தமிழ்ப் புத்தாண்டும், உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையும்

13 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 6, 2009, 7:59:09 AM1/6/09
to
தமிழ்ப் புத்தாண்டும், உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையும்
---------------------------------------------------

உலகத்தில் மாற்றம் என்பதே மாறா இயற்கை. ஓர் இனம், அவ்வினத்தின் மொழி,
பண்பாடு வாழ அறிவியல்நோக்கில் மாற்றிக் கொள்வது மிகு பயன்கள் விளைத்து
காலமெல்லாம் உதவும்.

சென்னை மௌண்ட் ரோட் மாறி அண்ணாசாலை ஆகிவிட்டது. மும்பை, பெய்ஜிங், சென்னை
- என்றெல்லாம் புதுப்பெயர்கள் அரசுகளால் தோற்றுவிக்கப்பட்டவை தாம். ஒரு
சிலர் மவுண்ட் ரோட் என்று பேச்சுவழக்கில் சொன்னாலும், அரசாங்கம்
அறிவித்ததால் பெருவழக்காக இன்று அண்ணாசாலை, சென்னை, பெய்ஜிங், ....

அபிதான சிந்தாமணியில் தமிழ் மாதப் பெயர்களுக்கு வரும் கதையைப் பாருங்கள்.
இக்காலத்துக்கு ஒவ்வாமை தெளிவாகத் தெரிகிறது. எனவே, திமுக, ஜெயலலிதா
அவர்களின் அதிமுக இரண்டுமே தமிழ்ப் புத்தாண்டு அதிகார பூர்வ
மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டனர். செல்வி. செயலலிதா தமிழ்ப் புத்தாண்டு
மாற்றத்தை எதிர்க்கவில்லை அல்லவா? தொல்துறை அறிஞர் எஸ். ராமச்சந்திரன்
சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பழைய சான்றுகள் கொடுத்துக்
கட்டுரை வரைந்துள்ளார். தினமணி நாளிதழில் தமிழின் நவ புத்தாண்டு
பற்றியும் செய்தி வந்தது (பிற்சேர்க்கை கொடுத்துள்ளேன்). நாம் எப்படிக்
கொண்டாடினாலும் பரவாயில்லை, அரசு அறிவித்ததால் பொங்கல் தமிழர்
திருநாளுக்கும் நவீனப் புத்தாண்டு என்ற தகுதி கிட்டிவிட்டது.

அரசு அறிவிப்பால் என்ன பயன்?
(1) மவுண்ட் ரோட் > அண்ணா சாலை
(மவுண்ட் ரோட் புனித தோமையர் குன்றுக்குச் செல்லுவதற்காக வெள்ளை
ஆட்சியர்கள் வைத்த பெயர்).

(2) யூனிகோட் வளர்ச்சி தாங்கள் நேரில் கண்டதுதான். யாஹூ குழுமங்கள் மாறி
புதிதாய் கூகுள் குழுமங்கள் ஆகிவிட்டன.
இன்று கூகுள் குழுக்களில் மட்டுநர்கள், நாட்டாமை ஐயாக்கள், ... என்று
எத்தனை வியத்தகு வளர்ச்சி!

(3) மலேசியாவில் தொடங்கிய எழுத்துச் சீர்மை, றா, ணா, ளை, லை, ... போன்ற
12 எழுத்து வடிவங்களை ஈரோட்டுப் பெரியார் பிரபலப்படுத்தினார். முதலில்
காரைக்குடி சொ. முருகப்பா அச்சிட்டார்கள், பின்னர் தான் பெரியார்.
அப்போதும், பெரியார்
பக்தர்கள் - தமிழ்ப் புலவர்கள் பலர் - கி.ஆ.பெ. விசுவநாதம், ... -
போன்றோர் எழுத்தின் வரிவடிவைத் தொடவேண்டாம்,
தொட்டால் ஆபத்து, ... என்ற பாணியில் பேசியும் எழுதியும் தான் வந்தனர்.
இருந்தாலும் டெல்லியில் சாலை இளந்திரையன், வா. செ. குழந்தைசாமி, ...
போன்றோர் நல்லாலோசனையின் பேரில் எம்ஜியார் அவர்கள் ஒரு ஜி.ஓ
வெளியிட்டார். தானாய் பாடபுத்தகங்கள், பத்திரிகைகள், ... மாறின. இப்போதைய
இளைய தலைமுறையினர் பலருக்கும் பழைய 12 எழுத்து வடிவங்கள் அறியார் ஆயினர்.
தமிழின் பெரிய வளர்ச்சியல்லவா இது?

(4) தமிழ்ப் புத்தாண்டு மாற்றத்தைவிட ஏழை, பாழை, பணக்காரர் (வெறும்
இங்லிபீசு, இந்தி, படிப்போர்), முதியோர்
கல்வியில் தமிழ் பயில்வோர், தமிழை வைத்து வருமானம் செய்யாமல் வேறு
மாநிலங்கள், மத்தியகிழக்கு, மேலை நாடுகளில் ஊழியம் புரிவோர் குழந்தைகள்,
தென்னாப்பிரிக்கா, மலாயா, மொரீசியஸ், ... போன்ற நாடுகளில் தமிழ் பயின்று
தேவாரம், நாலாயிரம், திருப்புகழ், வள்ளலார், பாரதி, பாரதிதாசன், ....
படிக்க விரும்புவோருக்கு அரசு செய்ய வேண்டிய முக்கியமான
செயல் ஒன்றுண்டு.

அது, உ/ஊ உயிர்மெய்களை உடைத்தும் எழுதலாம் என்ற ஒரு ஜி. ஓ (government
order). வா. செ. கு., ஐராவதம், ... போன்றோர்
அதை வாங்கித் தருதல் வேண்டும். மலையாளத்தில் அதிகாரபூர்வமாக இன்று பாட
புஸ்தகங்களில் எல்லாம் உ/ஊ உயிர்மெய் உடைத்துப் பிரித்து எழுதுவதை
நீங்கள் அறிவீர்கள். உ/ஊ உயிர்மெய்களைப் பிரித்து எழுதுவதால் மலையாளமோ,
தமிழோ கெட்டுவிடாது.

பக்குவமாக, காலம் கனிந்துவரும்போது, முதல்வர் ஒருவர் இடவேண்டிய அரசாணை
இது. தேநீர்க் கோப்பையில் புயல் என்னுமாப்போல் சில பழமைவாதியர்
தீக்குளிப்பு, அதுஇது என்பர். ஆனால், தமிழ் படிப்பின், எழுத்தின்
நெடுங்கால வளர்ச்சியைக்
கணக்கில் எடுத்து ஒரு வருங்கால முதல்வர் (செயலலிதா, இசுடாலின், சிறுத்தை
திருமா, இராமதாசு, வைகோ, விசயகோந்து,
... அல்லது அவர்கள் பிள்ளைகள்) உ/ஊ உயிர்மெய் பிரித்தெழுதலை,
(1) எம்ஜியாரவர்கள் கொடுத்த பெரியார் எழுத்துப்போல்.
(2) மௌண்ட் ரோட் > அண்ணா சாலை ஆனாற்போல்
(2) கலைஞரின் புரட்சி நவத் தமிழ்ப் புத்தாண்டு (தமிழர் திருநாளாகிய பொங்கல் அன்று)
ஒரு ஜி.ஓ வெளியிடவேண்டும்.

மேலும், தமிழ் வளர அரசு செய்ய வேண்டிய செயல்கள் பற்றின என் குறிப்புகள்:
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html

உ/ஊ உயிர்மெய்களை உடைத்தால் பயிற்றுவதும், பயில்வதும், படிப்பதும்
தமிழின் எளிமையைக் காட்டுவதை கண்ணதாசனின் கோவைப் பாட்டை அவ்வாறு
அச்சிட்டுக் காட்டியுள்ளேன். பார்த்தும் படித்தும் அருள்க!

தமிழ் அறிஞர்களுக்கும், தினமணி, தினமலர், விடுதலை, காலச்சுவடு, ... போன்றவற்றிலும்
கட்டுரை எழுத ஆவல். பார்ப்போம்.

அன்புடன்,
நா. கணேசன், PhD
நாசா ஜான்சன் விண்மையம்
அமெரிக்கா

http://tamilmanam.net
&
http://nganesan.blogspot.com

ஜனவரி 12, 2008 - தினமணி நாளிதழ்:

"தைப் புத்தாண்டு" பிறந்த கதை!

தமிழறிஞர்களின் 87 ஆண்டு கனவு நனவாகிறது.

சென்னை, ஜன. 12: இப்போது நடைமுறையில் உள்ள தமிழ் ஆண்டுகள் "பிரபவ' முதல்
"அட்சய' வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை.

ஆண்டுகளைக் குறிக்கும் இந்தப் பெயர்களின் பின்னணியில் உள்ள கதை, தமிழ்
மண்ணுக்குப் பொருந்துவதாக இல்லை என்ற கருத்தும் தமிழறிஞர்களிடம்
நிலவுகிறது.

எனில், தமிழர்களுக்கென புதிய ஆண்டு முறை குறித்த ஆய்வு 1921-ம் ஆண்டிலேயே
தொடங்கிவிட்டது. அப்போது, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தனித்தமிழ்
அறிஞர் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள்,
புலவர்கள் தமிழ் ஆண்டு குறித்து ஆராய்ந்தனர்.

இக்கூட்டத்தில், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், நாவலர் ந.மு.
வேங்கடசாமி நாட்டார், சைவப் பெரியார் சச்சிதானந்தம், கா. சுப்பிரமணியப்
பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், கா. நமச்சிவாய முதலியார் உள்ளிட்ட
500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், புலவர்கள் பங்கேற்றனர்.

அதில், திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டுக் கணக்கைப் பின்பற்றுவது என
முடிவு செய்யப்பட்டது. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்ற வரலாற்று
கருத்து உள்ளது. அதன் அடிப்படையில் 31 ஆண்டு கூட்டப்படுகிறது.
உதாரணத்துக்கு, தற்போதைய 2008-ம் ஆண்டுடன் 31 ஆண்டைக் கூட்டி, 2039 என்று
திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படுகிறது.

படிப்படியான முன்னேற்றம்: 1921-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முதல்
முடிவுக்குப் பின்னர் தமிழறிஞர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பிலும் இது
தொடர்பான விவாதம் நீடித்தது.

இந்தச் சூழலில் 1935-ம் ஆண்டு நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள்
நிகழ்ச்சியில் மறைமலை அடிகள் இந்த முடிவை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
அப்போது முதலே பல்வேறு தமிழ் அமைப்புகள் திருவள்ளுவர் ஆண்டைக்
கடைப்பிடிக்கத் தொடங்கின.

அதன் பின்னர், பல்வேறு நிலைகளைக் கடந்து 1971-ம் ஆண்டில் தமிழக அரசின்
நாட்குறிப்பேடு ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் ஆண்டாகக்
கடைப்பிடிக்கப்பட்டது.

1972-ம் ஆண்டில் தமிழக அரசின் அரசிதழ் அறிவிப்பில் திருவள்ளுவர் ஆண்டு
நடைமுறைக்கு வந்தது. 1981-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் அனைத்து
ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் ஆண்டாக நடைமுறைக்கு வந்தது. இதன்
பின்னரும் திருவள்ளுவர் ஆண்டு ஏட்டளவில் நடைமுறையில் இருந்தாலும்,
சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக நடைமுறையில் இருந்து வருகிறது.

நாள்காட்டி உருவாக்கம்:

தமிழக அரசின் தமிழகப் புலவர் குழு உள்ளிட்ட அமைப்புகள் தை முதல்நாளை
அடிப்படையாகக் கொண்டு முறைசெய்து புதிய நாள்காட்டியை வடிவமைத்தன.

இப்போது தமிழ், தமிழர் தொடர்பான பல்வேறு விழாக்களில் இந்த நாள்காட்டியை
இலவசமாக வழங்கி வருவதாக தமிழ்க் கலை அறிவியல் மன்றத்தின் நிறுவனர் வ.
வேம்பையன் தெரிவித்தார். இந்தச் சூழலில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை
நவீன உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான "சென்னை சங்கமம்'
கலைவிழாவை தொடங்கிவைத்தபோது முதல்வர் கருணாநிதி இதை அதிகாரப் பூர்வமாக
அறிவிக்கப் போவதாகத் தெரிவித்தார். இது தமிழறிஞர்கள் மத்தியில்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வெளியிட்ட தகவலை அடுத்து தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக
அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து தமிழறிஞர்களின் 87 ஆண்டு கனவு நனவாகிறது.

நன்றி: தினமணி

Reply all
Reply to author
Forward
0 new messages