆசான்
நிலை கைலாசபதிக்கும், சிவத்தம்பிக்கும் கிடைத்தற்கு முக்கிய காரணம்
அவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்கள். டொமினிக், டேனியல் போன்றவர்களுக்கு
ஆங்கிலம் தெரியாது. இந்தக் complexities எல்லாவற்றையும் மறந்து விட்டு
மிக எளிமையாக, 'கைலாசபதி வந்தார், குந்தினார், உடனே இலங்கை எழுத்தாளர்கள்
எல்லாறையும் பிடிச்சு எழுதச் சொன்னார்' என்பது சரியில்லை. No. இந்த
டேனியல், ஜீவா ஆகியோருடைய எழுத்துக்களுக்கு எப்போதுமே கைலாசபதி
முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை, அவர் ஆசிரியராக இருந்த காலத்தில். இந்த
உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுதான் வரலாறு எழுதப்படுகிறது. அதுதான் என்
மன வருத்தம்
மாலன்: தினகரனில் கைலாசபதியின் பணியைப் பற்றிப்பேசுகிற போது, ஒரு சமயம்,
ஆங்கில இலக்கியத்தின் வகைகளை அறிமுகப்படுத்துகிற முறையில், கைலாசபதி
கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். நான் விரும்பும் நாவலாசிரியர் என்ற
தொடரை அவர் தினகரனில் வெளியிட்டார். இலங்கையில் பிரபல எழுத்தாளர்கள்
தங்களுக்குப் பிடித்த கதாசிரியர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்.
கைலாசபதியே தான் ஒரு இடதுசாரியாக இருந்த போதும், ஜேம்ஸ் ஜாய்ஸ்
பற்றித்தான் எழுதினார். சிவத்தம்பி கோல்ட்வெல் பற்றி எழுதினார். கே.எஸ்.
சிவக்குமாரன் டிக்கன்ஸ் பற்றி எழுதினார். நீங்கள் ஆல்பட்டோ மொரோவியா
பற்றி எழுதியதாக ஞாபகம். எனவே கைலாசபதி, தன்னுடைய அரசியல் சார்புகளை
முன்னிறுத்துவதற்குப் பத்திரிகையைப் பயன்படுத்துவதை விட இலக்கியக் கல்வி
தரும் விதமாகப் பத்திரிகையை நடத்தினார் என்பதுதானே உண்மை?
எஸ்.பொ: சரியானதொரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள். கைலாசபதி தினகரனை விட்டு
வெளியேறும் வரையில் தன்னை மார்க்சிஸ்ட் என்றோ, அன்றேல், சோவியத் சார்பு
எழுத்துக்கள்தான் எங்களுக்கு வெளிச்சம்தரும் என்றோ, ஒரு கோட்பாட்டைத்
தினகரன் மூலம் பிரசாரம் செய்தது கிடையாது. அது மட்டுமல்ல, கைலாசபதியின்
ஊழியத்தின் மீது நான் எவ்வளவு விமர்சனங்கள் கொண்டிருந்த போதிலும்,
பிற்காலத்தில் தினகரனை, ஒரு விசாலமான, ஜனநாயகமான, பலருடைய
கருத்துக்களுக்கும் இடமளிக்கக் கூடிய கருத்துப் பரிவர்த்தனைக்கு நிரம்ப
இடம் கொடுக்கக் கூடியதான ஒரு போக்கினை உருவாக்கினார் என்றே சொல்வேன்.
அந்தப் போக்கின் அடையாளமாகத்தான் நான் விரும்பும் நாவலாசிரியர்கள் என்ற
தொடர் வந்தது. ஆங்கில எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமல்ல மலையாள எழுத்தாளர்
தகழியைப் பற்றியும் எழுதினார்கள். நான் ஆல்பர்டோ மொராவியாவைப் பற்றி
எழுதியதற்குக் காரணம் யுத்ததிற்குப் பிந்திய இத்தாலிய இலக்கியத்திலே,
டி.எச். லாரன்ஸிற்குப் பிறகு பாலியல் விவகாரங்களை மிக நேர்மையாக எழுதி
சர்ச்சைக்குரிய ஒரு எழுத்தாளராக அவர் இருந்தார். ஆங்கிலயே
எழுத்தாளர்களுக்கும் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் இடையே உள்ள
வித்தியாசத்தைக் காட்டுவதற்காக சிலர் ஏர்னெஸ்ட் ஹெம்மிங்வே போன்ற
அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றி எழுதினார்கள்.
ஆனால் கிட்டத்தட்ட கைலாபதி தினகரனை விட்டுப் போகும் நேரத்தில், இலக்கியத்
தலைமைத்துவத்தை, இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட்கள்,
மார்க்சிஸ்ட்களிலும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர்
முன்னெடுக்கிறார்கள் என்பதை இனக் கண்டு கொண்டார். இனம் கண்டு கொண்டதனால்,
அவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். இந்த
முக்கியத்துவம் கூட படைப்பாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்
அல்ல. படைப்பாளிகள் என்றால் அந்தக் கட்டத்திலே, என்.கே.ரகுநாதன்,
டேனியல் ,ஜீவா இந்த மூன்று பேரையும் சொல்ல முடியும்.. ஆனால், சில்லையூர்
செல்வராசன், காவலூர் ராஜதுரை, கா.சிவத்தம்பி, எம்.எம்.ஷமீம் போன்றவர்களை
ஒரு பின்னணியாக வைத்துக் கொண்டு நோட்டங்கள் பார்த்தார். அதிலே ஒன்றுதான்
மு.வ.நாவலாசிரியரா என்ற கேள்வியும் விவாதமும்.
இந்தக் கட்டத்திலே தேவையில்லாமல் இரண்டு பேர் இலங்கைக்கு வந்தார்கள்.
ஒருவர். பகீரதன். மற்றவர் விஜயபாஸ்கரன். பகீரதன் ஒரு உணர்ச்சி வேகத்தில்
தெரியாத்தனமாக வாயைக் கொடுத்துதான் அகப்பட்டுக் கொண்டார். அந்த
சூழ்நிலையை ஏற்படுத்தியவன் நான். "நீங்கள் சந்தாப் பிரிக்க மட்டும்
வந்துடுவீங்கள், எங்களுடய புதிய எழுத்துக்களின் வலிமையை அங்கீகரிக்கவோ,
கண்டு பிடிக்கவோ உங்களால் ஏலாது" என்று நான் சொல்ல, அந்த கணத்தின்
அழுத்தத்தில் 'பத்து வருஷம் பின் தங்கிவிட்டீர்கள்' என்று பகீரதன்
தடலாடியாக ஒரு போடு போட்டர். விஜயபாஸ்கரன் அதை மறுத்தார். இந்த சர்ச்சை
இரண்டு தன்மைகளைக் கொண்டது. ஒன்று: இந்தியாவிற்கெதிரான பிரசாரம்.
இரண்டாவது சுதேசிய எழுத்தாளர்களை ஒரு அணி திரட்டக் கூடிய கோஷம். இந்த
இரண்டையும் உள்வாங்கிக் கொண்டு அந்தக் கட்டத்திலேதான் கைலாசபதி ஒரு நிலை
எடுத்து அந்தப் பக்கம் சாய்கிறார். இடதுசாரிகள் பக்கம் சாய்கிறார். அந்த
சரிவு கூட எஜமானர்களுக்குப் ப்ரீதி செய்யும் ஒரு முயற்சிதான். ஏன்
பப்ரீதி என்றால், தென்னிந்தியாவிலிருந்து தமிழ் பத்திரிகைகளும் நூல்களும்
வராவிட்டல், தாங்கள் பிரசுரிக்கிற பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும்
ஒரு மார்க்கெட் இருக்கும் என்பதுதான். அவருடைய சிந்தனை முழுக்க வியாபாரம்
பற்றியதாக இருந்தது. அந்த வியாபாரத்திற்கு ஊறு செய்யாத எந்த சிந்தனைகளும்
முதலாளிகளை உசுப்பமாட்டாது. அதுதான் நடந்தது.
மாலன்: அப்படியானால் கைலாசபதியினுடைய ஆக்க பூர்வமான பங்களிப்பு எதுவம்
இல்லை என்று சொல்கிறீர்களா?
இதற்கான விடையும், உரையாடலின் மற்ற பகுதிகளும் அடுத்த இதழில்...