கப்பலோட்டிய தமிழனும், சிவக்கவிமணியும்!

28 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 10, 2008, 5:17:58 PM8/10/08
to Min Thamizh
தமிழ் இலக்கிய உலகில் தமிழ்ப்பணி ஆற்றியவர்களுள்
  • நெல்லைச் சீமையைச் சேர்ந்த "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரம் பிள்ளையும்,
  • கோவையில் வாழ்ந்த பெரியபுராணம் முழுவதற்கும் விரிவான உரை எழுதிப் புகழுடம்பெய்திய "சிவக்கவிமணி" சி.கே.சுப்பிரமணிய முதலியாரும்
குறிக்கத் தகுந்தவர்கள்.
 
இருவரும் இணைபிரியாத நண்பர்களாகத் திகழ்ந்தனர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஏறத்தாழ "சிவக்கவிமணி" தம் வாழ்நாளில் 50 ஆண்டுகளாக 40 முறை திருமுறைகளைப் பாராயணம் செய்து வந்துள்ளார். "அனேக சங்கடங்களில் கடவுள் இருந்தே என்னைக் காப்பாற்றினார்," என்று கூறுகின்றார். சைவர்களாய் உள்ளோர்களும் சைவர்களாய் வாழ விரும்புவோர்களும் மானுட மக்களாய் வாழ விரும்புவோர்களும் சைவத் திருமுறைகளை நாள்தோறும் இயன்றவரை பூசித்து, நேசித்து, வழிபட்டுப் பாராயணம் செய்து வருதல் வேண்டும். அஃது உடலுக்கும் உயிருக்கும் ஒருங்கே உறுதி செய்யும் ஒரு பெருமருந்தாகும் என்பது சி.கே.சு. அனுபவத்தில் கண்டறிந்த உண்மையாகும். எல்லோரும் திருமுறைகளைப் பாராயணம் செய்து நன்மை அடைய வேண்டுமென்பது சி.கே.சு.வின் அவாவாகும்.

பெரியபுராணம் முழுவதற்கும் உரை எழுதிய சிவக்கவிமணி 1954 ஆம் ஆண்டில் சித்திரைத் திங்கள் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் சுவடிகளைத் திருவடியில் வைத்துப் பூசித்து; யானையின் மேலேற்றி நகர்வலம் செய்வித்து; இரண்டு நாட்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் மகாசபை கூட்டி அரங்கேற்றம் செய்வித்தார் என்பது அவர் வரலாறு சுட்டும் உண்மை.

சிவக்கவிமணி தாமே எழுதிய "பித்தன் ஒருவனின் சுயசரிதம்" என்ற நூலில் தமக்கும் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும் இடையே உள்ள நட்பின் ஆழத்தையும், தொடர்பையும் விரிவாகக் கூறியுள்ளார். அரிய கருவூலமாகத் திகழும் இந்நூலில் காணப்படும் முக்கியமானவற்றை அவர் வாக்கிலேயே காண்பது பொருந்தும்.

 
"என் நண்பர் திரு வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செய்திகளில் கலந்துகொண்டு சில வேலைகளைச் செய்தேன்.
  1. ஸ்ரீஅரவிந்த கோஷ்,
  2. திரு ஜி.சுப்பிரமணிய ஐயர்

முதலான சுதேசி இயக்கத் தலைவர்களுடன் எனக்குக் கடிதப் போக்குவரத்தும் இருந்தது. திரு ஜி.சுப்பிரமணிய ஐயர் அவர்களைக் கோயம்புத்தூருக்கு வரவழைத்துக் கெளரவித்தேன். விபன்சந்திரபால் அவர்களின் பிரசங்கங்களில் நான் மிகவும் ஈடுபட்டுக் கொண்டாடினேன். இவற்றிலெல்லாம் என் மனைவியும் என்னுடன் மிகவும் ஒத்துழைத்து வந்தாள். ஆயினும் அராஜகச் செயல்களில் நான் ஈடுபடவே இல்லை. இருந்த போதிலும், அந்நாள் ஆங்கிலேய அரசாட்சியினர் என்மேல் கண்ணோக்கம் செலுத்தினர். மூன்று வருடகாலம் என் நடவடிக்கைகளைப் போலீசார் கவனித்து வருவாராயினர்.

ஆஷ் துரை என்னும் ஆங்கிலேயர் ஒருவர் தூத்துக்குடி சப் கலெக்டராக இருந்தார். அவர் தூத்துக்குடியில் திரு வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் முயற்சிகளின் பேரில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து நடத்தி வந்தார். அதன்பேரில் வ.உ.சி. அவர்களின் முயற்சிகளாலும் பிரசங்கங்களாலும் ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள் பேரிலும் பொதுவாக ஆங்கிலேயர்கள் பேரிலும் மக்களுக்கு விரோத உணர்ச்சி ஏற்பட்டுப் பரவி வந்தது.

ஆங்கிலேயர்கள் தூத்துக்குடியில் குடியிருக்க அஞ்சிக் கப்பல்களில் போய்த் தங்கி, இரவு நேரங்களில் காலங்கழிக்கவும் நேர்ந்து விட்டது. அதன் பேரில்தான் சர்க்காரிலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஆஷ் துரையை மணியாச்சி சந்திப்பு இரயில் நிலையத்தில் செங்கோட்டை வாஞ்சி ஐயர் என்பவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தம்மையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். ஆகையால் கொலை வழக்குச் செய்ய முடியாமல் போயிற்று. சிலர் கூடிச் சதியாலோசனை செய்ததாகக் குற்ற வழக்குத் தொடரப்பட்டு ஐகோர்ட் நீதிபதிகள் கொண்ட ஸ்பெஷல் பெஞ்சு முன் விசாரிக்கப்பட்டது.

அதில் நீலகண்ட பிரமசாரி முதலிய சிலரை எதிரிகளாக வைத்து வழக்கு நடந்தது. அந்த வழக்கில் முதல் எதிரி நீலகண்ட பிரமசாரி கொடுத்த ஸ்டேட்மெண்டில் பல சங்கதிகள் சொல்லியதுடன் கோயம்புத்தூருக்கு வந்திருந்ததாகவும் என் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியதாகவும், நான் மூன்று ரூபாய் கொடுத்ததாகவும் சொன்னார். அதன் பேரில் சென்னையிலிருந்து இரகசிய போலீசார் வந்து என்னை விசாரித்தார்கள். என் வீட்டையும் சோதனை போட்டார்கள்.

 
  • திரு அரவிந்கோஷ்,
  • லாலா லஜபதிராய்,
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை

முதலிய தேசபக்தர்களின் கடிதங்கள் என் வசமிருந்தன. அவை அவர்கள் கண்ணுக்குப் புலனாகவில்லை. அவற்றை அவர்கள் கைப்பற்றவுமில்லை. அவர்கள் வந்து போன பின்பு அவற்றையும் மற்றும் அனேக கடிதம் முதலிய ஆட்சேபகரமான காகிதங்களையும் தேடி எடுத்துப் பரிகரித்துவிட்டேன்.

அந்தச் சோதனையின் போது என் முதல் மனைவி இருந்தாள். அவள் நடந்து கொண்டது தைரியமான சாதனையாகும். போலீசார் மீண்டும் ஒருநாள் வந்து சோதனைக்காக என் வீட்டை முற்றுகையிட்டுக் கொண்டார்கள். அப்போது நான் கோர்ட்டுக்குப் போயிருந்தேன்.

தெருத் திண்ணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலானோர் உட்கார்ந்துகொண்டு கோர்ட்டுக்கு என்னைக் கூட்டிவர சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை அனுப்பிவிட்டு என் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நான் கோர்ட்டில் வழக்கு நடத்திக்கொண்டிருந்தேன். அதை முடித்துக்கொண்டு வருவதற்குக் கொஞ்சம் தாமதமாயிற்று. இவ்வாறு போலீசார் மீண்டும் சோதனைக்கு வருவார்கள் என்ற சூசனை அன்று காலைதான் ஒருவாறு தெரியவந்தது. நான் திரும்பி வந்தபின் எல்லாம் பார்த்து; ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து; அதுவரையில் பார்த்த சில கடிதங்களை மட்டும் எடுத்துப் போட்டுவிட்டு என் மனைவியிடம் சாக்கிரதையாய் இருக்கும்படி சொல்லிவிட்டுப் போயிருந்தேன்.

போலீசார் வந்தவுடன் என் மனைவி என் வீட்டின் உள் கதவைச் சாத்திக்கொண்டு நான் பார்த்து வைத்த கடிதங்களையும் போலீசார் கைப்பற்றக்கூடும் என்று தோன்றிய பிறவற்றையும் எடுத்துப் பரிகரித்துச் சுட்டெரித்து அப்புறப்படுத்தி விட்டாள். நான் வந்தபின் செய்தி அறிவித்தாள்.

சாதாரணமாக நம் நாட்டில் பெண்களிடம் இவ்விதமான தைரியச் செய்கை காண்பதரிது. போலீசார் இரவு நெடுநேரம் வரை சோதனையிட்டனர். முடிவில் சில புத்தகங்களையும் படங்களையும் மட்டும் கைப்பற்றிப் போயினர். இது நடந்தது 11.8.1914ல். அவர்கள் கைப்பற்றிச் சென்றவை இன்னும் எனக்குத் திருப்பித் தரப்படவில்லை."

இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயரின் தொல்லைக்கு ஆளான வழக்கறிஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு, கோவையில் புகழ்பெற்ற வழக்கறிஞராக ஏறத்தாழ 48 ஆண்டுகள் பணிபுரிந்த சி.கே.சுப்பிரமணிய முதலியார் சிறந்த நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்ததை அறியமுடிகிறது.

சி.கே.சுப்பிரமணிய முதலியார் செய்த உதவிகளைக் கருத்தில் கொண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை தம் மூன்றாவது மகனுக்குச் "சுப்பிரமணியன்" என்றும், தம் மகளுக்குச் சி.கே.சு.வின் மனைவி "மீனாட்சி" பெயரையும் சூட்டினார் என்பதை அறியும் பொழுது இருவரது நட்பின் ஆழத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

வ.உ.சி. பற்றி சி.கே.சு. கூறிய செய்திகளில் அரிய வரலாற்று உண்மை பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. மேலும் வ.உ.சி.யின் சுதேசி இயக்கத்திலும் சுதேசிக் கப்பல் இயக்கத்திலும் சி.கே.சு. ஈடுபட்டிருந்தார். அவர் சிறையிலிருந்த காலத்திலும் பிற்காலத்திலும் இருவரும் நட்புடன் வாழ்ந்து வந்தனர்.

 
இத்தகைய உயரிய குணங்கள் பெற்று, நாட்டுக்கும் நற்றமிழுக்கும் தொண்டாற்றிய இருவர்தம் நட்பு பதிவு செய்யப்படாமல் இருப்பது நியாயமல்ல.
 
ம.சா. அறிவுடைநம்பி
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)
 
 

Narayanan Kannan

unread,
Aug 10, 2008, 6:37:14 PM8/10/08
to minT...@googlegroups.com
உண்மையில் இக்கட்டுரையாளர் வ.வே.சி பற்றி ஒன்றுமே சொல்லவில்லை! அதை
விடுத்து எல்லோரும் அறிந்த ஆஷ் கொலை வழக்கு பற்றியே சொல்கிறார். ஆயினும்
கீழ்க்காணும் வரிகள் சுவாரசியமூட்டுகின்றன. இந்தியப் போரட்ட காலத்தில்
கைப்பற்றப்பட்ட புத்தகங்களை பிரிட்டிஷ் அரசு எங்கு வைத்திருக்கும்?

பிரித்தானிய நூலகத்தில் தேடிப்பார்க்கலாம். வெளிநாட்டில், குறிப்பாக
ஐரோப்பிய காலனி அரசு நாடுகளில் குடியிருப்போர் நேரம் கிடைக்கும் போது
அங்குள்ள நூலகங்களுக்குச் சென்று ஏதாவது பழைய ஆவணங்கள் அகப்படுகின்றனவா
என்று தேடிப்பார்க்கலாம். யார் கண்டார்? ஏதாவது சரித்திரப் புகழ் பெற்ற
ஆவணங்கள் கிடைத்து கண்டெடுத்தவர் புகழ் அடையலாம்.

அதை விடுத்து வெளிநாட்டுத்தமிழர் அனைவரும் இந்த சன் தொலைக்காட்சி எனும்
பீடை பிடித்த மாயை முன் சொக்கிப்போய் உட்கார்ந்து கொண்டு, எந்தவித
இயக்கத்திறனோ, காட்சியமைப்போ, நடிப்போ இல்லாத சீரியல்களை வருடக்கணக்காக
பார்த்துக் கொண்டு பொழுதைப் போக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக ஈழத்தமிழர்கள் இந்திய அரசின் ஒத்துழையாமையைக் குறை
சொல்லிக்கொண்டே தமிழக தொலைக்காட்சிகளின் மாயப்பிடியில் வேண்டுமென்றே
சிக்கிக்கொண்டு வீண் பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டில்
வாழ்வது எவ்வளவு அரிய வாய்ப்பு! என்பதை மறந்து. தன்னைச் சுற்றியுள்ள
வாய்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் அசட்டு சீரியல்களைப் பார்த்துக் கொண்டு
பொழுது போக்குவதைக் காணும் போது நெஞ்சு பொறுக்குதில்லை!

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages