"பழகு தமிழ் பயிலரங்கம்"

6 views
Skip to first unread message

Albert Fernando

unread,
Jun 22, 2008, 9:38:26 PM6/22/08
to minT...@googlegroups.com
மொழி: பழகினால்தானே இனிமை தெரியும்!
 
- ரவிக்குமார்.
 
அம்மாவை "மம்மி' என்றும் அப்பாவை "டாடி' என்றும் அழைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர் தமிழ்நாட்டின் பெற்றோர்கள். குழந்தைகளைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தளவிற்கு நர்சரி மோகத்திலும், ஆங்கில மோகத்திலும் ஊறிப்போயிருப்பவர்கள் பெற்றோர்கள்தான். "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது போல், அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச் சொற்களை சென்னையின் பல பகுதிகளிலிருக்கும் குழந்தைகளுக்கும் மாதத்திற்கு இரண்டு முறை சென்று சொல்லிக் கொடுத்து வருகிறார் விஜய் பார்த்திபன் என்னும் தமிழ் ஆர்வலரும் அவரின் நண்பர்களான தமிழ் ஆர்வலர்களும்.
 
வரைகலை பணிபுரியும் விஜய் பார்த்திபன், இதற்காகவே "பழகு தமிழ் பயிலரங்கம்' என்னும் அமைப்பை கடந்த ஏப்ரல் 14 அன்று தொடங்கியிருக்கிறார். இனி தமிழ்ப் பேச்சு... அவரின் மூச்சு...
 

""பஸ், ஸ்டாப்பிங், ரோட், சைக்கிள்... இப்படி நாம் அன்றாடம் பேசும் ஆங்கில வார்த்தைகளையே பேருந்து, நிறுத்தம், சாலை, மிதிவண்டி... என்று தமிழில் பயன்படுத்த குழந்தைகளுக்குச் சொல்கிறோம். அவர்களும் சந்தோஷமாகப் பயன்படுத்துகின்றனர். பெற்றோர்களும் கூட இப்போது ஆர்வமாக இந்தப் பயிலரங்குகளுக்கு வரத் தொடங்கியிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் அடுக்ககங்களில் வாழும் பெற்றோர்கள் கூட அவர்களின் குழந்தைகளோடு எங்களின் இந்தப் பயிலரங்குகளில் பங்கெடுக்கின்றனர்.
 
யாராவது எங்களின் பகுதிகளில் இப்படியொரு பயிலரங்கை நடத்துங்களேன் என்று அழைத்தாலும், நாங்கள் அவர்களின் இடத்தில் சென்று நடத்துகிறோம். இதற்காகவே தமிழ்நாடு முழுவதுமிருக்கும் தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். மாதத்தில் இரண்டாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாம்பலம் பகுதிகளிலிருக்கும் கிட்டு பூங்காவில் இந்தப் பயிலரங்கை நடத்துகிறோம். முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகிலிருக்கும் வரதராஜப் பேட்டை என்னும் குடிசைப் பகுதியிலிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல தமிழில் பேசுவதற்குப் பயிற்சியளிக்கிறோம். இதேபோல் ஒவ்வொரு பகுதிக்கும் நாங்களே நேரில் சென்று பயிற்சியளிக்க இருக்கிறோம்.
 
சிறிது காலத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் நீங்கள் கொச்சைத் தமிழே கேட்க முடியாது.
தமிழ் அன்பர்களின் வீடு, பூங்கா, இப்படி எந்த இடத்திலும் இந்தப் பயிலரங்கு நடக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஏறக்குறைய 25 லிருந்து 50 பேர் வரை கூடுகின்றனர். ஒவ்வொரு சந்திப்பிலும் 20 முதல் 50 ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருகிறோம். இல்லை இல்லை, ஞாபகப்படுத்துகிறோம் அவ்வளவுதான்!
 
ஏனென்றால், இதில் பெரும்பான்மையானவை நமக்குத் தெரிந்ததுதான். செவ்வியல் மொழியாக தமிழ் இருந்தாலும், அன்றாடம் மக்கள் செப்பும் மொழியாகவும் தமிழ் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.
வீட்டிற்கு உள்ளேயும், பொது இடங்களிலும் நமது அன்றாட பயன்பாட்டு மொழியாக தமிழைத் தொடர்ந்து பேசிவந்தாலே போதும். ஏறக்குறைய 200 வார்த்தைகள் வரை தெரிந்தாலே போதும், நமது அன்றாட பயன்பாட்டில் முழுக்க முழுக்க நாம் தமிழில் பேசமுடியும். தமிழர்கள் தமிழில் பேசவேண்டும் என்று முதலில் நினைக்க வேண்டும். அதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.
 
முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கணினிப் பயன்பாட்டில் கூட அவர்களின் மொழியைத்தான் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டுள்ளார்களே தவிர, ஆங்கில மொழியைப் பயன்படுத்தி அல்ல. இந்த உணர்வு தமிழர்களுக்கும் வேண்டும்.
 
அடுத்தமுறை நீங்கள் பேருந்தில் பயணிக்கும் போது, "பாரீசுக்கு ஒரு டிக்கட்' என்று கேட்பதற்குப் பதில், "பாரிமுனைக்கு ஒரு பயணச்சீட்டு' என்று கேட்டுப் பாருங்கள். நடத்துனர் நிச்சயம் கொடுப்பார்.
 
அதேபோல், தானி (ஆட்டோ) திருவல்லிக்கேணிக்கு வருமா? என்று ஓட்டுனரிடம் கேட்டுப் பாருங்கள். முதலில் நீங்கள் கேலி செய்கிறீர்களோ என்று அவர் நினைத்தாலும், அவரும் புரிந்து கொள்வார் உங்களின் நல்ல தமிழின் இனிமையை. பயன்படுத்தினால்தானே தமிழின் இனிமை தெரியும்..'' என்றார் விஜய் பார்த்திபன்.


நன்றி:தினமணி கதிர்.
Reply all
Reply to author
Forward
0 new messages