பழனியாண்டவர் பேரில் புகையிலை விடுதூது

26 views
Skip to first unread message
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted

N. Ganesan

unread,
Aug 13, 2006, 5:51:50 PM8/13/06
to CTa...@googlegroups.com
சீனிச்சர்க்கரைப் புலவர் (கி.பி. ~1800)
இயற்றிய
புகையிலை விடுதூது

பதிப்பாசிரியர்:
மகாமகோபாத்தியாய தாக்‌ஷிணாத்திய கலாநிதி
உ. வே. சாமிநாதையரவர்கள்,
பதிப்பாண்டு: 1939

[திருமாலுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

சீர்தந்த மாநிலத்திற் செல்வப் பயிர்தழைப்ப
நீர்தந்த பச்சை நிறங்கொண்டே - ஏர்தந்து

கார மணைந்து கனநீரிற் கண்வளர்ந்து
பாரை மணந்து படியளந்து - சாரமுடன்

எல்லார்க்கு மாலா யிசைந்து பரந்தோங்கிப்
பல்லா யிரவடிவம் பாரித்தே - அல்லாமல்

அம்புகையிற் சாரங்க மான தனுவெடுத்துத்
தம்ப வரிவடிவந் தானாகிச் - சொம்புடனே

[சிவபெருமானுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

தோலுரியும் போர்த்துத் துலங்கவன லேந்திநிறை
பாலத்து வெண்ணீறு பாலித்தே - கோலமுள்ள

பாசடையுங் கொண்டு பசுங்கொழுந்து பாலுகந்து
காசடையா ருக்கருமை காண்பித்துக் - காசினியில்

அம்பலத்துண் மேவிநிறைந் தங்காடி நின்றுநல்ல
தம்பமெனப் பித்தேறித் தாணுவாய் - இன்பமுடன்

நன்பிரமை கொண்டு நலத்தினா னற்பதங்கொண்
டன்பர்சுமை தாங்க வரனுமாய் - பண்பாய்

[பிரமதேவருக்கும் புகையிலைக்கும் சிலேடை]

மறைவாய் வளர்ந்து மனுக்களுண்டு பண்ணி
நிறைவாய் நாலுமுக நேர்ந்து - பிறர்தேறா

வாசவனஞ் சேர்ந்து மலர்க்கொம்பு தாங்குதலாற்
றேசு தரும்பிரம தேவனுமாய் - நேசமுள்ள (10)

முத்தே வருமாய் முளைத்தெவருங் கொள்ளவரும்
சித்தே புகையிலையே செப்பக்கேள் - வித்தகமாய்

[தமிழுக்கும் புகையிலைக்கும் சிலேடை]

ஏடதனை யாய்ந்தே யிலகுபதி கஞ்சேர்த்துப்
பாடமது போற்றிமொழி பன்னியே - கூடுபல

கோவை புனைந்து குறித்து வளமடல்சேர்
பாவுசந்த மேவிப் பதங்கொண்டு - சேவைபெறக்

கட்டமைந்து நற்பரணி கண்டுவிலைக் கானபின்பு
செட்டமைந்து பின்மதுரஞ் சேரவே - மட்டில்லாத்

தாவில்பல வித்தையுடைத் தாகித் தமிழ்போல
நாவில் விளையாடு நாமகளாய்ப் - பூவுலகில்

[புகையிலையின் வரலாறு]

வந்த புகையிலையுன் மாமகத்து வங்களைநான்
எந்த விதமென் றியம்புவேன் - விந்தையதாய்

மூவரொரு வர்க்கொருவர் முன்னொருகால் வாதாகித்
தேவ சபையகத்துச் செல்லவே - மேவிவிண்ணோர்

உங்கள்விவ கார முரைப்போம்பின் னாகவென்று
தங்குமொவ்வோர் பத்திரம தாகவே - அங்கவர்பாற்

கூவிளமும் பைந்துளவும் கொள்ளும் புகையிலையும்
தாவளமாய்க் கைக்கொடுத்துத் தாமனுப்ப - ஆவலுடன்

பின்மூவ ரந்தப் பெருஞ்சபையில் வந்தவுடன்
முன்கொடுத்த பத்ர முறைப்படியே - அன்பினுடன் (20)

தாருமென்ற போதிற் சதாசிவனார் பத்திரமும்
கார்வண்ணர் பத்திரமுங் காணாமல் - நேரான

கங்கை யிடத்துங் கவின்பாற் கடலிடத்தும்
பொங்குமலை தான்கொண்டு போகவே - இங்கிதஞ்சேர்

ஓகையுட னேபிரம னுற்ற நமதுபத்ரம்
போகையிலை யென்று புகன்றுடனே - வாகுகலை

வாணிதிருக் கையினின்றும் வாங்கியிந்தா வென்றுவைக்க
நாணியிரு வோரு நயவாமற் - பூணும்

வழக்கிழக்கச் செய்தந்த வானோர்முன் வெற்றி
விளக்கவுன் னாமம் விளக்கத் - துளக்கமொடு

ப்ரம்மபத்ர மென்றெவரும் பேசவே வந்துதித்த
தன்மப் புகையிலையே சாற்றக்கேள் - இன்னம்

[புகையிலையின் பெருமை]

குடியாத வீடு குணமாகா தென்றும்
விடியாதென் றுங்கூறல் வீணோ - படிமேற்

குடியா தவனாநீ கொற்றவன்கா ணுன்னைக்
குடியா தவன்சா குடியே - வடிவாக

எட்டுமா சித்திதரு மேகசித்து மூலிகைக்கும்
இட்டமா நீகலப்ப தில்லையே - திட்டமுடன்

வாடைப் பொடிகதம்ப மானவெல்லா முன்னுடைய
சாடிப் பொடிக்குச் சரியுண்டோ - நாடியே (30)

கற்றுத் தெளிந்த கனப்ரபல வான்களுமுன்
சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ - மற்றொப்பில்

ஆகாய முன்புகைபோ லானமையா லேயரனார்
ஆகாய மேகாய மாயினார் - வாகான

தாம்பூல நாவுக்குச் சாரமது தானுமுன்றன்
காம்பி லடக்கமன்றோ கட்டழகா - வீம்பாகப்

பூராய மான பொருளை வெளிப்படுத்தும்
சாராயந் தானுனக்குத் தம்பியோ - நேரா

அதனகா மீசுரமா யார்க்குமயல் பூட்டும்
மதனகா மீசுரமச் சானோ - விதனமற

மோகப் பயிராய் முளைத்த புகையிலையே
தாகப் பயிரான சஞ்சீவீ - ஆகத்தின்

அச்ச மகற்றுவிக்கு மாண்பிளைநீ யுன்றனக்கோர்
அச்சமகத் துக்குவர லாகுமோ - விச்சையுடன்

காரமுங் காயக் கடுமையுமுண் டாமுனக்கோர்
ஈரவெங்கா யப்பகையு மேதையா - கூரும்

தகையிலையன் றோதெரியுந் தானுன் னருமை
புகையிலையே தெய்வப் பொருளே - சகமேவும்

பூத்தான மாகப் பொருந்துதிரு மாதுவளர்
பூத்தான மான புகையிலையே - பார்த்தாய்ந்து (40)

நண்ணிய மாதவத்தோர் நாடோறுந் தேடுகின்ற
புண்ணிய மான புகையிலையே - எண்ணியெண்ணிக்

கொத்தடிமை யாக்கிக் குடிகுடி யாண்டுவரும்
புத்தமுத மான புகையிலையே - வர்த்தனைசேர்

லாபமும் வர்த்தகர்க்கு நம்புவிடர் கட்குச்சல்
லாபமுங் காட்டு நயக்காரா - சோபமுடன்

வெட்டுண்டு பின்னே வெயிலிற் கிடந்தாலும்
கட்டுண்டு வந்ததென்ன காரணங்காண் - தொட்டாற்

குறுகுறுத்துத் தும்முங் குணத்துடனே பின்னும்
கிறுகிறுப்ப தென்ன கெறுவம் - முறுகப்

பகைக்கட்டாய்க் கட்டும் படுசூலைக் கட்டும்
புகைக்கட்டா லோடாதோ போக - நகையாக

முன்பொரும லையை முனிந்துவெகு வாய்மலைபோற்
றன்பொரும லைத்தீர்க்குஞ் சாமியே - அன்பாகப்

பாவியுனை நட்டுப் பலன்காணார் தம்மைமுழுப்
பாவியென்று சொல்வார் பலருமே - நாவினாற்

சொற்காட்டு நல்ல துடிகார ராரையும்போய்ப்
பற்காட்ட விட்ட பழிகாரா - கற்கவென்று

பார்த்திப ரான பரத்தை வயற்குடியார்
போற்றி வளர்க்கும் புகையிலையே - தோத்திரமாம் (50)

காங்கயம் யாழ்ப்பாணங் கானக் கறுப்பனுடன்
பாங்குபெறு குள்ளம் பலவாக - நீங்கா

அழகன் குளமுதலா மானசரக் கெல்லாம்
பழகு முனக்கிணையோ பார்க்கின் - புளகமது

கொண்ட புகையிலையே கொள்ளு மெனதுமயல்
உண்டதனை நின்பா லுரைக்கக்கேள் - வண்டிசைந்த

[பழனியாண்டவர் பெருமை]

பூங்கடப்ப மாலையான் போரசுரர் தங்களுயிர்
வாங்கடப்ப வேலையான் வாலவுருப் - பாங்குபெறு

கந்தன் முருகன்வேள் காங்கேயன் வள்ளிபுணர்
சொந்தமண வாள துரந்தரிகன் - அந்தம்

தருபழனி யூரனெங்கள் சண்முகவேள் வீதிக்
கொருபவனி மாமயின்மே லுற்றான் - வருபவனி

[தூது சென்றுவர வேண்டுதல்]

சேவிக்க யான்போய்த் தெரிசிக்கு மவ்வளவிற்
கோவித்து மாரனம்பு கொல்லவே - ஆவலுடன்

ஆகினே னென்மயக்க மாருரைப்பா ருன்னையன்றி
வாகுபெற நீபோய் வகையாக - ஓகையுடன்

சென்றுரைத்துத் திண்புயமேற் சேர்ந்திலகு பூங்கடப்ப
மன்றல்கமழ் தார்வாங்கி வா. (59)

- சுபம் -

" புகையிலையின் வரலாறாக இப்பிரபந்தத்திலே கூறப்படும்
கற்பனைக்கதை வருமாறு:

ஒருமுறை மும்மூர்த்திகளுள்ளே ஒரு வழக்கு உண்டாயிற்று.
அதனைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் தேவர்கள்
கூடியுள்ள சபைக்குச் சென்று தம் வழக்கை எடுத்துரைத்தனர்.
தேவர்கள் அவற்றைக் கேட்டபின், "உங்கள் வியவகாரத்தைப்
பிறகு கவனித்துக்கொள்வோம்" என்று சொல்லி அம்மூவர்களிடத்தும்
வில்வம், திருத்துழாய், புகையிலை என்னும் இவற்றைக் கொடுத்து
இவற்றை மறுநாள் கொண்டுவரச் சொல்லியனுப்பினர்.

அவர்கள் மூவரும் அங்ஙனமே சென்றனர். சிவபெருமான்பாற்
கொடுத்த பத்திரமாகிய வில்வத்தைக் கங்கையின் அலை கொண்டு
போயிற்று; திருமாலிடம் கொடுத்த திருத்துழாயைப் பாற்கடலிலுள்ள
அலை கொண்டுபோயிற்று. பிரமதேவர் தாம் பெற்ற புகையிலையைத்
தம் நாவிலுள்ள கலைமகளிடத்திற் கொடுத்துவைத்திருந்தார்.

மறுநாள் மூவரும் விண்ணவர் சபைக்கு வந்தபோது தேவர்கள்,
"முன்னே நாம் கொடுத்த பத்திரங்களைக் கொடுங்கள்"
என்று கூறவே சிவபெருமானும் திருமாலும் விழித்தனர்; "எங்கள்
பத்திரங்கள் போயின" என்று அவர்கள் கூறினர். அது கண்டு
மகிழ்ச்சியுற்ற பிரமதேவர் கலைமகளிடத்திலிருந்து புகையிலையை
வாங்கி, "இதோ, எனக்கு அளித்த பத்திரம்" என்று முன்வைத்து,
"மற்றவர்கள் பத்திரங்கள் போயின; என்னுடையது போகையிலை"
என்று கூறினார். அவர் கூற்றில் புகையிலை யென்பதன் மரூஉவாகிய
போகையிலை என்னும் பெயர் தோன்றியது; பிரமதேவரிடமிருந்து
நழுவாமல் அவருக்கு உரியதானமையின் அதனைப் பிரம்ம பத்திரம்
என்று யாவரும் அன்றுமுதல் வழங்கலாயினர். பிரமதேவர் தாம் கூறிய
வழக்கில் வெற்றிபெற்றனர். ஏனை இருவரும் தம் வழக்கிழந்தனர்."


பதிப்பாசிரியர்:
மகாமகோபாத்தியாய தாக்‌ஷிணாத்திய கலாநிதி
உ. வே. சாமிநாதையரவர்கள்,
பதிப்பாண்டு: 1939

வையவலை வைப்பு:
டாக்டர் நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages